search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    வேலைவாய்ப்பிலும், தொழில்துறையிலும் கொரோனா ஏற்படுத்திய மாற்றம் என்ன..?
    X

    வேலைவாய்ப்பிலும், தொழில்துறையிலும் கொரோனா ஏற்படுத்திய மாற்றம் என்ன..?

    • யார் வேண்டுமானாலும், எங்கிருக்கும் நிறுவனத்திற்கு வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்ற புதிய கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது.
    • கொரோனா, ஆரம்பத்தில் சில தொழில்வாய்ப்புகளை முடக்கியது.

    கொரோனாவிற்கு பிறகான வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது?, கூடுதலான வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளதா?, தொழில்துறையிலும் - வேலைவாய்ப்பிலும் கொரோனா ஏதாவது மாற்றத்தை உண்டாக்கி இருக்கிறதா?... இதுபோன்ற பல கேள்விகள் நம்மிடைய எழுகின்றன. இவை அனைத்திற்கும் பதிலளிக்கிறார், பிச்சுமணி துரைராஜ். சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவரான இவர், மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பல ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றியவர். இப்போது, அதை சொந்த முயற்சியாக முன்னெடுத்திருக்கிறார். கூடவே தன்னுடைய அனுபவம் மூலம், நேர்காணலில் வெற்றி பெற வழிகாட்டுகிறார். அவர் தொழில்துறையின் நகர்வு பற்றியும், வேலைவாய்ப்பு குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

    *கொரோனா தாக்கத்திற்கு பிறகான தொழில்வாய்ப்புகள் எப்படி உள்ளன?

    கொரோனா, ஆரம்பத்தில் சில தொழில்வாய்ப்புகளை முடக்கியது. ஆனால் இப்போது தொழில்வாய்ப்புகளை இரு மடங்காக்கி உள்ளது. முடங்கியிருந்த எல்லா துறையும், இப்போது இருமடங்கு - மும்மடங்காக வளர்ச்சி பெற்று, பரபரப்பாக இயங்கி வருகின்றன.

    * எந்தெந்த துறை வளர்ச்சி கண்டிருக்கிறது?

    ஐ.டி.துறை கொரோனா காலத்திலும் சுணங்கவில்லை . அதனால் இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது. அதே போல மெடிக்கல், ஹெல்த்கேர், கட்டுமானம், சுற்றுலாதுறை , ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம், உற்பத்தி துறை, வீடு தேடி பொருள் சேர்க்கும் ஈ-காமர்ஸ் போன்றவை எதிர்பார்த் ததை விட, அதிகம் வளர்ச்சி பெற்றுள்ளன.

    * 'ஒர்க் பிரம் ஹோம்' முறை தொழில்துறையினருக்கும், பணியாளர்களுக்கும் வசதியாக இருக்கிறதா ?

    நேரடியாக பணியாற்றும் அளவிற்கு வசதியாக இல்லாவிட்டாலும், பணி செய்யமுடியாத நிலையில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை சிறப்பாகவே வழங்குகிறது. அதே போல வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளும் (ஜூ ம் கால், டீம் மீட்டிங்) ஐ.டி.பணியாளர்களுக்கு ஏற்ப , முன்னேறி கொண்டே இருக்கிறது.

    * ஒர்க் பிரம் ஹோம் முறையில் இருந்து அவசர அவசரமாக ஐ.டி. துறையினர் பணிக்கு அழைக்கப்படுவார்களா?

    இல்லை. 'ஒர்க் பிரம் ஹோம்' முறையில் இருந்து அலுவலக வாழ்க்கைக்கு மாற குறைந்தது ஓரிரு ஆண்டுகள் ஆகும். நகரங்களில் வாழும் ஊழியர்களை தவிர்த்து, வெளியூரில் வசிக்கும் ஊழியர்களும் ஒர்க் பிரம் ஹோம் முறையையே விரும்புகிறார்கள். 'ஒர்க் பிரம் ஹோம்' முறையில் இருந்து அவசர அவசரமாக அலுவலக வாழ்க்கைக்கு அழைக்கப்பட்டால், அசவுகரியம் காரணமாக ஊழியர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறிவிடுவார்களோ என்ற அச்சம் எல்லா நிறுவனங்கள் மத்தியிலும் நிழலாடுகிறது.

    அதனால் பகுதி-பகுதியாகவே அழைக்கப்படுவர். உள்ளூர் ஊழியர்கள், பக்கத்து ஊர்களில் வசிப்பவர்கள்... இப்படி 100 சதவிகித அலுவலக வாழ்க்கையை எட்ட , 2 ஆண்டுகள் ஆகலாம்.

    * ஒர்க் பிரம் ஹோம் மாதிரியில் சமீபகாலமாக ஆன்லைன் முறையிலேயே நேர்காணல்கள் நடத்தப்படுகின்றன. இதை நடத்துவதும், கலந்து கொள்வதும் சுலபமானதாக இருக்கிறதா ?

    நேரடி நேர்காணல்களை விட, நேர்காணல் நடத்தும் நிறுவனங்களுக்கும், கலந்து கொள்பவர்களுக்கும் இது மிகவும் சுலபமானது. மிக குறைந்த நேரத்திலேயே அதிகமானோரை நேர்காணல் செய்து விட முடிகிறது. அதே போல நேர்காணலில் கலந்து கொள்பவர்களும், ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டே 4 முதல் 5 நேர்காணல்களில் கலந்து கொள்ள முடிகிறது. சொந்த ஊரில் இருந்து நேர்காணல் நடக்கும் நகரங்களுக்கு செல்ல வேண்டிய தேவையும் இல்லை . புதிய இடத்தில் வழி தேடி அலைந்து, டென்ஷனாக வேண்டிய சூழலும் இல்லை . அமர்ந்த இடத்தில் இருந்தே , அமைந்தகரையில் நடக்கும் நேர்காணலிலும் கலந்து கொள்ளலாம். அமெரிக்காவில் நடக்கும் நேர்காணலிலும் கலந்து கொள்ளலாம்.

    முன்பெல்லாம் ஒரு மாதத்திற்கு 300 நபர்கள் வரை நேர்காணல் செய்வதே கொஞ்சம் கடினமாக இருக்கும். இப்போது 3 ஆயிரம் நபர்கள் வரை மிக சுலபமாக ஆன்லைனில் நேர்காணல் செய்துவிடலாம். பல ஐ.டி.நிறுவனங்கள் இந்த வேலையை, அவுட்சோர்ஸிங் முறையில் எங்களிடம் பிரித்து கொடுத்திருக்கின்றன.

    * கொரோனாவினால் நிகழ்ந்த நன்மைகள் என்ன?

    பணிவாய்ப்பிற்கான வரையறையை தகர்த்து எறிந்திருக்கிறது. அதாவது கொரோனாவிற்கு முன்பு சில நிறுவனங்கள் அந்தந்த நகரங்களில் வசிப்பவர்களை மட்டுமே பணியமர்த்தி வந்தது. பிறமாவட்ட, மாநில பணியாளர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா தாக்கத்தினால், ஒர்க் பிரம் ஹோம் முறை இத்தகைய வரையறையை முற்றிலுமாக நீக்கி இருக்கிறது. யார் வேண்டுமானாலும், எங்கிருக்கும் நிறுவனத்திற்கு வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்ற புதிய கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. அதே போல, வெளியூர் பணியாளர்கள் சென்னை , பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களில் வந்து தங்கியிருந்துதான் பணியாற்ற வேண்டிய நிர்பந்தமும் இப்போது இல்லை ஆன்லைன் நேர்காணல் என்ற நிலை உருவாகியுள்ளது.

    * ஆன்லைன் நேர்காணலில் கலந்து கொள்பவர்கள் இழைக்கும் தவறுகள் என்னென்ன ?

    ஆன்லைன்/ஆப்லைன் இவ்விரண்டுமே நேர்காணல்கள்தான். இவ்விரண்டிற்குமே, உங்களை பற்றிய நல்ல - கெட்ட புரிதலை உருவாக்கும் சக்தி உண்டு. அதனால் ஆன்லைன் நேர்காணல் என்று மெத்தனம் காட்ட வேண்டாம். குறித்த நேரத்திற்கு முன்பே ஸ்கைப்/டீம் மீட்டிங்/ ஜூ ம் போன்ற ஆன்லைன் தளங்களில் காத்திருங்கள். நீங்கள் இருக்கும் இடத்தை பிரகாசமாக வைத்திருங்கள். தடையில்லா இணைய வசதி அவசியம். அதே போல தேவையில்லாத போன் அழைப்புகளை தவிர்த்து விடுங்கள். உங்களை நோக்கி கேட்கப்படும் கேள்விகளுக்கு தெரிந்த பதில்களை மட்டும் கூறுங்கள். ஆன்லைனில் தானே நேர்காணல் நடக்கிறது, இணையத்தில் பதில் தேடி விடை கூறலாம் என்பது போன்ற வீண் முயற்சிகளை கைவிடுங்கள். ஏனெனில் பெரும்பாலான தொழில்நுட்பங்கள் நீங்கள் விடைதேடும் முயற்சிகளை கூட கண்டறிந்து கூறிவிடும். அதே போல, இரைச்சல் இல்லாத அமைதியான இடத்தை தேர்வு செய்யுங்கள். இந்த குறிப்புகளை எல்லாம் தவறவிடும்போது தான், தவறுகள் இழைக்கப்படுகின்றன. வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன.

    Next Story
    ×