search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    மிகமிக முக்கியமான ஆட்டத்தில் இந்தியாவை எங்களால் வீழ்த்த முடியும் என்று மிஸ்டர் கன்சிஸ்டன்ட் ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து தோல்வியடைந்ததன் மூலம் இலங்கை, வங்காள தேசம், பாகிஸ்தான் அணிகளுக்கான அரையிறுதி வாய்ப்புக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது.

    வங்காள தேசம் இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வி, ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது ஆகியவற்றின் மூலமாக 7 புள்ளிகள் வெற்றி 5-வது இடத்தில் உள்ளது.

    அடுத்த போட்டியில் இந்தியாவை ஜூலை 2-ந்தேதியும், பாகிஸ்தானை ஜூலை 5-ந்தேதியும் எதிர்கொள்கிறது. உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் இந்தியாவை வீழ்த்திவிட்டால் பாகிஸ்தானை எப்படியும் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்து விடலாம் என அந்த அணி திட்டமிட்டுள்ளது.

    ஆனால் இந்தியாவை எளிதில் வீழ்த்திவிட முடியாது என்று அந்த அணிக்குத் தெரியும். இருந்தாலும் இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி மிஸ்டர் கன்சிஸ்டன்ட் என்று பெயர் எடுத்திருக்கும் ஷாகிப் அல் ஹசன், இந்தியாவை எங்களால் வீழ்த்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஷாகிப் அல் ஹசன் கூறுகையில் ‘‘இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் எங்களுக்கு மிகமிக முக்கியமானது. இந்தியா டாப் அணிகளில் ஒன்று. அவர்கள் சாம்பியன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. ஆனால், நங்கள் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.

    அனுபவம் உதவியாக இருக்கும். ஆனால், அது மட்டுமே முடிவாக இருக்க முடியாது. இந்தியாவை வீழ்த்த வேண்டுமென்றால், நாங்கள் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்தியா உலகத்தரம் வாய்ந்த வீரர்களை பெற்றுள்ளது. அவர்களால் போட்டியை வெற்றி பெற வைக்க முடியும். நாங்கள் எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அதற்கான அனைத்தும் எங்களிடம் உள்ளது’’ என்றார்.
    உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் ஆரோன் பிஞ்ச் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரோன் பிஞ்ச் 115 பந்தில் சதம் அடித்தார். சதம் அடித்த அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

    2015 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக ஆரோன் பிஞ்ச் சதம் அடித்திருந்தார். தற்போது மீண்டும் இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்துள்ளார். உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகளில் மட்டுமே ஆரோன் பிஞ்ச் விளையாடியுள்ளார். இரண்டிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
    லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு 286 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    இருவரும் தொடக்க முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வார்னர் 52 பந்திலும், ஆரோன் பிஞ்ச் 61 பந்தில் 50 அரைசதம் அடித்தனர். 22.4 ஓவரில் 123 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. டேவிட் வார்னர் 53 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அடுத்து பிஞ்ச் உடன் கவாஜா ஜோடி சேர்ந்தார். கவாஜா 23 ரன்னில் ஆட்டமிழந்த போதிலும், பிஞ்ச் சிறப்பாக விளையாடி 115 பந்தில் சதம் அடித்தார். ஆனால் சதம் அடித்த அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 35.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்திருந்தது.

    87 பந்துகள் மீதமிருந்ததால் ஆஸ்திலேியா எளிதாக 300 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேக்ஸ்வெல் 12 ரன்னிலும், ஸ்மித் 38 ரன்னிலும், ஸ்டாய்னிஸ் 8 ரன்னிலும் வெளியேற ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் அப்படியே படுத்துவிட்டது.



    விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 27 பந்தில் 38 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்த்துள்ளது. கடைசி 10 ஓவரில் ஆஸ்திரேலியா 70 ரன்கள் மட்டுமே அடித்தது. இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும் ஆர்சர், மார்க் வுட், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 286 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.
    காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயத்திலிருந்து குணமாகி மீண்டும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
    மான்செஸ்டர்:

    உலகக்கோப்பை கிரிக்கெட்டின் 22-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை ஏதிர்கொண்டது. அந்த போட்டியின்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், தான் வீசிய 3-வது ஓவரின்போது கால் தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக ஆட்டத்தின் பாதியில் வெளியேறினார். இதன் பின்னர் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு ஏதிராக போட்டியிலும் புவனேஷ்வர் குமார் பங்கேற்காமல் அவருக்கு பதிலாக முகமது ஷமி களமிறக்கப்பட்டார். அந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஷமி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

    இந்நிலையில் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த புவனேஷ்வர் குமார் தற்போது காயத்திலிருந்து குணமாகி மீண்டும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். காயத்திலிருந்து குணம் அடைந்த போதிலும் அடுத்து நடைபெற உள்ள வெஸ்ட் இண்டடீஸ்-க்கு ஏதிரான 34-வது லீக் ஆட்டத்தில் பங்கேற்கமாட்டார் என இந்திய அணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இங்கிலாந்து, வங்காள தேச அணிகளுடனான போட்டிகள் அடுத்தடுத்து வர உள்ள நிலையில் வேகப்பந்து புவனேஷ்வர் குமார் காயத்திலிருந்து குணமாகியுள்ளது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தினை ஏற்படுத்தியுள்ளது.



    இந்தியா-வெஸ்ட் இண்டிஸ் அணிகள் மோதும் 34-வது லீக் ஆட்டம் வரும் வியாழக்கிழமை (ஜூன் 27) மதியம் 3 மணிக்கு மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

    ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டும் 9 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.
    1992-ல் இருந்து ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து அணிகளை உலகக்கோப்பையில் இங்கிலாந்து வென்றதே கிடையாது என்ற நிலையில், அந்த அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 2015-ல் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காள தேசத்திடம் தோல்வியடைந்து இங்கிலாந்து லீக் சுற்றோடு வெளியேறியது. அதன்பின் அணியில் பல மாற்றங்கள் செய்து ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு ஏற்றவாறு தங்களது ஸ்டைலை மாற்றியது. மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த நான்கு வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.

    இந்த முறை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுவதால் அந்த அணி உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டது.

    கணிப்புக்கு ஏற்ப இங்கிலாந்து தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியது. ஆனால் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிராக தோல்வியை சந்தித்ததால் அந்த அணிக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அதன்பின் இந்தியா மற்றும் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றில் பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ய முடியும்.



    ஆனால் இங்கிலாந்து அணி இந்த மூன்று அணிகளுக்கும் எதிராக உலகக்கோப்பையில் மிகப்பெரிய அளவில் சாதித்தது கிடையாது. 1992-ல் இருந்து வெற்றி பெற்றதே கிடையாது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று போட்டிகளிலும், இந்தியாவுக்கு எதிராக மூன்று போட்டிகளிலும், நியூசிலாந்துக்கு எதிராக 1983-ல் இருந்து ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றதே கிடையாது. 2011-ல் இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் ‘டை’யில் முடிந்தது.

    இதனால் உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் முதன்மையாக கணிக்கப்பட்ட இங்கிலாந்துக்கு மிகப்பெரிய சோதனை காத்திருக்கிறது. இந்த சோதனையை வென்று அரையிறுதிக்கு முன்னேறினால்தான் உலகக்கோப்பை சாம்பியன் குறித்து நினைத்துக் பார்க்க முடியும்.
    பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரரான நெய்மர், மீண்டும் பார்சிலோனா அணியில் இணைவதற்காக சுமார் 100 கோடி ரூபாயை இழக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
    பிரேசில் கால்பந்து அணியின் கேப்டனும், உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான நெய்மர் பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு கால்பந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 200 மில்லியன் யூரோவிற்கு மேல் விலைகொடுத்து அவரை பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி வாங்கியது.

    ஆனால் பார்சிலோனாவில் விளையாடியபோது கிடைத்த புகழ், பிஎஸ்ஜி அணியில் விளையாடும்போது அவருக்கு கிடைக்கவில்லை. மேலும், பிஎஸ்ஜி அணியில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்பினார். அது தோல்வியில் முடிந்தது. இதனால் மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்ப நெய்மர் விரும்புகிறார் என்ற பேச்சு அடிபட்டது. இதை பிஎஸ்ஜி அணி உரிமையாளரும் உறுதிப்படுத்தினார்.



    தற்போது நெய்மர் ஆண்டுக்கு சுமார் 283 கோடி ரூபாய் வருமானமாக பெறுகிறார். பார்சிலோனா அணிக்கு மீண்டும் செல்வதற்காக சுமார் 100 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்து 185 ரூபாய் தந்தால் போதும் என்கிறாராம். இதனால் நெய்மர் பார்சிலோனா அணிக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், பிஎஸ்ஜி அணிக்கு செல்லும்போது பார்சிலோனா 23 மில்லியன் பவுண்டு போனஸ் ஆக தரவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த பணத்தையும் விட்டுக்கொடுக்க தயாராகியுள்ளார். மீண்டும் பார்சிலோனா அணிக்கு நெய்மர் வந்தால் ஐந்தாண்டுக்கு ஒப்பந்தம் போட்டிக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    1992-ல் தோல்வியை சந்திக்காமல் வந்த நியூசிலாந்தை வீழ்த்தியதுபோல் தற்போதும் நடக்கும் என வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. தொடரில் முதல் பாதியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் நிலையில் இருந்தன.

    இதனால் போட்டியில் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தது. அப்போதுதான் இலங்கையிடம் இங்கிலாந்து தோல்வியை சந்தித்தது. அதன்பின் இலங்கை, பாகிஸ்தான், வங்காள தேசம் அணிகள் எங்களுக்கும் அரையிறுதி வாய்ப்பு உள்ளது என வரிந்து கட்டி இறங்கியுள்ளனர்.

    நியூசிலாந்து அணி இந்தத் தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காமல் சென்று கொண்டிருக்கிறது. 1992 உலகக்கோப்பை தொடரிலும் நியூசிலாந்து தோல்வியை சந்திக்காமல் சென்றது. பாகிஸ்தான் நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. மீண்டும் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    தற்போதைய உலகக்கோப்பையில் பாகிஸ்தான் 6 போட்டியில் இரண்டில் வெற்றி, 3-ல் தோல்வி, ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது ஆகியவற்றின் மூலம் ஐந்து புள்ளிகள் பெற்றுள்ளது. அடுத்துள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்புள்ளது.

    நாளை நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அதன்பின் ஆப்கானிஸ்தானையும், வங்காள தேசத்தையும் எதிர்கொள்கிறது. நியூசிலாந்தை வீழ்த்திவிட்டால், மற்ற இரண்டு அணிகளையும் வீழ்த்தி விடலாம் என்று அந்த அணி நினைக்கிறது.

    இந்நிலையில் 1992-ல் தோற்கடிக்க முடியாமல் இருந்த நியூசிலாந்தை எப்படி வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினோமோ? அதேபோல் தற்போதும் கைப்பற்றுவோம் என வாசிம் அக்ரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறுகையில் ‘‘நியூசிலாந்து அணி 1992-ல் எங்களிடம் மோதுவற்கு முன்பு வரை தோல்வியை சந்திக்காமல் இருந்தது. நாங்கள் அவர்களை வீழ்த்தினோம். மீண்டும் அவர்கள் தோற்கடிக்க முடியாத அணியாக இருக்கின்றனர். 1992-ல் என்ன நடந்ததோ? அது மீண்டும் நடக்கும் என நம்புகிறேன்.

    ஆனால், பாகிஸ்தான் வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள அணியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் இதுவரை 14 கேட்ச்களை பிடிக்க தவறியுள்ளன. உலகக்கோப்பை போன்ற தொடரில் இது சிறந்தது அல்ல’’ என்றார்.-
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காள தேச அணியில் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறார்.
    உலகக்கோப்பை போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காள தேசம் அணி 62 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. சவுத்தாம்ப்டனில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன் எடுத்தது. முஷ்பிகுர் ரகீம் 83 ரன்னும், ஷாகி அல் ஹசன் 51 ரன்னும் எடுத்தனர். முஜீப் உர் ரகுமான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் 47 ஓவர்களில் 200 ரன்னில் சுருண்டது. இதனால் வங்காளதேசம் 62 ரன்னில் வெற்றி பெற்றது. அந்த அணி பெற்ற 3-வது வெற்றியாகும். இதன்மூலம் 5-வது இடத்துக்கு வங்காள தேசம் அணி முன்னேறி இருக்கிறது. ஆப்கானிஸ்தான் தொடர்ந்து 7-வது தோல்வியை தழுவியது. ஷாகிப் அல் ஹசன் 29 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.

    உலகக்கோப்பை போட்டியில் வங்காள தேச முன்னாள் கேப்டனான ஷாகிப் அல் ஹசன் ஆல்ரவுண்டர் பணியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் 6 ஆட்டத்தில் விளையாடி 476 ரன் குவித்து முதலிடத்தில் உள்ளார். இதில் 2 சதமும், 3 அரை சதமும் அடங்கும். சராசரி 95.20 அதிகபட்சமாக 124 ரன் குவித்துள்ளார். அத்துடன் 10 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளார்.



    இதன்மூலம் உலகக்கோப்பை போட்டியில் 400 ரன்னுக்கு மேல் எடுத்து 10 விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை ஷாகிப் அல் ஹசன் படைத்துள்ளார். மேலும் உலகக்கோப்பை போட்டியில் 1000 ரன்னை கடந்த முதல் வங்காளதேச வீரர் என்ற முத்திரையையும் பதித்தார். உலகக்கோப்பையில் 5 விக்கெட் கைப்பற்றிய முதல் வங்காள தேச வீரர் ஷாகிப் அல் ஹசன்தான்.
    லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் இடம்பிடித்துள்ளார்.
    காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அந்த்ரே ரஸல் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.
    உலகக்கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அந்த்ரே ரஸல் இடம் பிடித்திருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன் ரஸலுக்கு மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை.

    இந்நிலையில் அவர் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சுனில் அம்ப்ரிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அம்ப்ரிஸ் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 105.33 சராசரி வைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அடுத்த போட்டியில் இந்தியாவை வருகிற 27-ந்தேதி ஓல்டு டிராபோர்டில் எதிர்கொள்கிறது.
    1987 உலகக்கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் சேத்தன் ஷர்மா, முகமது ஷமி மூலம் பிரபலமாவேன் என்று தெரிவித்துள்ளார்.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்தார். உலகக்கோப்பையில் ஹாட்ரிக் வீழ்த்திய 2-வது இந்திய வீரர், உலகளவில் 9-வது வீரர் என்ற பெருமையை ஷமி பெற்றார்.

    இந்நிலையில் 1987 உலகக்கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய மற்றொரு இந்திய வீரரான சேத்தன் ஷர்மா, முகமது ஷமி மூலம் ரசிகர்கள் என்னை தெரிந்து கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சேத்தன் ஷர்மா கூறுகையில் ‘‘சொந்த நாட்டைச் சேர்ந்த சக வீரர் நீண்ட காலங்கள் கழித்து சாதனை புரிவது எப்போதும் மகிழ்ச்சியான உணர்வாக இருக்கும். ஷமி 3-வது விக்கெட்டை வீழ்த்தியபோது, உடனடியாக 32 வருடத்திற்கு முன் நான் செய்த சாதனையை நோக்கி எண்ணம் சென்றது.



    தற்போதுள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு 30 வருடத்திற்கு முன்பு நான் என்ன சாதனை செய்தேன் என்பது குறித்து தெரியாது. ஆனால், தற்போது தெரிந்து கொள்வார்கள். முகமது ஷமிக்கு நன்றி. தற்போதைய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு இந்தியர்தான் முதன்முறையாக உலகக்கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது என்பது இனிமேல் தெரியவரும்’’ என்றார்.
    சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு 263 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம்.
    வங்காள தேசம் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை தொடரின் 31-வது லீக் ஆட்டம் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் கேப்டன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி வங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ், தமிம் இக்பால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தாஸ் 16 ரன்னிலும், தமிம இக்பால் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த ஷாகிப் அல் ஹசனும், முஷ்பிகுர் ரஹிமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷாகிப் அல் ஹசன் 51 ரன்களும், ரஹிம் 83 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மொசாடெக் ஹொசைன் 24 பந்தில் 35 ரன்களும், மெஹ்முதுல்லா 38 பந்தில் 27 ரன்களும் அடிக்க வங்காள தேசம் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் சேர்த்துள்ளது.



    ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டும், குல்பதின் நைப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 263 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் பேட்டிங் செய்து வருகிறது.
    ×