search icon
என் மலர்tooltip icon

    டெல்லி

    • பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சென்றிருந்தபோது மூன்று குடும்பங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.
    • இவ்வாறு குற்றம்சாட்டியது அவர் ஏற்கனவே தோல்வியை ஒப்புக்கொண்டதை காட்டுகிறது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீர் பகுதியில் உள்ள 16 தொகுதிகள், ஜம்முவில் உள்ள 8 தொகுதிகள் என மொத்தம் 24 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் காலையில் இருந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாஜக தோற்கடிக்கப்படும் என ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அசோக் கெலாட் கூறுகையில் "மனநிலை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறது. பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சென்றிருந்தபோது மூன்று குடும்பங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இவ்வாறு குற்றம்சாட்டியது அவர் ஏற்கனவே தோல்வியை ஒப்புக்கொண்டதை காட்டுகிறது. பாஜக ஜம்மு-காஷ்மீரில் தோற்கடிக்கப்படும்.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை பயங்கரவாதி என பாஜக தலைவர் குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த விசயத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மவுனம் காத்து வருகின்றனர்" என்றார்.

    • மணிப்பூர் மாநில முதல்வர் இன்னும் ஏன் பதவியில் நீடிக்கிறார்?
    • பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்வாரா? என நிருபர் கேள்வி எழுப்பினார்.

    பிரதமர் மோடியை 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ளார். அவர் 3-வது முறையாக பதவி ஏற்று நேற்றுடன் 100 நாள் நிறைவடைந்தது. 100 நாட்களில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகள், நாட்டின் வளர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்கள் பேசிக்கொண்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர் அமித் ஷாவிடம் "வன்முறை தொடர்ந்து நடைபெறும் மணிப்பூர் மாநிலத்தில் முதல்வராக பிரேன் சிங் தொடர்ந்து நீடித்து வருவது ஏன்?" எனக் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அமித் ஷா "நீங்கள் கேள்விகள் கேட்க முடியும். ஆனால் விவாதம் கூடாது" என்றார்.

    மேலும், "பிரதமர் மோடி அவரது 75-வது பிறந்தநாளை முன்னிட்டு மணிப்பூருக்கு செல்வாரா?" என்று கேள்வி கேட்டார். அதற்கு "அதுபோன்ற முடிவு ஏற்பட்டால், கட்டாயம் உங்களுக்கு தெரியும்" என அமித் ஷா பதில் அளித்தார்.

    மணிப்பூர் கடந்த ஆண்டு மே மாதம் முதல் இரண்டு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்து தற்போது வரை நீடித்து வருகிறது. இந்த வன்முறைக்கு 230-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் இருப்பிடத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

    கடந்த இரண்டு வாரங்களாக மோதல் அதிகரித்துள்ளது, கிளர்ச்சி குழுக்கள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    • ஏலம் விடப்பட்டு கிடைக்கும் நிதியின் ஒருபகுதி ராணுவ வீரர்கள், சுதந்திரபோராட்ட வீரர்களின் நலனுக்காக வழங்கப்படுகிறது.
    • பரிசாக கிடைத்த 600-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் ஏலத்தில் இடம் பெற்றுள்ளன.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடிக்கு பரிசாக அளிக்கப்பட்ட பொருட்கள் அவ்வப்போது மின்னணு முறையில் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியின் ஒருபகுதி ராணுவ வீரர்கள், சுதந்திரபோராட்ட வீரர்களின் நலனுக்காக வழங்கப்படுகிறது.

    நேற்று பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, 6-வது முறை ஏலம் விடும் நிகழ்வு தொடங்கியது. இந்த முறை அவருக்கு பரிசாக கிடைத்த 600-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் ஏலத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த ஏலம் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின்னணு ஏலத்தில் பங்கேற்க, https://pmmementos.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    • தங்கம் இறக்குமதி கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 41 ஆயிரத்து 309 கோடி ரூபாயாக இருந்தது.
    • சுவிட்சர்லாந்தில் இருந்து அதிகபட்சமாக 40 சதவீத தங்கம் இறக்குமதியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    தங்கம் இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி கடந்த பட்ஜெட்டில் 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக தங்கம் விலை சரிவடைந்தது. 2 மாதங்களுக்கும் மேலாக விலை குறைந்திருந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் பவுன் ரூ.55 ஆயிரத்தை எட்டி இருக்கிறது.

    இந்த நிலையில், தங்க இறக்குமதி கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருமடங்கிற்கும் அதிகமாக இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    தங்கம் இறக்குமதி கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 41 ஆயிரத்து 309 கோடி ரூபாயாக இருந்தது. அது இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 84 ஆயிரத்து 296 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது இரு மடங்கிற்கும் கூடுதலாகும்.

    சுவிட்சர்லாந்தில் இருந்து அதிகபட்சமாக 40 சதவீத தங்கம் இறக்குமதியாகி உள்ளது. அதை தொடர்ந்து அமீரகத்தில் இருந்து 16 சதவீதமும், தென்னாப்பிரிக்காவில் இருந்து 10 சதவீதமும் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.

    மத்திய வர்த்தகத் துறை வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்று உள்ளன.

    • ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி 5வது முறையாக வென்றது.
    • கோப்பை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்தது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    இதில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை சாய்த்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    மற்றொரு அரையிறுதியில் சீனா 2-0 என்ற கணக்கில் மூன்று முறை சாம்பியனான பாகிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.

    இதற்கிடையே, நேற்று மாலை நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா, சீனா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது இந்திய அணி. ஜுக்ராஜ் சிங் ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.

    பதில் கோல் அடிக்க சீனா தொடர்ந்து முயற்சித்தும் அதில் பலனில்லை. இதனால் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

    அணியினரின் குறிப்பிடத்தக்க செயல்பாடு, ஈடு இணையற்ற மனவுறுதி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

    • பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட சஞ்சய் ராயிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

    புதுடெல்லி:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆகஸ்ட் 9-ம் தேதி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்ற குற்றவாளியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

    மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி அம்மாநிலத்தில் மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை அறிக்கையை நாங்கள் பார்த்துள்ளோம். சி.பி.ஐ. வெளிப்படுத்தியிருப்பது உண்மையிலேயே கவலை அளிக்கிறது.. படித்ததைக் கண்டு நாமே கலக்கம் அடைந்துள்ளோம். விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என்பதால் விவரங்கள் வெளியிடப்படவில்லை என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

    • குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இம்மாதம் அமெரிக்கா செல்கிறார்.
    • 22-ம் தேதி இந்திய வம்சாவளி மக்களுடன் கலந்துரையாடுகிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 21-ம் தேதி அமெரிக்காவுக்குச் செல்கிறார். வரும் 21, 22, 23 ஆகிய 3 நாள்கள் அவர் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

    இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

    இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் வில்மிங்டனில் 21-ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

    செப்டம்பர் 22-ம் தேதி நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்துப் பேச உள்ளார்.

    செப்டம்பர் 23-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் உலகத் தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் உரையாற்றுகிறார்.

    இந்த நிகழ்ச்சியின்போது பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் பிரதமர் மோடி ஈடுபட உள்ளார் என தெரிவித்துள்ளது.

    • பிலிப்பைன்சில் யாகி புயல் உருவானது.
    • இந்தப் புயல் வியட்நாமை கடுமையாக தாக்கியது.

    புதுடெல்லி:

    பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் வியட்நாம், வடக்கு தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளை தாக்கியது. இதில் வியட்நாமில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

    இதேபோல், யாகி புயலால் மியான்மரில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 74 பேர் பலியாகினர். புயலால் பாதிப்பு அடைந்த அரசுகளுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா இரங்கல் தெரிவித்தது.

    இதற்கிடையே, புயலால் பாதிக்கப்பட்ட மியான்மர், வியட்நாம், லாவோஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆபரேஷன் சத்பவ் திட்டம் மூலம் இந்தியா நிவாரண பொருள்களை அனுப்பி வைத்தது.

    இந்நிலையில், யாகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மியான்மருக்கு ஆபரேஷன் சத்பவ் திட்டம் மூலம் இரண்டாவது கட்டமாக 32 டன் நிவாரண பொருள்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

    இதில் ஜெனரேட்டர், தற்காலிக டென்ட், சூரிய விளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்கள் அடங்கும் என தெரிவித்துள்ளது.

    • இது தவுறுத்தலாக நடந்துவிட்டது என்று மக்களவையில் அமித் ஷா கூறியிருந்தார்
    • 30 ராணுவ வீரர்கள் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வந்தது

    டிசம்பர் 4, 2021 - நாஜிலாந்தில் மோன் [mon] மாவட்டத்தில் உள்ள ஓடிங் [Oting] கிராமத்தில் சுரங்க பணியாளர்களை ஏற்றிச் சேர டிரக் வாகனத்தின் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஊடுருவல்காரர்கள் என நினைத்துத் தவறுதலாகத் தாக்கியதாக ராணுவ வீரர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில் ராணுவ வீரர்களின் முகாம்கள் முன்னர் திரண்டு 250 க்கும் மேற்பட்ட உள்ளூர் வாசிகள் போராட்டம் நடத்தினர்.

    இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தது. இது தவுறுத்தலாக நடந்துவிட்டது என்று மக்களவையில் அமித் ஷா கூறியிருந்தார். மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்துத் தாக்குதலில் தொடர்புடைய 30 ராணுவ வீரர்கள் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் 30 ராணுவ வீரர்கள் மீதான கிரிமினல் வழக்கையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

    மேலும் அவர்கள் மீது ராணுவத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறு செய்த ராணுவ வீரர்கள் மீதான கிரிமினல் வழக்கு நீக்கம் நாட்டில் பொதுமக்களின் உயிர்கள் மீதான மதிப்பு இவ்வளவுதானா என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

    • ராகுல் காந்தியை நம்பர் 1 பயங்கரவாதி என்று கூறியுள்ளனர்
    • ராகுலின் நாக்கை அறுத்து வருபவருக்கு ரூ.11 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.

    பாஜகவினருக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்க பயணம் மேற்கொண்ட நிலையில் அங்கு இந்தியாவில் உள்ள சூழல் குறித்து விமர்சித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாஜக அமைச்சர்கள் மற்றும் பிற தலைவர்கள் ராகுல் காந்தியை கடுமையாக சாடினர்.

    ராகுல் காந்தியை இந்தியாவின் முதன்மையான பயங்கரவாதி என்றும் அவரின் நாக்கை அறுத்து வருபவருக்கு பரிசுத் தொகை அளிப்பதாக அறிவிக்கும் அளவுக்கு பாஜக தலைவர்கள் கடுமையாக பேசியிருத்த நிலையில் இதை கண்டித்து கார்கே தற்போது மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    கார்கே தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது,

    நமது நாட்டின் ஜனநாயகத்துக்கும் அரசியலமைப்புக்கும் ஏற்பட்டுள்ள நேரடி பிரச்சனையை உங்களின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். சமீபத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது கூறப்பட்ட ஆட்சேபனைக்குரிய வன்முறையான கருத்துக்கள் கூறப்பட்டது உங்களின் கவனத்துக்கு வந்திருக்கும். மத்திய ரெயில்வே இணை அமைச்சர் [ரவ்நீத் பிட்டு], உத்தரப்பிரதேசம் பாஜக அமைச்சர்[ரகுராஜ் சிங்], ஆகியோர் ராகுல் காந்தியை நம்பர் 1 பயங்கரவாதி என்று கூறியுள்ளனர். உங்களின் கட்சியை சேர்ந்த மகாராட்டிர எம்.எல்.ஏ ராகுலின் நாக்கை அறுத்து வருபவருக்கு ரூ.11 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.

    டெல்லி பாஜக முன்னாள் எம்.எல்.ஏ, ராகுலின் பாட்டிக்கு ஏற்பட்ட விதிதான் ராகுலுக்கு ஏற்படும் என்று மிரட்டியுள்ளார். உலகத்துக்கு அகிம்சையையும், அன்பாயும் போதிக்கும் இந்தியாவில் பொது வாழ்கையில் இருப்பவர்கள் எப்படி கண்ணியத்துடன் இருக்க வேண்டும் என்று காந்தி உள்ளிட்ட தலைவர்கள் உதாரணமாக விளங்கினர். ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இடையே உள்ள பிரச்சனைகள் ஆரோக்கியமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும்.

    ஆனால் தற்போது பாஜக தலைவர்கள் பரப்பி வரும் வெறுப்பு நாட்டுக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கருத்துக்களை வெளியிட்ட பாஜக தலைவர்கள் மீது நீங்கள் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . வருகாலங்களில் உங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் இதுபோல பேசாமல் இருக்க அவர்களுக்கு மரியாதையையும் ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    • அதே நாளில் அவர் திகார் சிறையில் இருந்தும் விடுதலை ஆனார்.
    • கல்வி அமைச்சர் அதிஷி டெல்லி முதல்வர் பதவிக்கு ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டார்.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 13 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அவரை ஜாமினில் விடுதலை செய்தது. அதே நாளில் அவர் திகார் சிறையில் இருந்தும் விடுதலை ஆனார்.

    கடந்த 15-ந்தேதி, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 48 மணி நேரத்துக்குள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து இருந்தார். மக்கள் தீர்ப்பளிக்காமல் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமரப்போவதில்லை என்று தெரிவித்த கெஜ்ரிவால், சட்டமன்றத் தேர்தலை வருகிற நவம்பர் மாதமே நடத்த வலியுறுத்தினார்.

    இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு, ஒரு மூத்த தலைவர் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அதன்படி இன்று காலை நடந்த ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அடுத்த தேர்தல் வரும் வரை கல்வி அமைச்சர் அதிஷி டெல்லி முதல்வர் பதவிக்கு ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டார்.

    ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு பின் டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இன்று மதியம் அதிஷி மற்றும் மணீஷ் சிசோடியா உடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் வி.கே சக்சேனாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.

    முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க சக்சேனாவிடம் அதிஷி உரிமை கோரியுள்ளார். மேலும், இதற்கான கடிதத்தை அவர் துணை நிலை ஆளுநரிடம் வழங்கியுள்ளார். 

    • இன்று காலை நடந்த ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிஷி டெல்லி முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்
    • அதிஷி மற்றும் மணீஷ் சிசோடியா உடன் ஆளுநர் மாளிகைக்கு சென்றார் அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூன் 26-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவ்வழக்கில் கடந்த 13-ந்தேதி உச்சநீதிமன்றம் அவரை ஜாமினில் விடுதலை செய்தது. அதே நாளில் அவர் திகார் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

    கடந்த 15-ந்தேதி, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 48 மணி நேரத்துக்குள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். மக்கள் தீர்ப்பளிக்காமல் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமரப்போவதில்லை என்று சூளுரைத்த கெஜ்ரிவால் சட்டமன்றத் தேர்தலை வரும் நவம்பர் மாதமே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு, ஒரு மூத்த தலைவர் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவித்தார்.

    இந்நிலையில் இன்று டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார் கெஜ்ரிவால். இன்று மதியம் அதிஷி மற்றும் மணீஷ் சிசோடியா உடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் வி.கே சக்சேனாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.


    ×