search icon
என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • அரசின் நலத்திட்டங்கள் ஏழைகளுக்கு மட்டும் சென்றடைய வேண்டும்.
    • பணக்காரர்களுக்கு வழங்குவதை நிறுத்தினால் 10 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்க முடியும்.

    கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சில நலத்திட்டங்களை கொண்டு வருவோம் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. அதை காங்கிரஸ் அரசின் உத்தரவாதம் என அழைத்தது.

    காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தது. சித்தராமையா முதல்வராக பதவி ஏற்றார். தேர்தலின்போது கூறிய உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தியது. இந்த திட்டங்களுக்காக 2024-25-ல் 52 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக அரசின் நலத்திட்டங்கள் ஏழைகளுக்கு மட்டும் சென்றடைகிறதா? என்பது நீண்டகால கேள்வியாக உள்ளது.

    இந்த நிலையில் அம்மாநில பொதுப்பணித்துறை மந்திரியான சதீஷ் ஜார்கிஹோலி, இந்த திட்டத்தால் ஏழைகள் மட்டும் பயனடைய வேண்டும். பணக்காரர்கள் பயனடையக் கூடாது. இந்தத் திட்டத்தில் இருந்து பணக்காரர்களை நீக்கினால் மாநில கருவூலத்திற்கு ஆண்டிற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை சேமிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என நான் சொல்ல மாட்டேன். ஆனால் மக்கள் இந்த திட்டங்கள் ஏழைகளுக்கு மட்டும் சென்று சேர வேண்டும். பணக்காரர்களுக்கு செல்லக்கூடாது. இது தொடர்பாக ஹோட்டல், ஊழியர்கள் மற்றும் எல்லா இடங்களிலும் பேசப்படுகிறது.

    அவர்கள் ஏன பணக்காரர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏழைகளுக்கு மட்டும் கொடுக்க வேண்டியதுதானே என எதிர்க்கட்சிகள் கூட பேசிக் கொண்டிருக்கின்றன.

    அவற்றை (உத்தரவாதங்கள்) நீக்குவது யார்? நாங்கள் அதை நிறுத்தவில்லை. அதை நேரடியாகச் செய்ய முடியாது. அமைச்சரவை மற்றும் சட்டமன்ற கட்சி உள்ளது. இந்த முடிவுகள் அந்த மட்டத்தில் எடுக்கப்பட வேண்டும், என் மட்டத்தில் அல்ல. கட்சி முடிவு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

    கர்நாடாக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் மந்திரியே இவ்வாறு தெரிவித்திருப்பது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம், 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பட்டப்படிப்பு முடித்து வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் முதல் 1,500 ரூபாய் வரை பணம் வழங்குதல். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களை தலைவராக கொண்ட குடும்பத்தினருக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ உணவு தானியங்கள் ஆகியவை உத்தரவாத திட்டமாகும்.

    கர்நாடக மாநில மற்றொரு மந்திரி எம்.பி. பாட்டீல் "இந்த உத்தரவாதங்கள் கட்சியின் கமிட்மென்ட். அவைகள் தொடர்ந்து வழங்கப்படும். மாநிலத்தில் 82 சதவீத பிபிஎல் குடும்பங்கள் உள்ளன. பிபிஎல் குடும்பங்கள் பயன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்." என்றார்.

    இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. நலத்திட்டங்கள் உரியவர்களுக்கு மட்டுமே சென்றடைகிறதா? என்ற விவாதம் எழுந்துள்ளது.

    • இந்த விபத்தில் 4 பேர் படுகாயம்
    • விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து HSR லே-அவுட்டுக்கு சென்று கொண்டிருந்த வால்வோ பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையில் சென்றுகொண்டிருந்த பைக் மற்றும் கார்கள் மீது சரமாரியாக மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இஸ்ரோ புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
    • செயற்கைக்கோளை ஏவுவதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் கார்டோ சாட், ஸ்காட்சாட், ரிசர்ட் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள்கள் தொலைத்தொடர்பு பயன்பாட்டுக்காக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வரிசையில் புவிக்கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இ.ஓ.எஸ்.-08 எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ தற்போது வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோளை சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவுவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து வருகிற 15 ஆம் தேதி காலை 9.17 மணிக்கு எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்து இருந்தது. எனினும், இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ராக்கெட் ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

    இ.ஓ.எஸ்.-08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டாகும். இது தரையில் இருந்து 475 கி.மீ. தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

    இதில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு, குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்- ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு மற்றும் சிக் யுவி டோசிமீட்டர் ஆகிய 3 ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இ.ஓ.ஐ.ஆர். கருவி பேரிடர் மேலாண்மை சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக இரவிலும் துல்லியமான படம் எடுக்க உதவும்.

    இதேபோல் ஜி.என்.எஸ்.எஸ்-ஆர் கருவி மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும். சிக் யுவி டோசி மீட்டர் (SiC UV Dosimeter) விண்ணில் புற ஊதா கதிர்வீச்சு அளவை கண்காணித்து எச்சரிக்கை அளிக்கும். 


    • பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை காண ராகுல் டிராவிட் சென்றார்.
    • திண்டுக்கல் அணிக்கு ராகுல் டிராவிட் கோப்பையை வழங்கினார்.

    நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.

    தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய பின்னர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை காண ராகுல் டிராவிட் சென்றார். பின்னர் தமிழ்நாடு பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணிக்கு ராகுல் டிராவிட் கோப்பையை வழங்கினார்

    இந்நிலையில், நேற்று பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் மைதான ஊழியர்களுடன் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • உபரி நீர் வெளியேற்றும் 19 ஆவது மதகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது
    • கிருஷ்ணா நதியின் கரையோர மக்களுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை.

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன.

    இந்நிலையில், விஜயநகர் மாவட்டத்தில் உள்ள துங்கபத்ரா அணை வேகமாக நிரம்பி வந்தது. இதனையடுத்து, அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    இந்நிலையில் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படும் போது 19 ஆவது மதகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் அணையில் இருந்து கிட்டத்தட்ட விநாடிக்கு 48 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது. இதனால் ஆந்திராவில் பாயும் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    105 டிஎம்சி கொள்ளளவு கொண்ட துங்கபத்ரா அணையில் இருந்து குறைந்தபட்சம் 60 முதல் 65 டிஎம்சி தண்ணீரையாவது திறந்துவிட்டால் தான் அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் அமைச்சர் சிவராஜ் தெரிவித்தார்.

    • மத்திய மந்திரி குமாரசாமி சீதாபுரா கிராமத்தில் நாற்று நட்டார்.
    • முன்னதாக அவர் காவிரி ஆற்றுக்கு பூஜை செய்து வழிபட்டார்.

    மாண்டியா:

    பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் கனரக தொழில்துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார் குமாரசாமி.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டம் பாண்டவபுராவின் சீதாபுரா கிராமத்தில் நிலம் ஒன்றில் மத்திய மந்திரி குமாரசாமி இன்று நாற்று நட்டார்.

    காவிரி ஆற்றுக்கு பூஜை செய்த குமாரசாமி, அதன்பின் நிலத்தில் இறங்கி நாற்று நட்டார்.

    ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டில் முதல் மந்திரியாக இருந்த குமாரசாமி நிலத்தில் இறங்கி நாற்று நட்டு, பயிரிடும் பணிகளை தொடங்கி வைத்து விவசாயிகளை உற்சாகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.



    • கழிவறையில் உள்ள குப்பைத்தொட்டியில் கேமரா ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்தது செல் போன்
    • கேமரா சுமார் 2 மணி நேரமாக கழிவறையை படம்பிடித்துள்ளது.

    பெங்களூரில் பிரபலமாக இயங்கிவரும் third wave காபி ஷாப் கிளை ஒன்றின் பெண்கள் கழிவறை போன் கேமரா மூலம் படம்பிடிக்கப்ட்டுவந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரில் BEL Road பகுதியில் உள்ள third wave காப்பி ஷாப்பில் உள்ள பெண்கள் கழிவறையில்உள்ள குப்பைத்தொட்டியில் கேமரா ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்த செல் போனை பெண் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

    ஏரோபிலேன் மோடில் இருந்த அந்த போனில் ஆன் செய்யப்பட்டிருந்த கேமரா சுமார் 2 மணி நேரமாக கழிவறையை படம்பிடித்துள்ளது. இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டதை அடுத்து போலீஸ் விசாரணை நடத்தியது.



    அந்த செல் போன், அந்த காப்பி ஷாப்பில் வேலை செய்யும் ஊழியருடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. அவரை பணிநீக்கம் செய்துள்ள third wave நிர்வாகம், அவர் மீது உரிய எடுக்க தாங்கள் முழுமையாக ஒத்துழைப்பதாகத் தெரிவித்துள்ளது. காப்பி ஷாப் கழிவறையில் கேமரா வைக்கப்பட்ட சம்பவம் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • நிலையான வேலையை விட்டுவிட்டு சொந்த தொழிலில் இறங்கப் பலர் யோசிக்கின்றனர்.
    • அவர்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு இந்த மாதாந்திர உதவித்தொகையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    கர்நாடகாவில் புதிதாக தொழில் தொடங்குவோருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவிலேயே அதிக ஸ்டார்ட் அப்களை கொண்ட நகரமாக பெங்களூரு இருந்து வருகிறது. தங்களின் வருமானம் தருகின்ற நிலையான வேலையை உதறிவிட்டு ஸ்டார்ட் அப் தொடங்க பலர் ஆர்வமாக முன்வருகின்றனர். இதை ஊக்குவிக்கும் வகையில் இந்த புதிய திட்டமானது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    இதுகுறித்து கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே பேசுகையில், புதிய தொழில்களைத் தொடங்குவது என்பது ஒரு ஆபத்தான சமாச்சாரம். அதுவும் நிலையான வேலையை விட்டுவிட்டு சொந்த தொழிலில் இறங்கப் பலர் யோசிக்கின்றனர்.

     

    புதிய தொழில் தொடங்குவதால் பல சமயங்களில் பொருளாதார சிக்கல்களில் அவர்கள் மாட்டிக்கொள்கின்றனர். எனவே அவர்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு இந்த மாதாந்திர உதவித்தொகையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இது புதிதாகத் தொழில்முனைவோர் அன்றாட செலவுகளைப் பற்றி யோசிக்காமல் தொழிலை வளர்ப்பதில் கவனம் செலுத்த உதவும்.

    ஆனால் இந்த திட்டம் எந்த அளவு வெற்றி பெறுகிறது என்பதை அது செயல்படுத்தப்பட்ட பிறகே பார்க்க முடியும். உதவித்தொகை உரிய தகுதியின் அடிப்படையிலேயே வழங்கப்படும். யாருக்கு அதிகம் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு இது சென்று சேர வேண்டும். இதைத்தவிர்த்து தொழில் சார்ந்த அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் அவர்களுக்கு அரசு வழங்கும் என்று தெரிவித்துள்ளார். 

    • பொதுவாக நாய் கடித்தால் தான் ரேபிஸ் பரவும்.
    • தடுப்பூசி எடுத்து கொள்ளாததால் ரேபிஸ் நோய் முற்றி அவர் உயிரிழந்துள்ளார்.

    கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டத்தில் வளர்ப்பு பூனை கடித்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பூனை கடித்ததால் ஏற்பட்ட ரேபிஸ் தோற்றால் 50 வயதான கங்கிபாய் என்ற பெண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    2 மாதத்திற்கு முன்பு அப்பெண்ணின் வளர்ப்பு பூனை அவளை கண்டித்துள்ளது. பூனை கடிக்கு தேவையான தடுப்பூசிகளை அவர் எடுத்து கொள்ளாததால் ரேபிஸ் நோய் முற்றி அவர் உயிரிழந்துள்ளார்.

    பொதுவாக நாய் கடித்தால் தான் ரேபிஸ் பரவி உயிரிழப்பார்கள். தற்போது பூனை கடித்து ஒருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கர்நாடகாவில் அங்கன்வாடி மையங்களில் மாணவர்களுக்கு கட்டாயம் முட்டை வழங்கவேண்டும்.
    • இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் உள்ள குண்டூர் கிராமத்தில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் உள்ள மாணவர்களுக்கு உணவோடு முட்டை பரிமாறப்பட்டுள்ளது. இதனை ஊழியர்கள் போட்டோ எடுத்துள்ளனர்.

    பின்பு மாணவர்கள் சாப்பிடுவதற்கு முன்பு பிரார்த்தனை செய்கிறார்கள். அதன்பின் தட்டில் இருந்த முட்டைகளை மாணவர்கள் சாப்பிடும் முன்பே அங்கிருந்த ஊழியர் எடுத்து விடுகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து, அங்கன்வாடி ஊழியர்களான லட்சுமி, ஷைனஜா பேகம் ஆகியோரை கர்நாடக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

    அங்கன்வாடி மையங்களில் மாணவர்களுக்கு கட்டாயம் முட்டை வழங்கவேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • எடியூரப்பாவுக்கு வெட்கம் இருக்குமென்றால், அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
    • குமாரசாமிக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது?. ஜந்தாகல் சுரங்க வழக்கை மறந்துவிட்டாரா?

    முடா முறைகேடு தொடர்பாக சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர்கள் மைசூரு நோக்கி (Mysuru Chalo) நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, "என்னை கேள்வி கேட்பதற்கு பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சி தலைவர்கள் யாருக்கும் தார்மீக உரிமை கிடையாது. மக்கள் அவர்களை விரட்ட வேண்டும்" என்றார்.

    மேலும் சித்தராமையா கூறியதாவது:-

    ஆங்கிலேயர்களை இந்தியாவிலிருந்து விரட்டியடிக்கும் வரலாற்று சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு தினம் ஆகஸ்ட் 9 ஆகும். பிற்படுத்தப்பட்ட, சுரண்டப்படும் மக்களை சகித்துக்கொள்ள முடியாத மனுவாதிகளையும், சாதிவெறியர்களையும், நிலப்பிரபுக்களையும் எதிர்க்க வேண்டும், கண்டிக்க வேண்டும்.

    எடியூரப்பாவுக்கு வெட்கம் இருக்குமென்றால், அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அவருக்கு 82 வயதாகிறது. போக்சோ சட்டத்தின்கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் என்னை ஆகஸ்ட் 10-க்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என சொல்கிறார்.

    அவருக்கு என்ன தார்மீக பொறுப்பு இருக்கிறது? அவர் ஒன்றிரண்டு மோசடிகள் மட்டுமா செய்தார்? 18 முதல் 20 மோசடிகளில் பிடிபட்டுள்ளாளர். விஜயேந்திராவும் பல மோடிசகளில் சிக்கியுள்ளார். பாஜக-வின் விஜயபுரா எம்எல்ஏ யட்னால், விஜயேந்திரா ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    குமாரசாமிக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது?. ஜந்தாகல் சுரங்க வழக்கை மறந்துவிட்டாரா? 20 நிறுவனங்கள் புதுப்பிக்க நீங்கள் அனுமதி கொடுத்தீர்கள். என்னை ராஜினாமா செய்ய சொல்ல உங்களுக்கு வெட்கமில்லையா?

    அவர்கள் இப்போது பதில் சொல்ல வேண்டும். வெறுப்பு மற்றும் பழிவாங்கும் அரசியலை நான் ஒருபோதும் பின்பற்றவில்லை. நான் அப்படி இருந்திருந்தால் முதலில் இப்படி ஒரு நிலை வந்திருக்காது. சிறைக்கு சென்றிருப்பார்கள்.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

    • இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று காலை திருமணம் நடந்தது.
    • 2 பேரும் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவின் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கெம்பாபுராவை அடுத்த செம்பரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் லிகிதா ஸ்ரீ (20). இவர்கள் 2 பேரும் காதலித்தனர். இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று காலை திருமணம் நடந்தது.

    இதையடுத்து மதியம் புதுமணத்தம்பதிகளை முனியப்பபாவின் வீட்டில் இருந்த ஒரு அறையில் தனியாக வைத்தனர். அப்போது தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர். 2 பேரும் ரத்த காயத்தில் சுருண்டு விழுந்து கிடந்தனர். இதையடுத்து குடும்பத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் லிகிதா ஸ்ரீ உயிரிழந்தார். இதையடுத்து குடும்பத்தினர் நவீன் குமாரை மீட்டு கோலார் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு நவீன் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விசாரணையில் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் 2 பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதில் அவர்கள் 2 பேரும் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர்.

    இதில் கத்திக்குத்து காயம் அடைந்த லிகிதா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நவீன் குமார் படுகாயம் அடைந்தது தெரியவந்தது. தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுமண தம்பதி இடையே ஏற்பட்ட தகராறுக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து ஆண்டர்சன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான சில மணி நேரத்திலேயே புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில், காதல் மனைவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×