search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    இந்தியாவின் ஆடும் லெவன் அணியில் நான்கு விக்கெட் கீப்பர்கள் விளையாடினால், தரமான 4-வது பேட்ஸ்மேன் இல்லையா? என்று வெங்சர்க்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா 240 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் படுதோல்வியடைந்தது. உலகக்கோப்பை தொடருக்கு செல்வதற்கு முன்பே கிரிக்கெட் விமர்சகர்கள் நான்காவது இடத்தில் களம் இறங்க பியூர் பேட்ஸ்மேன் இல்லை என்று குற்றம்சாட்டினர்.

    அப்போது சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் 4-வது இடத்தில் வீரர்களை களம் இறக்கிக் கொள்வோம் என்று அணி நிர்வாகம் கூறியது. லீக் போட்டிகள் முழுவதும் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடியதால் அந்தக் குறை தெரியவில்லை.

    அரையிறுதியில் 5 ரன்களுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்ததால் நான்காவது பேட்ஸ்மேன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    இந்நிலையில் முன்னாள் இந்திய அணியின் தேர்வுக்கு தலைவராக திலிப் வெங்சர்க்காரும் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து திலிப் வெங்சர்க்கார் கூறுகையில் ‘‘விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தொடக்கத்திலேயே ஆவுட்டாகிவிட்டால்,  4-வது இடத்தில் களம் இறங்க தரமான பேட்ஸ்மேன் தேவை என்று அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து கூறி வருகிறேன்.

    இந்த பிரச்சனை அரையிறுதி வரை எழும்பவில்லை. ஏனென்றால், அவர்கள் இருவரும் ஒவ்வொரு போட்டியிலும் ரன்கள் குவித்தனர். இறுதியில் அவர்கள் இருவரும் ஆட்டமிழந்தபோது நாம் 240 ரன்களை சேஸிங் செய்ய 4-வது பேட்ஸ்மேனை தேடவேண்டிய நிலை ஏற்பட்டது.

    நாம் நான்கு விக்கெட் கீப்பர்களுடன் விளையாடியது விசித்திரமாக இருந்தது. நான்கு விக்கெட் கீப்பர்களுடன் விளையாடும் ஒரே அணி இந்தியா மட்டுமே. கிரிக்கெட் வரலாற்றில் இப்படி நிகழ்ந்தது கிடையாது.

    தினேஷ் கார்த்திக்கை நீங்கள் பியூர் பேட்ஸ்மேனாக களம் இறக்கி விளையாடுகிறீர்கள் என்றால், இந்தியாவில் அந்த இடத்திற்கான பேட்ஸ்மேன்களை உருவாக்குவதில் வெற்றிடம் உள்ளதா?. ரஞ்சி டிராபியில் 900, 1000 மற்றும் 1200 ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் எங்கே?. அவர்கள் தராமானவர்கள் இல்லையா? அல்லது ரஞ்சி டிராபி தரமானது இல்லையா?

    ரோகித் சர்மா விராட் கோலி

    நான் எந்தவொரு வீரருக்கும் எதிரானவன் இல்லை. கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரின்போது தினேஷ் கார்த்திக் திணறியதை பார்த்தேன். இங்கிலாந்து சூழ்நிலை உங்களுக்கு கட்டாயம் தெரியும். மேலும், இது 50 ஓவர் கிரிக்கெட் தொடர், டி20 கிரிக்கெட் அல்ல. ஆசையால் திட்டம் ‘பி’ற்கான வழிமுறைகளை தயாராக வைத்திருக்க வேண்டும். நான்கு விக்கெட் கீப்பர்களுடன் விளையாடும்போது உங்களுடைய விருப்பம் என்ன? நான்கு பியூர் பேட்ஸ்மேன்கள் அணியை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.

    ஆடும் லெவன் அணி தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. திட்டம் ‘ஏ’ அரையிறுதி வரை சரியாக இருந்தது. ஆனால், அரையிறுதியில் பிளான் ‘ஏ’ எடுபடாத நேரத்தில், திட்டம் ‘பி’-ஐ செயல்படுத்த முடியாமல் போனது’’ என்றார்.
    அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று பர்மிங்காமில் நடந்த 2-வது அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49 ஓவரில் 223 ரன்னில் சுருண்டது. அதிகப்பட்சமாக ஸ்மித் 85 ரன் எடுத்தார். அலெக்ஸ் கேரி 46 ரன்னும், மிட்செல் ஸ்டார்க் 29 ரன்னும், மேக்ஸ்வெல் 22 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ்,  ரஷித் தலா 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினர்.

    பின்னர் விளையாடிய இங்கிலாந்து 32.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 226 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணியில் ஜேசன் ராய் 85 ரன்னும், ஜோ ரூட் 49 ரன்னும், கேப்டன் மோர்கன் 45 ரன்னும் எடுத்தனர்.

    1992-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து தற்போதுதான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வருகிற 14-ந்தேதி லண்டன் லார்ட்சில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துடன் மோதுகிறது.

    இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது குறித்து இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறியதாவது:-

    இந்த வெற்றி முற்றிலும் மகிழ்ச்சி அளிக்கிறது. நம்ப முடியாத அளவுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

    எட்ஜ்பாஸ்டன் மைதானம் எங்களுக்கு சாதகமாக இருக்கிறது. இந்த மைதானத்தில் இந்தியாவை வீழ்த்தினோம். உண்மையை சொல்ல வேண்டுமானால் அந்த நம்பிக்கையுடனும், லீக் ஆட்டங்களில் கிடைத்த உத்வேகத்துடனும் இங்கு வந்து விளையாடினோம்.

    முன்னேற்றத்தில் இருந்து முன்னேற்றம் அடைவது பற்றி பேசினோம். முதல் பந்தில் இருந்தே நெருக்கடி கொடுத்தோம்.

    கிறிஸ் லோக்ஸ் அருமையாக பந்து வீசினார். அவர் முதல் 10 ஓவரில் சிறந்த பந்து வீச்சாளராக உள்ளார். அதேபோல் ஆர்சர், மற்ற பந்து வீச்சாளர்களும் திறமையுடன் செயல்பட்டு ஆட்டத்தில் எங்களை முன்னிலையிலேயே வைத்து இருந்தனர்.

    ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் தொடக்கத்திலேயே ரன்களை குவித்தனர். அவர்களது வாழ்க்கையில் தற்போது உச்சக்கட்ட பார்மில் உள்ளனர். அவர்கள் சிறந்த நிலையிலேயே இருந்தால் அது எங்களுக்கு பலமாக அமையும்.

    இங்கிலாந்து அணி 1992-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் விளையாடியபோது எனக்கு 6 வயது. இதனால் இறுதிப் போட்டி பற்றி அதிகம் ஞாபகம் இல்லை. நிறைய தடவை அந்த போட்டியின் ஹைலைட்சை பார்த்து இருக்கிறேன்.

    மோர்கன்

    இறுதிப் போட்டியில் விளையாடுவது மிகப்பெரிய வாய்ப்பாகும். 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் முதல் சுற்றோடு வெளியேறினோம். அதில் இருந்து தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறோம். இது வியத்தகு முன்னேற்றம் ஆகும்.

    டிரஸிங் ரூமில் உள்ள அனைவருக்கும் கடின உழைப்பில் பஙகு உள்ளது. கடினமான உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இதுபோன்ற பல வாய்ப்புகளை உருவாக்க விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக மோசமான முறையில் தோல்வியடைந்தது காயத்தை ஏற்படுத்திவிட்டது என பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
    அரை இறுதியில் தோற்றது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறியதாவது:-

    நாங்கள் அனைத்து துறையிலும் மோசமாக விளையாடி விட்டோம். அவர்கள் எங்களின் முதல் 3 விக்கெட்டை விரைவில் வீழ்த்தி விட்டனர்.

    இந்த உலகக்கோப்பை தொடரில் கற்றுக்கொள்ள நிறைய நல்ல வி‌ஷயங்கள் இருக்கிறது. நீங்கள் எப்போதுமே வெற்றி பெறவே விரும்புவீர்கள்.

    நம்மால் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்துடன்தான் வருவார்கள். கடந்த 6 மாதங்களாக கூட நிறைய நேர்மறை எண்ணங்கள் இருந்தன. ஆனால் இந்த தோல்வி காயத்தை ஏற்படுத்திவிட்டது.

    இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது விக்கெட்டுகளை வீழ்த்தும் வாய்ப்புகளை எதிர்பார்த்தோம். அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள்.

    இங்கிலாந்து அணியினர் எவ்வளவு ஆற்றல் வாய்ந்தவர்கள், ஆதிக்கம் நிறைந்தவர்கள் என்பதை அறிவோம். என்றாவது ஒரு நாளில் நமது திறமையை செயல்படுத்த முடியாமல் போய்விடும். இதனால் ஒரு நல்ல அணியான நீங்கள் கூட தோல்வி அடைந்து விடுவீர்கள்.

    சில வீரர்கள் காயத்துடன் இங்கு வந்தார்கள். ஆனால் அதை தோல்விக்கு காரணமாக சொல்லக்கூடாது. கோப்பையை வெல்ல வேண்டும் என்றுதான் இங்கு வந்தோம். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது.

    இவ்வாறு ஆரோன் பிஞ்ச் கூறினார்.
    உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் ஜேசன் ராய் அதிரடி ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து.
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரோன் பிஞ்ச் டக் அவுட்டனார். டேவிட் வார்னர் 9 ரன்னிலும், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 4 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ஸ்மித், அலெக்ஸ் கேரி ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது.

    அலெக்ஸ் கேரி 46 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டாய்னிஸ் ரன் ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யூ ஆனார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஸ்மித் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். 

    ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். ஸ்டார்க் 36 பந்தில் 29 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா 49 ஓவரில் 223 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இங்கிலாந்து அணி சார்பில் ரஷித், கிறிஸ் வோக்ஸ் தலா மூன்று விக்கெட்டுக்களும், ஆர்சர் இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.



    இதையடுத்து, 224 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    ஜேசன் ராய் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். அவருக்கு பேர்ஸ்டோவ் ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.

    பேர்ஸ்டோவ் 34 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய ஜேசன் ராய் அரை சதமடித்தார். அவர் 85 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜோ ரூட், கேப்டன் மார்கன் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரூட் 49 ரன்னும், மார்கன் 45 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்த வெற்றியை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வரும் ஞாயிறன்று நடக்கும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து.
    ஒரே உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை மெக்ராத்திடம் இருந்து தட்டிப் பறித்தார் மிட்செல் ஸ்டார்க்.
    இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் பேர்ஸ்டோவ் விக்கெட்டை வீழ்த்தினார். பேர்ஸ்டோவ் விக்கெட் இந்த உலகக்கோப்பையில் ஸ்டார்க்கின் 27-வது விக்கெட்டாகும்.

    இதன்மூலம் ஒரே உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் மெக்ராத் 2007-ல் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் 26 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். தற்போது 12 வருட மெக்ராத் சாதனையை ஸ்டார்க் முறியடித்துள்ளார்.
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா போட்டி நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்திற்கு மேல் ‘உலகம் பலுசிஸ்தானுக்காக பேச வேண்டும்’ என வாசக பேனருடன் விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. போட்டி நடைபெறும் மைதானத்திற்கு மேல் விமானத்தில் பேனர்களை கட்டி பறக்கவிட்டு அரசியல் தொடர்பான எதிர்ப்பை சிலர் தெரிவித்து வருகின்றனர்.

    இன்று இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்திற்கு மேல் விமானம் ஒன்று பேனர் ஒன்றை கட்டுக்கொண்டு பறந்தது. அந்த பேனரில் ‘‘உலகம் கட்டாயம் பலுசிஸ்தான் பற்றி பேச வேண்டும்’’ என்று எழுதப்பட்டிருந்தது. விமானம் சுமார் ஐந்து நிமிடங்கள் மைதானத்தை சுற்றி பறந்தது.

    உலகக்கோப்பை போட்டி நடைபெறும் மைதானத்திற்கு மேல் எதிர்ப்பு தெரிவித்து பேனருடன் விமானம் பறப்பது இது முதல் முறை அல்ல.

    இதற்கு முன் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போட்டியின்போதும் இதுபோன்று வாசகம் எழுத்திய பேனருடன் ஹெட்டிங்லி மைதானத்திற்கு மேல் விமானம் பறந்தது.

    இந்தியா - இலங்கை போட்டியின்போது காஷ்மீருக்கு நீதி வேண்டும். இனப்படுகொலையை இந்தியா நிறுத்த வேண்டும். காஷ்மீரை விடுவிக்க வேண்டும் என்ற வாசகத்துடன் விமானம் பறந்தது. மற்றொரு விமானத்தில் ‘‘கும்பல்களால் அடித்துக் கொலை செய்யப்படும் சம்பவங்களை நிறுத்துக’’ என எழுதப்பட்டிருந்தது.

    இதற்கு பிசிசிஐ கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனால் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டத்தின்போது மான்செஸ்டர் மைதானத்திற்கு மேல் விமானம் பறக்க தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வரும் அரையிறுதியில் இங்கிலாந்துக்கு 224 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் முதலில் பேட்டிங் செய்த அணியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளதால் இங்கிலாந்து ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.

    டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை கிறிஸ் வோக்ஸ் வீசினார். முதல் பந்தை டேவிட் வார்னர் பவுண்டரிக்கு விரட்டினார். 2-வது ஓவரை ஜாப்ரா ஆர்சர் வீசினார். ஆரோன் பிஞ்ச் தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ மூலம் ஆட்டமிழந்தார்.

    3 விக்கெட் வீழ்த்திய கிறிஸ் வோக்ஸ்

    டேவிட் வார்னர் 9 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது வீரராக களம் இறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 4 ரன்னில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

    14 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தத்தளித்தது. அப்போது ஸ்மித் உடன் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து  மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டது.

    அலெக்ஸ் கேரி 46 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் ரன்ஏதும் எடுக்காமல் ரஷித் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். ஒரே ஓவரில் ஆஸ்திரேலியா இரண்டு விக்கெட்டுக்களை இழந்ததால், அதில் இருந்து மீண்டு வர இயலவில்லை. அப்போது ஆஸ்திரேலியா 28 ஓவரில் 118 ரன்கள் எடுத்திருந்தது.

    ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் வீழ்த்தி ரஷித்

    ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஸ்மித் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்.  மேக்ஸ்வெல் (22), பேட் கம்மின்ஸ் (6) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். ஸ்டார்க் 36 பந்தில் 29 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா 49 ஓவரில் 223 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இங்கிலாந்து அணி சார்பில் ரஷித், கிறிஸ் வோக்ஸ் தலா மூன்று விக்கெட்டுக்களும், ஆர்சர் இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

    பின்னர் 224 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.
    நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தேவையில்லாமல் ஷாட் ஆடி ஆட்டமிழந்த ரிஷப் பந்தை பீட்டர்சன் விமர்சித்திருந்தார். அதற்கு யுவராஜ் பதில் அளித்துள்ளார்.
    அரையிறுதிப் போட்டியில் 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 5 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

    விராட் கோலி ஆட்டமிழந்ததும் 4-வது வீரராக களம் இறங்கிய ரிஷப் பந்த் பொறுமையாக விளையாடினார். 56 பந்தில் 32 ரன்கள் சேர்த்த ரிஷப் பந்த் தேவையில்லாமல் சான்ட்னெர் பந்தை டீப் மிட்வெக்கெட் திசையில் அடித்து ஆட்டமிழந்தார்.

    ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் கோபம் அடைந்தனர். கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

    இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான கெவின் பீட்டர்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ரிஷப் பந்த் இப்படி அவுட்டாவதை நான் எத்தனை முறை பார்த்திக்கிறோம்?. முக்கியமான விஷயம் என்னவெனில், தொடக்கத்தில் இருந்தே அதற்கு தயாராகவில்லை. பரிதாபத்திற்குரியது’’ என பதிவிட்டிருந்தார்.

    யுவராஜ் சிங் பீட்டர்சன் டுவீட்

    அதற்கு பதில் அளித்த யுவராஜ் சிங் ‘‘ரிஷப் பந்த் 8 ஒருநாள் போட்டிகளில்தான் விளையாடியுள்ளார். இது அவரது தவறு அல்ல. அவர் பாடம் கற்றுக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை பெறுவார். இதுவொன்றும் பரிதாபத்திற்கு உரியதல்ல. எனினும் நாம் எல்லோருக்கும் கருத்துக்களை பரிமாற உரிமை உள்ளது’’ என்று டுவீட் செய்துள்ளார்.
    ஆஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அலெக்ஸ் கேரி ஆர்சரின் பவுன்சரை எதிர்கொள்ளும்போது தாடையை தாக்கியது.
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது அரையிறுதி ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    இங்கிலாந்தின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் டேவிட் வார்னர் (9), ஆரோன் பிஞ்ச் (0), பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் (4) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 4-வது விக்கெட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித் உடன் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தார்.

    8-வது ஓவரை ஜாப்ரா வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை அலெக்ஸ் கேரி எதிர்கொண்டார். பவுன்சராக வீசிய பந்து சற்றும் எதிர்பார்க்காத வகையில் அலெக்ஸ் கேரியின் ஹெல்மெட்டை தாக்கியது. அதில் ஹெல்மெட் கழன்றது. பந்து தாடையை பலமாக தாக்கியது. இதனால் அலெக்ஸ் ஹேரிக்கு ரத்தம் சொட்டியது.

    அணி இக்கட்டான நிலையில் இருந்ததால், அலெக்ஸ் கேரி முதலுதவி பெற்று ஆட்டத்தை தொடங்கினார்.
    உலகக்கோப்பைக்கான இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் இன்று நடைபெறும் 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
    இந்திய அணியின் நட்சத்திர வீரரான எம்எஸ் டோனி ஓய்வு குறித்து எங்களிடம் ஏதும் கூறவில்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்களை எட்ட முடியாமல் இந்தியா 221 ரன்னில் சுருண்டு 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டோனி கடைசி வரை போராடினார். ஆனால் 72 பந்தில் 50 ரன்கள் சேர்த்து ரன்அவுட் ஆனார்.

    ஜடேஜா ஒரு பக்கம் அதிரடியாக விளையாடிய போது, டோனி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரன்அவுட்டாகி வெளியேறும்போது மிகுந்த மன உளைச்சலுடன் வெளியேறினார். இதனால் அவர் ஓய்வு முடிவை அறிவிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது.

    விராட் கோலி கேன் வில்லியம்சன்

    ஆனால் போட்டி முடிந்த பின்னர் விராட் கோலி இதுகுறித்து கூறுகையில் ‘‘டோனி அவருடைய ஓய்வு குறித்து எங்களிடம் ஏதும் கூறவில்லை’’ என்றார். இதனால் எம்எஸ் டோனி ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
    ஜடேஜா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வெற்றியின் விளம்பிற்கு வந்த இந்தியா இறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது.
    இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.  டிரென்ட் போல்ட், ஹென்ரி தொடக்க ஓவர்களை வீசினர்.

    இருவரது பந்து வீச்சையும் எதிர்கொள்ள ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் திணறினர். 2-வது ஓவரை ஹென்ரி வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ரோகித் சர்மா 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த விராட் கோலி 3-வது ஓவரின் 4-வது பநதில் எல்.பி.டபிள்யூ ஆனார். 4-வது ஓவரின் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் ஆட்டமிழந்தார். மூன்று பேரும் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 3.1 ஓவரில் 5 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து பரிதாபத்திற்குள்ளானது.

    அடுத்து ரிஷப் பந்த் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடும் என்று ரசிர்கள் எதிர்பார்தத நிலையில் தினேஷ் கார்த்திக் 10-வது ஓவரின் கடைசி பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 24 ரன்கள் எடுத்திருந்தது.

    ஐந்தாவது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை மீட்க கடுமையாக போராடியது. இருவரும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து ரன்கள் சேர்த்தனர். இதனால் போட்டி மெதுவாக இந்தியா பக்கம் திரும்பியது.

    அப்போது நியூசிலாந்து சான்ட்னெரை களம் இறக்கியது. ரிஷப் பந்த் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சான்ட்னெர் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியா அப்போது 22.5 ஓவரில் 71 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பந்த் ஆட்டமிழந்ததும் போட்டி இந்தியா கையை விட்டு நழுவிச் சென்றது. ரிஷப் பந்த் - ஹர்திக் பாண்டியா ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 12.5 ஓவரில் 47 ரன்கள் சேர்த்தது.

    6-வது விக்கெட்டுக்கு  ஹர்திக் பாண்டியாவுடன் டோனி ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்த நிலையில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு சான்ட்னெர் பந்தில் கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 30.3 ஓவரில் 92 ரன்கள் எடுத்திருந்தது.

    7-வது விக்கெட்டுக்கு டோனியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். டோனி ஒரு பக்கத்தில் நிலைத்து நிற்க ஜடேஜா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 39 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    ஜடேஜாவின் அதிரடியால் போட்டி பரபரப்புக்குள்ளானது. ஓவருக்கு 10 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.

    கடைசி நான்கு ஓவரில் 42 ரன்கள் தேவைப்பட்டது. ஹென்ரி 47-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் இந்தியா ஐந்து ரன்களே எடுத்தது. நியூசிலாந்துக்கு இந்த ஓவர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

    நியூசிலாந்து கிரிக்கெட்

    இந்தியாவுக்கு கடைசி மூன்று ஓவரில் 37 ரன்கள் தேவைப்பட்டது.  48-வது ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். முதல் நான்கு பந்தில் ஐந்து ரன்களே எடுத்தனர். ஐந்தாவது பந்தை ஜடேஜா தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 59 பந்தில் 77 ரன்கள் சேர்த்தார்.

    49-வது ஓவரை பெர்குசன் வீசினார். முதல் பந்தை டோனி சிக்சருக்கு தூக்கினார். ஆனால் துரதிருஷ்டவசமாக 3-வது பந்தில் ரன்அவுட் ஆனார். அத்துடன் இந்தியாவின் தோல்வி உறுதியானது. டோனி 72 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார். கடைசி பந்தில் புவனேஷ்வர் குமார் போல்டானார்.

    கடைசி ஓவரில் சாஹல் ஆட்டமிழக்க இந்தியா 49.3 ஓவரில் 221 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
    ×