search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 15 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
    நாட்டிங்காம்:

    10 அணிகள் இடையிலான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நாட்டிங்காமில் நேற்று நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, வெஸ்ட்இண்டீசுடன் பலப்பரீட்சை நடத்தியது. ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள், வெஸ்ட் இண்டீசின் ஷாட்பிட்ச் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறினர். ஷெல்டன் காட்ரெல், ஒஷானே தாமஸ், ஆந்த்ரே ரஸ்செலின் பந்து வீச்சில் அனல் பறந்தது. சற்று எழும்பி வந்த பந்துகளில் கேப்டன் ஆரோன் பிஞ்ச் (6 ரன்), டேவிட் வார்னர் (3 ரன்), கவாஜா (13 ரன்) ஆகியோர் கேட்ச் ஆனார்கள். மேக்ஸ்வெல்லும் (0) பவுன்சர் பந்தில் சிக்கினார். மார்கஸ் ஸ்டோனிசும் (19 ரன்) நிலைக்கவில்லை.

    அப்போது ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்கு 79 ரன்களுடன் (16.1 ஓவர்) பரிதவித்தது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித்தும், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியும் இணைந்து அணியை வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுத்தனர். ஸ்கோர் 147 ரன்களாக உயர்ந்த போது அலெக்ஸ் கேரி 45 ரன்களில் (55 பந்து, 7 பவுண்டரி) அவுட் ஆனார். சுமித் 26 ரன்னில் வெளியேறி இருக்க வேண்டியது. அவருக்கு காட்ரெல் கேட்ச் வாய்ப்பை தவற விட்டார்.

    அடுத்து நாதன் கவுல்டர்-நிலே வந்தார். பவுலரான கவுல்டர்-நிலே திகைப்பூட்டும் வகையில் வெளுத்து வாங்கினார். அவரது பேட்டில் பட்ட பந்துகள் எல்லாம் தெறித்து ஓடின. இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் மளமளவென எகிறியது. 41 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் அடித்த முதல் அரைசதம் இது தான். அவர் 61 ரன்னில் வழங்கிய கேட்ச் வாய்ப்பை ஹெட்மயர் கோட்டை விட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அட்டகாசப்படுத்திய கவுல்டர்-நிலே, காட்ரெலின் பந்து வீச்சில் 2 சிக்சர்களை அடுத்தடுத்து விளாசினார்.



    மறுபக்கம் சூழ்நிலையை உணர்ந்து அவசரப்படாமல் ஆடிய ஸ்டீவன் சுமித் (73 ரன், 103 பந்து, 7 பவுண்டரி) 45-வது ஓவரில் பந்தை தூக்கியடித்த போது, அதை எல்லைக்கோடு அருகே காட்ரெல் ஒற்றைக்கையால் பிடித்து பிரமிக்க வைத்தார். வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை கலங்கடித்த நாதன் கவுல்டர்-நிலே 92 ரன்களில் (60 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார். உலக கோப்பை கிரிக்கெட்டில் 8-வது வரிசையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை கவுல்டர்-நிலே படைத்தார்.

    முடிவில் ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 288 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. கடைசி 9 ஓவர்களில் மட்டும் அவர்கள் 82 ரன்களை திரட்டினர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பிராத்வெய்ட் 3 விக்கெட்டுகளும், ரஸ்செல், காட்ரெல், தாமஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் எக்ஸ்டிரா வகையில் 24 வைடு உள்பட 27 ரன்களை வாரி வழங்கினர்.பின்னர் 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. இவின் லீவிஸ் ஒரு ரன்னில் கேட்ச் ஆனார். அதிரடி சூரர் கிறிஸ் கெய்ல், மிட்செல் ஸ்டார்க்கின் ஒரே ஓவரில் 2 முறை அவுட் ஆனார். இரண்டு முறையும் டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்து தப்பினார். கடைசியில் அதே ஸ்டார்க்கின் பந்து வீச்சிலேயே கெய்ல் (21 ரன், 17 பந்து, 4 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார். இந்த தடவை டி.ஆர்.எஸ். கைகொடுக்கவில்லை. அடுத்து வந்த ஷாய் ஹோப்பும், நிகோலஸ் பூரனும் பதற்றமின்றி ஆடி ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். பூரன் 40 ரன்னிலும், அவரைத் தொடர்ந்து இறங்கிய ஹெட்மயர் 21 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். நிலைத்து நின்று ஆடிய ஷாய் ஹோப் (68 ரன், 105 பந்து), ஆந்த்ரே ரஸ்செல் (15 ரன்) வெளியேறியதும் நெருக்கடி உருவானது.

    அதன் பிறகு கேப்டன் ஜாசன் ஹோல்டர் அணியை தூக்கி நிறுத்த போராடினார். அவர் ஆடிய விதம் வெற்றி யார் பக்கம் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு இருந்தது. கடைசி 5 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டதால் பரபரப்பு தொற்றியது. கைவசம் 4 விக்கெட் இருந்தது.இந்த சமயத்தில் பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க், ஒரே ஓவரில் பிராத்வெய்ட் (16 ரன்), ஹோல்டர் (51 ரன், 57 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆகியோரை காலி செய்தார். அத்துடன் வெஸ்ட் இண்டீசின் நம்பிக்கையும் தகர்ந்து போனது.

    50 ஓவர்கள் முழுமையாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 9 விக்கெட்டுக்கு 273 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 15 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 46 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். நடப்பு தொடரில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் இவர் தான். 92 ரன்கள் எடுத்த கவுல்டர்-நிலே ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
    நாட்டிங்காம்:

    இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று  நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ்சை எதிர்கொள்கிறது.

    இப்போட்டி நாட்டிங்காம் நகரில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

    இதையடுத்து ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்கிறது. ஆரோன் பிஞ்ச் , டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

    இப்போட்டியில் விளையாடும் இரு அணிகளின் வீரர்கள் விவரம் வருமாறு:

    ஆஸ்திரேலியா

    ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), நாதன் கொல்டர் நைல், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் சாம்பா.

    மேற்கிந்திய தீவுகள்

    கிறிஸ் கெயில், சாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), எவின் லீவிஸ், சிம்ரோன் ஹெட் மயர், நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லோஸ் பிராத்வெயிட், ஆஷ்லே நர்ஸ், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ்
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ரோகித் சர்மாவின் ஆட்டம் அற்புதமாக இருந்ததாகவும் அவரது சிறந்த ஒருநாள் போட்டி இன்னிங்ஸ் இது என்றும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார்.
    சவுதம்டன்:

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று சவுதம்டனில் நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா இந்தியாவின் அபார பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறியது.

    தொடக்கத்தில் பும்ராவின் வேகப்பந்து நன்கு எடுப்பட்டது. அவரது பந்தில் தொடக்க வீரரர்கள் அம்லா (6 ரன்), டி காக் (10) ஆகியோர் அவுட் ஆனார்கள்.

    அதன்பின் விக்கெட்டுகளை பறிகொடுக்க கூடாது என்று தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடினர். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் சாஹல், குல்தீப்யாதவ் கடும் நெருக்கடி கொடுத்தனர்.

    துஸ்சென் (22), டுபிஸிஸ் சிஸ் (38), மில்லர் (31) ஆகியோர் சாஹல் பந்திலும், டுமினி (3) குல்தீப் யாதவ் பந்திலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

    அதன்பின் பெலுக் வாயோ (34), கிறிஸ் மோரிஸ் (42) ஜோடி தாக்கு பிடித்து விளையாடியது. தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 227 ரன் எடுத்தது. இந்தியா தரப்பில் சாஹல் 10 ஓவர் வீசி 51 ரன் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    புவனேஸ்வர்குமார், பும்ரா தலா 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 228 ரன் இலக்கை நோக்கி இந்தியா விளையாடியது. ஆடுகளம் வேகப்பந்துக்கு நன்கு ஒத்துழைத்தது. அடிக்கடி பந்து பவுன்ஸ் ஆனது.

    தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, ஷிகர் தவான் பொறுமையாக விளையாடினர். ஆனால் தவான் 8 ரன்னிலும், கோலி 18 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

    அதன் பிறகு ரோகித் சர்மா- லோகேஷ் ராகுல் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக ரோகித் சர்மா தனது அனுபவத்தை வெளி காட்டினார்.

    ராகுல் 26 ரன்னிலும், டோனி 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் நிலைத்து நின்று விளையாடிய ரோகித் சர்மா சதம் அடித்தார். அவரது சிறந்த ஆட்டத்தால் இந்தியா 47.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 230 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


    ரோகித் சர்மா 122 ரன்னிலும், ஹர்த்திக் பாண்ட்யா 15 ரன்னிலும் அவுட் ஆகாமல் இருந்தனர். பந்து வீச்சுக்கு சாதகமான ஆடு களத்தில் ரோகித் சர்மா பொறுப்புடன் விளையாடி வெற்றி பெற வைத்தது பாராட்டும் வகையில் இருந்தது.

    வெற்றி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    எங்களை பொறுத்தவரை வெற்றியுடன் போட்டி தொடரை தொடங்கியிருப்பது முக்கியமானது. நாங்கள் ரன்-ரேட்டில் அதிக வித்தியாசம் பெறாமல் இருக்கலாம். ஆனால் இந்த ஆட்டத்தில் ஆடுகளம் எவ்வாறு பந்து வீச்சுக்கு ஒத்துழைக்காது என்பதை பார்க்க வேண்டும். இது கடும் சவாலாக இருந்தது.

    ரோகித் சர்மா ஆட்டம் அற்புதமாக இருந்தது. அவரது சிறந்த ஒருநாள் போட்டி இன்னிங்ஸ் இதுவாகும். பந்து வீசியபோது ஒரு குழுவாக நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம்.

    தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு நன்றாக இருந்ததால் பேட்டிங்கில் நாங்கள் கடினமாக உழைக்க வேண்டியது இருந்தது. ஆனால் ரோகித் சர்மா ஆட்டம் மிக மிக சிறப்பானது. அவருடன் லோகேஷ் ராகுல் இணைந்து நன்றாக பேட்டிங் செய்தார்.

    டோனி சிறந்த நிதானத்தை வெளிப்படுத்தி விளையாடினார். அதே போல் ஹர்த்திக் பாண்ட்யா ஆட்டத்தை சிறப்பாக முடித்தார்.

    பும்ராவின் பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாமல் திணறுகிறார்கள். அவர் கடும் நெருக்கடி கொடுத்து தவறு செய்ய வைத்து விக்கெட்டை வீழ்த்துகிறார். ஹசிம் அம்லா இதற்கு முன்பு இப்படி அவுட் ஆகி நான் பார்த்ததில்லை. சாஹல் அருமையாக பந்து வீசி விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுத்தார்.

    நாங்கள் வலுவான அணியாக பேட்டிங்கில் இருக்கிறோம். அதற்கு ஏற்ற வகையில் அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டு தொழில்முறை வெற்றியை பெற்று இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூ னார்.

    முதல் போட்டியிலேயே வெற்றி பெற்ற இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் வருகிற 9-ந்தேதி  மோதுகிறது.

    தென்ஆப்பிரிக்கா தான் மோதிய 3 ஆட்டங்களிலும் தோற்று உள்ளது.
    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஸ் டெய்லர் அதிரடியால் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    லண்டன்:

    இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் 7-வது நாளான இன்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டு விளையாடியது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து வங்காளதேசம் முதலில் பேட்டிங்  செய்தது.



    வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தமீம் இக்பால் 24 ரன்களுக்கும், சவுமியா சர்க்கார் 10 ரன்களுக்கும் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

    அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும்  நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த வங்காளதேச அணி, 244 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 64 ரன்களும், முகம்மது சைபுதின் 42 ரன்களும் குவித்தனர்.



    நியூசிலாந்து அணியின் சார்பில் ஹென்றி 4 விக்கெட்டும், டிரென்ட் போல்ட் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். 

    இதையடுத்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் குப்தில் மற்றும் காலின் முன்றோ களம் இறங்கினர்.  தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணி ஆட்டத்தின் 5.1 ஓவரில் ஷகிப் அல்-ஹசன் பந்து வீச்சில் மார்ட்டின் குப்தில்  25 (14) எடுத்திருந்த நிலையில் அவுட்டானார்.  அடுத்ததாக களம் இறங்கிய அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்த காலின் முன்றோ 24 (34) ஆட்டத்தின் 9.6 வது ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.   நியூசிலாந்து அணி வீரர் ராஸ் டெய்லர் மற்றும் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து தனது அணியின் ரன்களை குவிக்க தொடங்கினர்.  ஆட்டத்தின் 25 வது ஓவரில்  நியூசிலாந்து அணி வீரர்  ராஸ் டெய்லர் தனது அரை சதத்தை எட்டினார். 


    ஆட்டத்தின் 31.1 வது ஓவரில் ராஸ் டெய்லர் மற்றும் கேன் வில்லியம்சன் ஜோடியை பிரித்த வங்காளதேச அணி வீரர் மெஹிதி ஹசன்,  நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 40 (72) ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாக்கினார்.  அடுத்த வந்த டாம் லாதம் வந்த வேகத்தில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ஜேம்ஸ் நீஷம் மற்றும் ராஸ் டெய்லர் இருவரும் இணைந்து ரன்கள் எடுத்த நிலையில் மொசாடெக் ஹூசைன் பந்து வீச்சீல் ஆட்டத்தின் 38.3வது ஓவரில் ராஸ் டெய்லர் 91 பந்துகளை சந்தித்து 82 ரன்கள் எடுத்து அவுட்டானார்.  அதனை தொடர்ந்து காலின் டி கிராண்ட்ஹோம் 15 (13), ஜேம்ஸ் நீஷம் 25 (33), மேட் ஹென்றி 6 (8) ரன்கள் எடுத்தனர்.  இறுதியில் ஆட்டத்தின் 47.1  வது ஓவரில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 248 ரன்களை எடுத்தது.  இதன் மூலம் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வென்றது.  தொடர்ந்து களத்தில் நின்ற மிட்செல் சாண்ட்னர் 17 (12), லாக்ஸி பெர்குசன் 4 (3) ரன்கள் எடுத்தார்கள்.

    நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 82 ரன்களும், கேன் வில்லியம்சன் 40 ரன்களும் குவித்தனர்.

    வங்காளதேச அணியின் சார்பில் மெஹிதி ஹசன், ஷகிப் அல்-ஹசன், மொசாடெக் ஹூசைன், மொகமது சைபுதின் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.  

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் தமிழக வீரர்கள், சவுதாம்ப்டன் நகரில் உள்ள சென்னை தோசை கடைக்கு சென்று பாரம்பரிய தோசையை சாப்பிட்டனர்.
    சவுதாம்ப்டன்:

    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று வரும் இந்திய அணி வீரர்கள் சவுதாம்ப்டன் நகரில் தங்கி பயிற்சி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் சவுதாம்ப்டன் நகரில் உள்ள ‘சென்னை தோசா’ என்ற கடைக்கு, தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் மேலும் பயிற்சியாளர் ஷங்கர் பாசு மற்றும் குழு மேலாளர் சுனில் சுப்ரமணியம் ஆகியோர் சென்று தோசை சாப்பிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது. வீரர்கள் வந்த விவரம் தெரிய வர, அந்த கடையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.



    இதில் சிலர் அவர்களுடன் செல்பி மற்றும் புகைப்படம்  எடுத்துக் கொண்டனர், மேலும் உலகக் கோப்பை தொடர்பான செய்தி சேகரிக்க சென்றுள்ள இந்திய செய்தியாளர்களும் இந்த கடையில் குவிந்து வருகிறார்கள் என கூறப்படுகிறது
    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி ஆட்டக்காரர்களை பும்ரா வந்த வேகத்தில் வெளியேற்றினார்.
    சவுத்தாம்டன்:

    இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் 7-வது நாளான இன்று சவுத்தாம்டனில்  நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற  தென் ஆப்பிரிக்கா அணி  பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து  இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது.

    தொடக்க ஆட்டக்காரராக ஹஷிம் அம்லா மற்றும் குவின்டன் டி காக் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்தனர்.  

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹஷிம் அம்லா மற்றும் குவின்டன் டி காக் ஆகியோரது விக்கெட்களை பும்ரா அடுத்தடுத்து கைப்பற்றினர்.  

    பவர் பிளேயில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 5 ஓவர்களில் 13 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களை  கைப்பற்றியுள்ளார்.  தென் ஆப்பிரிக்கா அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 34 ரன்களுடன் ஆடிவருகின்றனர்.
    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பீல்டிங் செய்கிறது
    சவுத்தாம்ப்டன்:

    இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் 7-வது நாளான இன்று சவுத்தாம்ப்டனில்  நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற  தென் ஆப்பிரிக்கா அணி  பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து  இந்திய அணி முதலில் பந்து வீசுகிறது.

    தென் ஆப்பிரிக்கா தாங்கள் விளையாடிய 2 ஆட்டத்தில்  தோல்வியை சந்தித்து உள்ளதால் வெற்றிக் கணக்கை தொடங்க தீவிரம் காட்டும். இந்திய அணியும் முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்க முனைப்பு காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது என எதிர்பார்க்கலாம்.

    இந்திய அணி  உலக கோப்பை வென்ற இரு முறையும் தாங்கள் பங்கேற்ற முதல் ஆட்டத்தை வெற்றியோடு தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்போட்டியில் விளையாடும் இரு அணிகளின் வீரர்கள் வருமாறு: 

    இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், பும்ரா,  புவனேஷ்வர்குமார்.

    தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், அம்லா,  டு பிளசிஸ் (கேப்டன்), வான்டெர் துஸ்சென், டுமினி , தப்ரைஸ் ஷம்சி, டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், பெலக்வாயோ, ரபடா, இம்ரான் தாஹிர்.  
    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    கார்டிப்:

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், கார்டிப்பில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதியது. இதில் டாஸ் ஜெயித்த ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் விக்கெட் கீப்பர் குசல் பெரேராவும், கேப்டன் கருணாரத்னேவும் நேர்த்தியாக ஆடி அபாரமான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் (13.1 ஓவர்) திரட்டினர். கருணாரத்னே 30 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து திரிமன்னே வந்தார்.





    ஒரு கட்டத்தில் இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்கு 144 ரன்கள் (21.2 ஓவர்) எடுத்திருந்ததை பார்த்த போது அந்த அணி 300 ரன்களை சுலபமாக தாண்டும் போலவே தோன்றியது. ஆனால் சுழற்பந்து வீச்சாளர் முகமது நபி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை சாய்த்து திருப்பத்தை ஏற்படுத்தினார். அவரது பந்து வீச்சில் திரிமன்னே (25 ரன்) கிளன் போல்டு ஆனார். குசல் மென்டிஸ் (2 ரன்), மேத்யூஸ் (0) ஆகியோரும் அதே ஓவரில் வீழ்ந்தனர். அடுத்த ஓவரில் தனஞ்ஜெயா டி சில்வாவும் (0) வெளியேற்றப்பட்டார்.

    வெறும் 5 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை தாரைவார்த்ததால் இலங்கை அணி தடம்புரண்டது. ஒரு பக்கம் குசல் பெரேரா அரைசதம் அடித்து போராடிய போதிலும் மற்ற வீரர்கள் ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். குசல் பெரேரா 78 ரன்களில் (81 பந்து, 8 பவுண்டரி) கேட்ச் ஆனார். இலங்கை அணி 33 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பலத்த மழை பெய்ததால் ஆட்டம் 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 41 ஓவர் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 36.5 ஓவர்களில் 201 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் முகமது நபி 4 விக்கெட்டுகளும், ரஷித்கான், தவ்லத் ஜட்ரன் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

    பின்னர் மழை பாதிப்பு உள்ளிட்ட சூழலை கணக்கிட்டு ‘டக்வொர்த்-லீவிஸ்’ விதிமுறைப்படி ஆப்கானிஸ்தான் 41 ஓவர்களில் 187 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 44 ரன்களுக்குள் முகமது ஷாசத் (7 ரன்), ரமத் ஷா (2 ரன்), ஹஸ்மத்துல்லா ஷகிடி (4 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடியது.




    இதன் பிறகு இலங்கை பவுலர்கள் கொடுத்த நெருக்கடியில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களால் மீள முடியவில்லை. 32.4 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 152 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக நஜிபுல்லா ஜட்ரன் 43 ரன்கள் எடுத்தார்.

    இதன் மூலம் இலங்கை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர்கள் நுவான் பிரதீப் 4 விக்கெட்டுகளும், மலிங்கா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். நுவான் பிரதீப் ஆட்டநாயகன் விருது பெற்றார். தனது தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோற்று இருந்த இலங்கை அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். ஆப்கானிஸ்தானுக்கு 2-வது தோல்வியாகும்.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில், இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு 187 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது.
    கார்டிப்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது

    தொடக்க ஆட்டக்காரர்களான டிமுத் கருணரத்னே மற்றும் குசால் பெரேரா இருவரும் இலங்கை அணிக்கு சிறப்பான தொடக்கம் தந்து முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் குவித்தனர். அடுத்தடுத்து வந்த  இலங்கை பேட்ஸ்மேன்கள் ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் பந்து  வீச்சை எதிர் கொள்ள முடியாமல் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

    இலங்கை அணி  33 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது, இதனால் ஆட்டம் 41  ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

    மீண்டும் களம் இறங்கிய இலங்கை அணி 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக குசால் பெரேரா 78 ரன்களும், டிமுத் கருணரத்னே 30 ரன்களும் குவித்தனர்.



    ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நபி 4 விக்கெட்டும், தவ்லத் ஜட்ரன் மற்றும் ரஷித் கான் தலா, 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து டக்வொர்த் லெவிஸ் விதிப்படி, ஆப்கானிஸ்தான் அணி 41 ஓவர்களில் 187 ரன்கள் எடுக்க வேண்டும் என வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.
    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மோதும் முதல் ஆட்டம் சவுத்தம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி டுபெலிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் இரு அணிகளும் மோதும் சவுத்தம்ப்டனில்  உள்ள ரோஸ் பவுல்  மைதானத்தை குறித்து ஓர் அலசல்.

    தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையான ஆட்டம் நடைபெறும்  இந்த தி ரோஸ் பவுல் மைதானம் , தி ஏஜிஸ் பவுல் மைதானம் என்றும் அழைக்கப்படுகிறது.

    சவுத்தாம்ப்டனில் அமைந்திருக்கும் இந்த தி ரோஸ் பவுல் மைதானம், 2001 இல் நிறுவப்பட்டது. இந்த மைதானம் 6,500 ரசிகர்கள் அமர்ந்து கொள்ளலாம், இருப்பினும் 20,000 பேருக்கு தற்காலிகமாக அமர்ந்து ஆட்டத்தை ரசிப்பதற்க்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.

    ஏஜிஸ் பவுல் விருது பெற்ற வடிவமைப்பாளர்களான மைக்கேல் ஹாப்கின்ஸ் மற்றும் பார்ட்னர்ஸால் வடிவமைக்கப்பட்டது.



    இந்த உலகக் கோப்பையில், ரோஸ் பவுல் மைதானத்தில் மொத்தம் 5 போட்டிகளில் நடக்க உள்ளது. முன்னதாக,இங்கு 27 ஒரு நாள் சர்வதேச அரங்கில் நடத்தப்பட்டுள்ளது. இதில், 10 ஆட்டங்கள் சொந்த அணியும், 7 ஆட்டங்கள் சுற்றுப்பயண அணியும் வெற்றி பெற்றுள்ளது. 

    இந்த மைதானத்தில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக 373 ரன்கள் எடுத்த அதிகபட்ச ரன்கள் ஆகும். இந்த மைதானத்தில் குறைந்தபட்சமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக யுனைடெட் ஸ்டேஸ் 65 எடுத்துள்ளது.

    உலக கோப்பையை பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிரான தென்ஆப்பிரிக்கா 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வென்று இருக்கிறது.

    இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் செஞ்சேரியனில் நடந்த போட்டியில் மோதின. இதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    இதுவரை ரோஸ் பவுல்  மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருந்துள்ளது, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதும் ஆட்டத்திலும் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
    இலங்கை-ஆப்கானிஸ்தான் இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மழை குறுக்கீட்டால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வந்தது.

    இந்நிலையில் 33 ஆவது ஒவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சற்று நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.
    இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களான ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜேசன் ராய் இருவரும் ஆட்டத்தின் விதிகளை மீறியதால் போட்டி ஊதியத்தில் இருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டனில்  நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில்  இங்கிலாந்து அணியை விழ்த்தி பாகிஸ்தான் அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யும் போது 14வது ஓவரில் ஜேசன் ராய் கேட்ச் ஒன்றை தவற விட்டார். அப்போது அவர் தகாத வார்த்தையை பயன்படுத்தினர். இதனால் இவருக்கு  போட்டி ஊதியத்தில் இருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டது.



    மேலும் இதே ஆட்டத்தில் மற்றொரு இங்கிலாந்து வீரரான ஜோஃப்ரா ஆர்ச்சர், பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யும் போது 27வது ஓவரில் அவர் வீசிய பந்தை வைட் என நடுவர் தெரிவித்ததால் அதிருப்தி அடைந்தார். அத்துடன் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனவே இவருக்கு  போட்டி  ஊதியத்தில் இருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் , ராய் மற்றும் ஆர்ச்சர் ஆகியோரின் மீது ஒழுங்குமுறைப் பதிவுகளில் ஒரு சஸ்பென்ஷன் புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டு வருட காலத்திற்குள் நான்கு சஸ்பென்ஷன் புள்ளிகள் பெற்றால் அந்த வீரர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×