search icon
என் மலர்tooltip icon

    டெல்லி

    • டெல்லி துணை முதல்வராக இருந்து மணிஷ் சிசோடியோ ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
    • கட்சியில் இருந்து வெளியேறும்படி பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அம்மாநில துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில் ஜாமின் பெற்று விடுதலை ஆனார்.

    தற்போது கெஜ்ரிவாலும் ஜாமின் பெற்ற நிலையில், மக்கள் தங்களை தூய்மையானவர்கள் என்று அழைக்கும்வரை நானும், மணிஷ் சிசோடியாகவும் பதவி ஏற்கமாட்டோம் எனத் தெரிவித்ததோடு முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில் மக்கள் நீதிமன்றத்தில் தங்களை குற்றமற்றவர்கள என நிரூபிக்க பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார்கள்.

    மணிஷ் சிசோடியா பேசும்போது, தனது மகன் கல்வி கட்டண உதவிக்காக பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மணிஷ் சிசோடியா கூறியதாவது:-

    2002-ல் நான் பத்திரிகையாளராக இருந்தபோது, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் பிளாட் வாங்கினேன். அது என்னிடம் இருந்து பறிக்கப்பட்டது. எனது அக்கவுண்டில் 10 லட்சம் ரூபாய் இருந்தது. அதுவும் எடுக்கப்பட்டது. என்னுடைய மகன் கல்விக்கட்டணம் உதவிக்காக பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என்னுடைய மகனுக்கு கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தேன். ஆனால் அமலாக்கத்துறை என் அக்கவுண்ட்-ஐ முடக்கியது.

    பா.ஜ.க.-வுக்கு மாறும்படி என்னிடம் வற்புறுத்தப்பட்டது. அவர்கள் என்னை ஜெயலில் கொன்றுவிடுவார்கள் எனக் கூறினார்கள். என்னைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும், அரசியலில் யாரும் யாரைப் பற்றியும் நினைப்பதில்லை என்றும் கூறினார்.

    என் குடும்பம், என் நோய்வாய்ப்பட்ட மனைவி, கல்லூரியில் படிக்கும் என் மகன் பற்றி யோசிக்கச் சொன்னார்கள். அப்போது நான் ராமரிடம் இருந்து லட்சுமணனை தனியாக பிரிக்க முயற்சி செய்கிறீர்கள். உலகில் எந்த ராவணனுக்கும் எந்த அதிகாரம் கிடையாது. 26 வருடங்களாக அரவிந்த் கெஜ்ரிவால் என்னுடைய சகோதரர் மற்றும் அரசியல் ஆலோசகர். அவர்கள் எங்களை கட்சியில் இருந்து பிரிக்கவே, கட்சியை உடைக்கவோ முடியவில்லை.

    இவ்வாறு மணிஷ் சிசோடியா தெரிவித்தார்.

    • கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட இந்திய பழங்கால பொருட்களின் எண்ணிக்கை 640 ஆக உயர்ந்துள்ளது.
    • சமணர் தீர்த்தங்கரர் வெண்கல சிலை, விநாயகர் வெண்கல சிலை, நின்ற நிலையில் உள்ள புத்தர் சிலை, விஷ்ணு சிலை உள்ளிட்டவை அடங்கும்.

    பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேசினார்.

    இந்தியா-அமெரிக்கா இடையே கடந்த ஜூலை மாதம், கலாசார சொத்து பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, இரு நாடுகளில் எந்த நாட்டில் இருந்து பழங்கால கலைப்பொருட்கள் மற்றொரு நாட்டுக்கு கடத்திச் செல்லப்பட்டாலும், அந்த நாட்டிடமே அவற்றை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

    இந்த ஒப்பந்தப்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்திச் செல்லப்பட்ட 297 பழங்கால பொருட்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது. பிரதமர் மோடி அமெரிக்காவில் இருக்கும்போதே இந்நிகழ்வு நடந்துள்ளது.

    இதற்காக ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    கலாசார தொடர்பை வலுப்படுத்தவும், சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தவும் உதவும் நடவடிக்கையாக, 297 பழங்கால பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைப்பதை அமெரிக்க அரசு உறுதி செய்துள்ளது.

    இதற்காக ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவை இந்தியாவின் சரித்திர கலாசார பொருட்கள் மட்டுமின்றி, அதன் நாகரிகத்தின் ஒரு அங்கம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இத்துடன், கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட இந்திய பழங்கால பொருட்களின் எண்ணிக்கை 640 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில், அமெரிக்காவிடம் இருந்து மட்டும் 578 பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

    இந்த பொருட்களில், சமணர் தீர்த்தங்கரர் வெண்கல சிலை, விநாயகர் வெண்கல சிலை, நின்ற நிலையில் உள்ள புத்தர் சிலை, விஷ்ணு சிலை உள்ளிட்டவை அடங்கும்.

    ஆனால், முந்தைய ஆட்சிக்காலத்தில், 2004-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை ஒரே ஒரு பழங்கால பொருள் மட்டுமே மீட்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    • செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா தங்கம் வென்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
    • இந்த சாதனை இந்தியாவின் விளையாட்டுப் பாதையில் ஒரு புதிய அத்தியாயம் என்றார்.

    புதுடெல்லி:

    ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்த 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. போட்டி முடிவில் ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது.

    செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தனர்

    இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 45-வது பிடே செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நமது செஸ் அணி வெற்றி பெற்றதால் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கம் வென்ற ஆண்கள் மற்றும் பெண்கள் சதுரங்க அணிகளுக்கு வாழ்த்துக்கள். இந்தக் குறிப்பிடத்தக்க சாதனை இந்தியாவின் விளையாட்டுப் பாதையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

    • டெல்லியின் ஜந்தர்மந்தர் பகுதியில் ஆம் ஆத்மி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
    • இதில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் ஜந்தர்மந்தர் பகுதியில் ஆம் ஆத்மி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார்.

    அப்போது, பிரதமர் மோடியை கடுமையாக சாடிய அவர், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்திற்கு 5 கேள்விகளை எழுப்பினார்.

    அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்டோர் 75 வயதில் ஓய்வு பெற்றனர். பா.ஜ.க.வின் இந்த விதி மோடிக்கு பொருந்தாது என அமித் ஷா கூறியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

    எதிர்க்கட்சியில் இருக்கும் தலைவர்களை ஊழல்வாதிகள் என பா.ஜ.க. அழைக்கிறது. பின், அவர்களையே கட்சியில் இணைத்துக் கொள்கிறது. இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

    பா.ஜ.க.வுக்கு ஆர்.எஸ்.எஸ். தேவையில்லை என அக்கட்சி தலைவர் நட்டா கூறிய போது, நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?

    விசாரணை அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சிகளை உடைத்து, ஆட்சியை கவிழ்த்து பா.ஜ.க. தற்போது செய்து வரும் அரசியல், உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா?

    பா.ஜ.க.வின் தாய் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். தன் குழந்தை தவறு செய்யும்போது கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு தாய்க்கு உள்ளது. மகன் தற்போது பெரிய மனிதராகி விட்டார். அவர் தவறு செய்யும் போது அதை தட்டிக் கேட்க வேண்டியது உங்கள் பொறுப்பு இல்லையா? என்றார்.

    • லட்டு பிரசாதம் தயாரிப்பதில் விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • அரசியல் ஆதாயங்களுக்காக இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில்அதிக அளவில் கலப்படம் செய்திருப்பதாகவும், விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    ஆய்வக அறிக்கையை சுட்டிக்காட்டி சமீபத்தில் பேசிய முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசு திருப்பதி லட்டு பிரசாதத்திலும் முறைகேடு செய்துள்ளது. அந்த ஆட்சியில் வழங்கப்பட்ட லட்டுவில் நெய்யில் கலப்படம் செய்ததோடு மட்டுமின்றி, விலங்கு கொழுப்பையும் சேர்த்துள்ளனர் என குற்றம் சாட்டினார்.

    இந்த விவகாரம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், மாநில அரசியலிலும் கடும் புயலை கிளப்பியது.

    அரசியல் ஆதாயங்களுக்காக இந்தக் கொடூர குற்றச்சாட்டுகளை நாயுடு சுமத்துகிறார் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இதற்காக ஆய்வக அறிக்கையை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி பரப்புவதாகவும் கூறியுள்ளது.

    இந்நிலையில், திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்து சேனா தலைவரும் விவசாயியுமான சுர்ஜித் சிங் யாதவ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தவேண்டும்.

    திருமலை வெங்கடேஸ்வரா கோவிலில் பக்தர்களுக்கு நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதத்தை வழங்கியதன் மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்து மதத்தை அவமதித்துள்ளது. இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளது.

    லட்டு பிரசாதம் தயாரிப்பதில் விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு இந்து சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி உள்ளது. இந்துக்களின் உணர்வுகள் மற்றும் மத உணர்வுகளை கொந்தளிக்கச் செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

    • இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக வெற்றி பெற்றுள்ளார்.
    • இதன்மூலம் அவர் இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்கிறார்.

    புதுடெல்லி:

    இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயக வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் இலங்கையின் 9-வது அதிபராக நாளை காலை 9 மணிக்கு அனுர குமார திசநாயக பதவியேற்கிறார்.

    அதிபர் தேர்தல் வெற்றியை தொடர்ந்து, நாம் ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம் என அனுர குமார திசநாயக தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அனுர குமார திசநாயகவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள். இந்தியாவின் அண்டை நாடுகளில் பாலிசி மற்றும் விஷன் சாகர் ஆகியவற்றில் இலங்கை சிறப்பு இடம் பெற்றுள்ளது. இந்திய மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக எமது பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், உங்களுடன் நெருக்கமாக பணியாற்றவும் ஆவலாக உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

    • போட்டி முடிவில் ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது.
    • செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய அணிக்கு வாழ்த்து.

    ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.

    போட்டி முடிவில் ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது.

    செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தனது முதல் தங்கப் பதக்கத்தை ஓபன் பிரிவில் வென்றதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

    குகேஷ் தொம்மராஜு, அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, பிரக்ஞானந்தா ரமேஷ்பாபு, பெண்டலா ஹரிகிருஷ்ணா, ஸ்ரீநாத் நாராயணன் மற்றும் அவர்களது குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் குறிப்பிடத்தக்க திறமை, சிறந்த உத்திகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை பலனளித்துள்ளன.

    நீங்கள் அனைவரும் சிறப்பாக தொடர வாழ்த்துகிறேன். உங்களின் பொன்னான வெற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.

    ஜெய் ஹிந்த் என குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு பதிவில்:

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவுக்கு இரட்டை தங்கம்.

    எங்கள் சாம்பியன்களான திவ்யா தேஷ்முக், ஆர் வைஷாலி, டி ஹரிகா, தானியா சச்தேவ், வந்திகா அகர்வால், அவர்களின் கேப்டன் அபிஜித் குண்டே மற்றும் அவர்களது அணிகள் குறித்து நம்பமுடியாத பெருமை. உங்கள் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    உங்கள் புத்திசாலித்தனம், குழுப்பணி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த குறிப்பிடத்தக்க வெற்றியை சாத்தியமாக்கியுள்ளன. இந்தியாவின் மகள்கள் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம் மற்றும் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறீர்கள்.

    இந்தியாவிற்கு ஒரு உண்மையான வரலாற்று நாள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 10 வருடங்களாக முதல்வர் பதவியில் இருந்தும் இதன்பிறகு செல்வதற்கு எனக்கென ஒரு வீடு கூட இல்லை.
    • நேர்மையானவனாக இல்லையென்றால் மருத்துவமனைகளில் சிகிச்சைகளை இலவசமாகியிருக்க முடியுமா?

    டெல்லி 

    டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் 6 மாதங்கள் கழித்து ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில் தனது முதல்வர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து அம்மாநில கல்வி அமைச்சர் அதிஷி நேற்றைய தினம் டெல்லி முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் இன்று ஜந்தர் மந்தரில் நடந்த ஜனதா கி அதாலத் நிகழ்வில் பங்கேற்று பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீது ஊழல் பலி போட பிரதமர் மோடி சதி செய்வதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

     

    வீடு இல்லை..

    'கடந்த 10 வருடங்களாக டெல்லி அரசை நேர்மையாக நடத்தி வந்தேன். எனவே என்னை ஜெயிக்க ஒரே வழி எனது நேர்மையின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதுதான் என்று மோடி கண்டுகொண்டார். எனக்கு நாற்காலி பசி இல்லை. எனவே நான் ராஜினாமா செய்தேன். நான் இங்கே பணம் சம்பாதிக்க வரவில்லை. நாட்டின் அரசியலை மாற்ற வந்தேன். இன்னும் ஓரிரு நாட்களில் நான் எனக்கு வழங்கப்பட முதலமைச்சர் குடியிருப்பை விட்டு வெளியேறுவேன். 10 வருடங்களாக முதல்வர் பதவியில் இருந்தும் இதன்பிறகு செல்வதற்கு எனக்கென ஒரு வீடு கூட இல்லை. பாஜக என்னை ஊழல்வாதி என்று கூறிவருவதால் நான் சோகத்தில் தவித்து வருகிறேன்.

    யார் திருடர்கள்?

    இந்த அர்விந்த் கெஜ்ரிவால் நேர்மையானவனாக இல்லையென்றால் இலவச மின்சாரம் வழங்கியிருக்க முடியுமா?, நேர்மையானவனாக இல்லையென்றால் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் கொண்டுவந்திருக்க முடியுமா? குழந்தைகளுக்குத் தரம் வாய்ந்த பள்ளிகளைக் கட்டித் தந்திருக்க முடியுமா? மருத்துவமனைகளில் சிகிச்சைகளை இலவசமாகியிருக்க முடியுமா? தற்போது 22 மாநிலங்களில் பாஜக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. அந்த மாநிலங்களில் ஒன்றிலாவது இலவச மின்சாரமும் ,பெண்களுக்கு இலவச பேருந்து பயணமும் கொண்டுவந்திருக்கிறார்களா? இப்போது சொல்லுங்கள் நான் திருடனா? இல்லை என்னை சிறைக்கு அனுப்பியவர்கள் திருடர்களா என்று சரமாரியாகக் கேள்வியெழுப்பியுள்ளார்.

    • அன்னா செபாஸ்டியனின் மரணத்திற்கு காரணம் பணிச்சுமை தான் என அவரது தாயார் அனிதா கடிதம் எழுதியுள்ளார்.
    • அன்னாவின் இறுதிச்சடங்குக்குக்கூட நிறுவனத்தில் இருந்து யாரும் வரவில்லை.

    எர்ன்ஸ்ட் & யங் (EY) நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அன்னா செபாஸ்டியன் (26) என்ற இளம்பெண் பணிச்சுமை காரணமாக உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த அன்னா செபாஸ்டியனின் மரணம் கார்ப்பரேட் ஊழியர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அன்னா செபாஸ்டியனின் மரணத்திற்கு காரணம் பணிச்சுமை தான் என அவரது தாயார் அனிதா எர்ன்ஸ்ட் & யங் இந்தியா தலைவர் ராஜீவ் மேமானிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அன்னாவின் தாயார் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி பலரும் அந்நிறுவனத்தைக் கடுமையாக விமர்சித்த நிலையில், இதனை வழக்காக எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உறுதியளித்துள்ளது

    இந்த விவகாரம் தொடர்பாக எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அன்னாவின் தாயார் எழுதிய கடிதத்தைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், அன்னா செபாஸ்டியனின் அகால மரணத்தால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். மேலும் அன்னாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அன்னாவின் பெற்றோரிடம் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வீடியோ காலில் பேசி இரங்கல் தெரிவித்தார்.

    கார்ப்பரேட் அலுவலகங்களில் உள்ள பணிச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் ராகுல்காந்தி உறுதியளித்தார்.

    • டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
    • அதிஷிக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் பின்னர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    பிறகு டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

    அதிஷிக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதிஷியுடன் சௌரம் பரத்வாஜ் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

    முதல்வராக பதவியேற்ற பின்பு அரவிந்த் கெஜ்ரிவால் காலில் விழுந்து அதிஷி ஆசீர்வாதம் வாங்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மன்மோகன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
    • மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள மூன்று நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம்.

    சென்னை உள்ளிட்ட 8 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி, டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மன்மோகன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ராஜீவ் சக்தேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுரேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திர பிரசன்ன முகர்ஜி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    கேரளா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நிதின் மதுகர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    ஜம்மு காஷ்மீர், லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஷி ரப்ஸடன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எஸ்,ராமச்சந்திர ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான கே.ஆர்.ஸ்ரீராமை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

    பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதால், மூத்த நீதிபதி கிருஷ்ணகுமார், பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார்.

    இதேபோல், மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள மூன்று நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி, மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள ஆர்.பூர்ணிமா, ஜோதிராமன், அகஸ்டின் தேவதாஸ் மரியா ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • அதிஷிக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
    • அதிஷியுடன் 5 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

    டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் பின்னர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    பிறகு டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

    அதிஷிக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    அதிஷியுடன் சௌரம் பரத்வாஜ் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

    இந்த பதவியேற்பு விழாவில் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

    ×