search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சூப்பர் தொடக்கம் கண்டுள்ள நிலையில், ரோகித் சர்மா 34 பந்தில் அரைசதம் அடித்துள்ளார்.
    இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 22-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தவானுக்குப் பதில் விஜய் சங்கர் இடம்பிடித்தார்.

    ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை முகமது அமிர் வீசினார். லோகுஷ் ராகுல் 6 பந்திலும் ரன்ஏதும் சேர்க்கவில்லை. இதனால் முதல் ஓவர் மெய்டனாக அமைந்தது.

    இருவரும் முகமது அமிர் ஓவரை மட்டும் கவனமாக விளையாடினர். மறுமுனையில் ஹசன் அலி, வஹாப் ரியாஸ் பந்து வீச்சை அடித்து விளைாடினர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

    பவர் பிளே-யான முதல் 10 ஓவரில் இந்தியா 53 ரன்கள் சேர்த்தது. 12-வது ஓவரை சதாப் கான் வீசினார். இந்த ஓவரில் இந்தியா 17 ரன்கள் விளாசியது. ரோகித் சர்மா 4-வது சிக்சருக்கும், ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கும் விளாசினார். அத்துடன் 34 பந்தில் அரைசதம் அடித்தார்.

    இந்தியா 16 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 93 ரன்கள் அடித்துள்ளது. ரோகித் சர்மா 58 ரன்னுடனும், லோகேஷ் ராகுல் 33 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.
    இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் முதன்முறையாக டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்த சர்பராஸ் அகமதுக்கு போட்டி கைக்கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
    மான்செஸ்டரில் நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 6 முறை மோதியுள்ளன. 6 முறையும் இந்தியாவே வெற்றி வாகை சூடியுள்ளது. இதில் ஐந்து முறை இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ஒரு முறை 2-வது பேட்டிங் செய்தது.

    மேலும், 6 முறையும் டாஸ் வென்ற அணி பேட்டிங்கையே தேர்வு செய்தது. ஆனால், இந்த முறை சர்பராஸ் அகமது டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். மான்செஸ்டர் ஆடுகளம் சேஸிங் செய்ய மிகச் சிறந்ததாக இருக்கும் என்பதாலும், மழை அச்சுறுத்தல் இருப்பதால் முதலில் பந்து வீசுவதே சிறந்ததாக இருக்கும் என்பதாலும் சர்பராஸ் அகமது இந்த முடிவை எடுத்துள்ளார்.

    மிகுந்த நெருக்கடி கொண்ட போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் முதன்முறையாக மாற்றி யோசித்ததற்கு பலன் கிடைக்குமா? என்பது போட்டியின் முடிவில்தான் தெரியவரும்.
    உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.
    இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 22-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணியில் ஷிகர் தவானுக்குப் பதிலாக விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மான்செஸ்டரில் இன்று நடைபெறும் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மான்செஸ்டர்:

    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், பேராவலையும் உருவாக்கியுள்ள பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டு மைதானத்தில் இன்று மதியம் அரங்கேறுகிறது.

    கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோதல் என்றாலே அனல் பறக்கும். அதுவும் இது உலகக்கோப்பை என்றால் சொல்லவே வேண்டாம். உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த ஆட்டத்தை காண தவம் கிடக்கிறார்கள். இரு நாட்டு பகைமை காரணமாக ரசிகர்களும் இந்த போட்டியை ஒரு யுத்தம் போன்று உணர்வுபூர்வமாக பாவிப்பதால், அனைவரது கவனமும் இந்த ஆட்டத்தின் மீது பதிந்துள்ளது.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளை சாய்த்தது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    இதுவரை தோல்வியே சந்திக்காமல் 5 புள்ளிகளுடன் உள்ள இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் வலுவாக உள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் விரலில் காயமடைந்திருப்பதால் அவருக்கு பதிலாக லோகேஷ் ராகுல் தொடக்க ஆட்டக்காரராக ஆடுவார். மிடில் வரிசையில் விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும். பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரைத் தான் அணி இப்போது அதிகம் சார்ந்து இருக்கிறது. இவர்கள் நிலைத்து நின்று நீண்ட நேரம் ஆடினால் சவாலான ஸ்கோரை எட்ட முடியும்.

    இந்த ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இல்லை. பேட்டிங்குக்கு ஏற்ற வகையிலேயே ஆடுகளம் காணப்படுகிறது. ஆனால் மோசமான வானிலை உருவானால், தொடக்கத்தில் பந்து நன்கு ஸ்விங் ஆகி வேகப்பந்து வீச்சு எடுபடலாம். அது மட்டுமின்றி பாகிஸ்தான் வீரர்கள் சுழற்பந்து வீச்சை எளிதில் சமாளிக்கக் கூடியவர்கள். அதனால் குல்தீப் யாதவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை சேர்ப்பது குறித்து இந்திய அணி நிர்வாகம் யோசித்து வருகிறது. பாகிஸ்தான் அணியில் 3 இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள நிலையில் அவர்களை சாதுர்யமாக எதிர்கொள்வதற்கு இந்திய அணியில் பிரதான ஒரு இடக்கை பேட்ஸ்மேன் கூட இல்லாதது சற்று பலவீனமாகும். ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் சொன்னது போல் இந்திய வீரர்கள் களத்தில் ஆக்ரோஷமாக விளையாட வேண்டியது முக்கியமாகும்.

    உலகக்கோப்பை கிரிக்கெட் புத்தகத்தை புரட்டிப் பார்த்தால், இந்தியஅணி இதுவரை பாகிஸ்தானிடம் ஒருமுறை கூட தோற்றது கிடையாது. சந்தித்த 6 ஆட்டங்களிலும் வாகை சூடியிருக்கிறது. அந்த பெருமையை தக்கவைக்கும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.



    சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி (இங்கிலாந்துக்கு எதிராக), 2 தோல்வி (வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக), ஒரு முடிவில்லை (இலங்கைக்கு எதிராக) என்று 3 புள்ளிகள் பெற்றுள்ளது. பாகிஸ்தானை எப்போதும் கணிக்க முடியாத அணி என்று வர்ணிப்பார்கள். அது இந்த உலக கோப்பையிலும் ஏற்கனவே நிரூபணமாகி விட்டது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக்கில் 105 ரன்னில் சுருண்ட பாகிஸ்தான், ‘நம்பர் ஒன்’ அணியான இங்கிலாந்துக்கு எதிராக 348 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது.

    உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை இதுவரை வீழ்த்தியதில்லை என்ற நீண்டகால சோகத்துக்கு இந்த தடவை முடிவு கட்டியே தீர வேண்டும் என்ற வெறியுடன் பாகிஸ்தான் வீரர்கள் வரிந்து கட்டுவார்கள். இமாம் உல்-ஹக், பஹர் சமான், பாபர் அசாம் ஆகியோர் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் தூண்கள். பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அமிர், வஹாப் ரியாஸ், ஹசன் அலி, ஷகீன் அப்ரிடி உள்ளிட்டோர் மிரட்டக் கூடியவர்கள். இவர்களுடன் அனுபவம் வாய்ந்த முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் பக்கபலமாக உள்ளனர். எனவே இந்த ஆட்டத்தில் முதல் பந்தில் இருந்து கடைசி வரை சுவாரஸ்யத்துக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது என்று நம்பலாம்.

    சமீபத்திய செயல்பாடு, திறமை அடிப்படையில் பார்த்தால் இந்தியாவின் கையே கொஞ்சம் ஓங்கி நிற்கிறது. ஆனால் உச்சக்கட்ட நெருக்கடியை எந்த அணி நேர்த்தியாக கையாளுகிறதோ அவர்களிடமே வெற்றி வசமாகும்.

    சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 131 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 54-ல் இந்தியாவும், 73-ல் பாகிஸ்தானும் வெற்றி கண்டுள்ளன. 4 ஆட்டத்தில் முடிவு இல்லை. கடைசியாக இவ்விரு அணிகளும் கடந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் மோதிய இரு ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், பும்ரா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் அல்லது முகமது ஷமி.

    பாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), சோயிப் மாலிக் அல்லது ஆசிப் அலி, ஷதப் கான், ஹசன் அலி அல்லது ஹாரிஸ் சோகைல், வஹாப் ரியாஸ், முகமது அமிர், ஷகீன் ஷா அப்ரிடி.

    மான்செஸ்டரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்துள்ளது. ஆடுகளமும் மூடியே வைக்கப்பட்டுள்ளது. இன்றைய வானிலையை பொறுத்தவரை மழை வாய்ப்பு கொஞ்சம் குறைவு தான். அங்கு பிற்பகலில் லேசான மழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    லண்டன்:

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கார்டிப்பில் இன்று நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. மழை காரணமாக ஆட்டம் 48 ஒவர்களாக குறைக்கப்பட்டது.

    ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹஸ்ரதுல்லா ஸசாய் 22(23), நூர் அலி ஸத்ரான் 32(58), ரஷீத் கான் 35(25) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கு ரன்களை எடுத்து வெளியேறினர்.



    மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். ரஹ்மத் ஷா 6, ஹஷ்மதுல்லா ஷாஹிடி 8, அஸ்கர் ஆப்கான் 0, முகமது நபி 1, இக்ரம் அலி கில் 9, குல்படின் நைப் 5, ஹமீத் ஹசன் 0, அப்தாப் ஆலம் என அடுத்தடுத்து வெளியேற ஆப்கானிஸ்தான் அணி 34.1 ஓவரில் 125 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.



    தென் ஆப்பிரிக்கா தரப்பில் இம்ரான் தாகீர் 4, மோரிஸ் 3, ஆண்டில் பெஹ்லுக்வாயோ 2, ரபாடா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களம் இறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாஷிம் அம்லா, குயின்டன் டி காக் களம் இறங்கினர்.  ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி ரன்களை குவிக்க துவங்கினர்.  ஆட்டத்தின் 17 வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா வீரர் குயின்டன் டி காக் தனது அரை சதத்தை எட்டினார்.  தென் ஆப்பிரிக்கா விக்கெட்டை வீழ்த்தும் நோக்குடன் பந்து வீசிய ஆப்கான் வீரர்களின்  முயற்சி பலன் ஏதும் அளிக்கவில்லை. தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 20வது ஓவர் முடிவில் 91 ரன்கள் எடுத்திருந்தது.  


    தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ஹாஷிம் அம்லா, குயின்டன் டி காக் ஜோடி 100 ரன்களை கடந்த நிலையில், ஆட்டத்தின் 22.5வது ஓவரில் குல்படின் நைப் வீசிய பந்தில் தென் ஆப்பிரிக்கா வீரர்  குயின்டன் டி காக் 72 பந்துகளை சந்தித்து 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா வீரர் ஆண்டில் பெஹ்லுக்வாயோ களம் இறங்கினார். 

    இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 28.4   ஓவரில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 131 ரன்கள் எடுத்தது.  இதன் மூலம் ஆப்கான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிக பட்சமாக   தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் குயின்டன் டி காக் 68 (72),  ஹாஷிம் அம்லா 41 (83), ஆண்டில் பெஹ்லுக்வாயோ 17 (17) ரன்கள் எடுத்தனர்.

    ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்படின் நைப் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    லண்டன்:

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் லண்டனில் இன்று நடைபெற்று வரும் 20-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன், இலங்கை அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.  

    இப்போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50  ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஆரோன் பின்ச் 153 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய உதானா, டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கருரத்னே, குசல் பெரேரா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் கொடுத்தனர். இலங்கை அணியில் அதிகப்பட்சமாக கருரத்னே 97 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற ஆஸ்திரேலியா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.

    ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 4, ரிச்சர்ட்சன் 3, கம்மின்ஸ் 2, ஜாசன் பேண்ட்கிராப்ட் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 17-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. ஆஸ்திரேலியா-இலங்கை, தென் ஆப்பிரிக்கா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன.

    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 17-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. லண்டனில் ஓவல் மைதானத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா- கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.

    ஆஸ்திரேலிய அணி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. இலங்கை அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 2 முடிவு இல்லை. ஆகியவற்றுடன் 4 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தான் (7 விக்கெட்), வெஸ்ட் இண்டீஸ் (15 ரன்), பாகிஸ்தான் (41 ரன்) ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது. இந்தியாவிடம் 36 ரன்னில் தோற்றது.

    இலங்கையை இன்று வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.

    இலங்கை அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 2-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 34 ரன்னில் வென்றது. பாகிஸ்தான், வங்காள தேசத்துடன் மோதிய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

    பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    கார்டிப் மைதானத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டூபெலிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா 4 ஆட்டத்தில் விளையாடி இதுவரை வெற்றி பெறவில்லை.

    இங்கிலாந்துடன் 104 ரன் வித்தியாசத்திலும், வங்காள தேசத்திடம் 21 ரன் வித்தியாசத்திலும் இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. வெஸ்ட் இண்டீசுடன் மோதிய ஆட்டம் மழையால் ரத்து ஆனது.

    1 புள்ளியுடன் இருக்கும் தென் ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    ஆப்கானிஸ்தான் மோதிய 3 ஆட்டத்திலும் தோற்றது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அணியிடம் தோற்று இருந்தது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்து முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது.

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் இடையே ஆன ஆட்டத்தில் இவர்தான் வெற்றி பெறுவார் என சோயப் அக்தர் சுவாரசியமான கருத்தினை கூறியுள்ளார்.
    2019-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. அதில் நாளை (ஜூன் 16) நடைபெற உள்ள 22-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை ஏதிர்கொள்கிறது. இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்பதால் இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலக அளவிலான கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்தும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் டுவிட்டரில் சுவாரசியமான செய்தியினை பதிவேற்றியுள்ளார்.

    அக்தர் டுவிட்டரில் பதிவேற்றிய செய்தியாவது:-

    இங்கிலாந்தில் தற்போது நிலவி வரும் வானிலை நிலவரம் காரணமாக வரும் ஞாயிற்றுகிழமை (ஜூன் 16) இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள கிரிக்கெட் போட்டியில் மழை தான் நிச்சயம் வெற்றி பெறும்.

    இவ்வாறு அக்தர் ட்டுவிட் செய்துள்ளார். 

    நகைச்சுவையாக ட்டுவிட் செய்துள்ள அக்தரின் பதிவினை பல கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிந்து வருகின்றனர். உலக்கோப்பை கிரிக்கெட் நடைபெற்று வரும் இங்கிலாந்து நாட்டில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு போட்டிகள் கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மான்செஸ்டர் நகரில் நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் போது மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
    உலகக்கோப்பை கிரிக்கெட் 19-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸை 8 விக்கெட்டுக்கள் வீத்தியாசத்தில் வீழ்த்தியது.
    சவுத்தாம்ப்டன்:

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான ஆட்டம் இன்று சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நிக்கோலஸ் பூரன் மட்டும் அரைசதம் கடந்தார். இறுதியில் 44.4 ஒவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களே சேர்த்தது. இதனால் இங்கிலாந்து வெற்றிக்கு 213 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இதையடுத்து 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க முதலே பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தியது. அதிரடியாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் ஜோ ரூட் இந்த உலகக்கோப்பையில் இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்.

    இதையடுத்து 33.1 ஒவர்களில் இலக்கை எளிதாக எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜோ ரூட் சரியாக 100 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
    க்ரீன் பிட்ச் தந்து ஐசிசி எங்களை பாரபட்சம் பார்க்கிறது என்று ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
    உலகக்கோப்பையில் இலங்கை அணி முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தையும, 2-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானையும் எதிர்கொண்டது. இந்த இரண்டு போட்டிகளும் கார்டிப் மைதானத்தில் நடைபெற்றது. கார்டிப் ஆடுகளம் புற்கள் நிறைந்து பச்சை பசேல் என்று காட்சியளித்தது.

    இதனால் வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக இருந்தது. ஆகையால் நியூசிலாந்துக்கு எதிராக 136 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது போட்டியிலும் திணறியது. ஆனால் மழை பெய்ததால் டக்வொர்த் விதிப்படி இலக்கு மாற்றியமைக்கப்பட்டதால் வெற்றி பெற்றது.

    அதன்பின் பாகிஸ்தானுக்கு எதிராகவும், வங்காள தேசத்திற்கு எதிராகவும் விளையாட இருந்த ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டன. இந்த இரண்டு ஆட்டங்களும் பிரிஸ்டோலில் நடைபெறுவதாக இருந்தது. பிரிஸ்டோல் ஆடுகளமும் பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் தயார் செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இலங்கை அணி நாளை ஆஸ்திரேலியாவை லண்டன் ஓவல் மைதானத்தில் எதிர்கொள்கிறது. லண்டன் ஓவலில் 300 ரன்களுக்கு மேல் சர்வ சாதாரணமாக குவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், எங்களுக்கு எதிரான போட்டிக்கான ஆடுகளம் புற்கள் நிறைந்து காணப்படுவது போல் தெரிகிறது. இதனால் ஐசிசி பாரபட்சம் பார்க்கிறது என்று இலங்கை அணியின் மானேஜர் அஷாந்தா டி மெல் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து அஷாந்தா டி மெல் கூறுகையில் ‘‘நாங்கள் விளையாடிய நான்கு போட்டிக்கான ஆடுகளங்களும் புற்கள் நிறைந்து காணப்பட்டது. ஐசிசி எங்களுக்காக ‘க்ரீன் பிட்ச்’ தயார் செய்துள்ளது. நான்கு போட்டிகளில் விளையாடியதில் இருந்து நாங்கள் இதை தெரிந்து கொண்டோம்.



    அதே மைதானத்தில் மற்ற அணிகள் மோதும் ஆடுகளங்கள் புற்கள் காய்ந்து, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கான ஆடுகளங்கள் க்ரீனாக உள்ளது. இதுபற்றி நாங்கள் புகார் அளிக்கிறோம். ஐசிசி நடத்தும் தொடரில் ஒரு குறிப்பிட்ட அணிக்கெதிராக மட்டும் ஒரு குறிப்பிட்ட ஆடுகளமும், மற்ற அணிகளுக்கு வேறுவிதமான ஆடுகளங்களும் தயார் செய்தது நியாயமானது அல்ல.

    கார்டிப் போட்டிக்கான பயிற்சியின்போது மூன்று வலைகளுக்குப் பதிலாக இரண்டு வலைகள் மட்டுமே தயார் செய்து தந்தனர். நாங்கள் தங்கிய ஓட்டலில் நீச்சல் குளம் இல்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் ரிலாக்ஸ் ஆக நீச்சல் குளம் ஒவ்வொரு அணிகளுக்கும் தேவை. அதேவேளையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு பிரிஸ்டோலில் ஒதுக்கிய ஓட்டலில் நீச்சல் குளம் இருந்தது’’ என்றார்.

    இலங்கை அணி மானேஜரின் இந்த குற்றச்சாட்டுக்களை ஐசிசி முற்றிலும் மறுத்துள்ளது.
    முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இங்கிலாந்துக்கு 213 ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ்.
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் உலகக்கோப்பையின் 19-வது லீக் ஆட்டம் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் லிவிஸ், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். லிவிஸ் 2 ரன்க்ள எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷாய் ஹோப் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். கிறிஸ் கெய்ல் 41 பந்தில் 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 56 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது தத்தளித்தது.



    4-வது விக்கெட்டுக்கு பூரன் உடன் ஷிம்ரோன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் வேகம் எடுத்தது. முன்னணி பந்து வீச்சாளர்களை இந்த ஜோடி சிறப்பாக எதிர்கொண்டதால், இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பகுதி நேர பந்து வீச்சாளரான ஜோ ரூட்டை பந்து வீச அழைத்தார்.

    ஹெட்மையர் 48 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையிலும், அடுத்து வந்த ஜோசன் ஹோல்டர் 9 ரன்கள் எடுத்த நிலையிலும் ரூட் பந்தில் வீழ்ந்தனர். அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டம் ஏறக்குறைய முடிவுக்கு வந்தது. பூரன் 78 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பூரன் - ஹெட்மையர் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.



    அந்த்ரே ரஸல் (21), பிராத் வைட் (14), காட்ரெல் (0), கேப்ரியல் (0) அடுத்தத்து வெளியேற வெஸ்ட் இண்டீஸ் 44.4 ஓவரில் 212 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஜாப்ரா ஆர்சர், மார்க் வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஜோ ரூட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.
    தங்கும் விடுதியின் ஜிம்மில் உடற்பயிற்சிக்கு போதுமான உபகரணங்கள் இல்லாததால் தனியார் ஜிம்மில் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இத்தொடரை ஐசிசி நடத்துவதால், வீரர்கள் தங்கும் ஓட்டல் உள்பட எல்லாவிதமான ஏற்பாடுகளையும் அதுதான் பார்த்துக் கொள்ளும்.

    இந்திய அணி வீரர்கள் தங்கும் விடுதியில் உள்ள ஜிம்மில் போதுமான அளவிற்கு உபகரணங்கள் இல்லை என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் வெளியில் உள்ள தனியார் ஜிம்மில் இந்திய வீரர்கள் உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.



    ஏற்கனவே மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டதற்கு ஐசிசி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சரியாக செய்யாததுதான் காரணம் என்றும், வீரர்கள் பஸ்சில் செல்வதற்குப் பதிலாக ரெயிலில் செல்வதால் ரசிகர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு வீரர்களுக்கு மிகப்பெரிய சோதனையாக உள்ளது என்றும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×