search icon
என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • 2017 - 2022 வரை இந்த வரி ஏய்ப்பு நடந்ததாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் தகவல்.
    • இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று 1% சரிவை சந்தித்தன.

    இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், ரூ.32,000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

    2017 ஜூலையில் இருந்து 2022 மார்ச் மாதம் வரை அந்நிறுவனத்தின் வெளிநாட்டு கிளைகளில் இருந்து சேவைகளை இறக்குமதி செய்ததில் இந்த வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக இன்ஃபோசிஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "அனைத்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகையையும் தனது நிறுவனம் செலுத்தியுள்ளது என்றும் இந்திய நிறுவனத்திற்கு வெளிநாட்டு கிளைகள் வழங்கும் சேவைகள் ஜிஎஸ்டி வரி விதிமுறைகளுக்குள் வருவதில்லை" என்றும் தெரிவித்துள்ளது.

    இன்ஃபோசிஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக அறிக்கை வெளியான நிலையில், அந்நிறுவனத்தின் பங்குகள் இன்று 1% சரிவை சந்தித்துள்ளன.

    • கர்நாடகத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.
    • போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் குடகு, தட்சிண கன்னடா, சிக்கமகளூரு, சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    சிவமொக்கா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் துங்கா மற்றும் பத்ரா அணைகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. துங்கா மற்றும் பத்ரா ஆறுகள் சங்கமிக்கும் பகுதி வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    அதுபோல் கபிலா ஆற்றில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தால் மைசூரு-நஞ்சன்கூடு இடையேயான சாலைகள் மூழ்கடிக்கப்பட்டு உள்ளது. இதனால் மைசூரு-நஞ்சன்கூடு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கபிலா ஆற்றின் கரையில் அமைந்துள்ள பசவேஸ்வரா கோவில், லிங்கபட்டர குடி, காசி விஸ்வநாதசுவாமி கோவில், சாமுண்டீஸ்வரி கோவில், அய்யப்பசாமி கோவில், தத்தாத்ரேயாசாமி கோவில், பரசுராமா கோவில் உள்ளிட்ட கோவில்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

    சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகா ஆனேகுந்தி அருகே சொல்லாப்புரா நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிவமொக்கா-சிருங்கேரி, மங்களூரு இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    தொடர் கனமழையால் வருகிற 15-ந் தேதி வரை சிக்கமகளூரு மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என்று கலெக்டர் மீனா நாகராஜ் உத்தரவிட்டுள்ளார்.

    ஹாசன் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு இருந்த சிராடி மலைப்பாதை வழியாக போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று மதியம் மீண்டும் சிராடி மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஓடும் நேத்ராவதி ஆற்றில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் பாய்ந்தோடுகிறது. நேத்ராவதி ஆறு, அரபிக்கடலுடன் சங்கமிக்கும் முகத்துவாரம் பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    குடகு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையால் காவிரி ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் குஷால்நகர் சாய் படாவனே, குவெம்பு படாவனே, பசப்பா படாவனே, கந்ததகோட்டே உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

    இதனால் அங்குள்ள வீடுகளில் வசித்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். துபாரே மற்றும் ஹாரங்கி யானைகள் முகாம்கள் நேற்று மூடப்பட்டன. சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    தொடர் கனமழையால் துங்கபத்ரா அணை ஏற்கனவே நிரம்பி விட்டதால் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

    இந்த அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் கன அடி தண்ணீர் துங்கபத்ரா ஆற்றில் திறந்து விடப்பட்டு இருந்தது. இதனால் ஆற்றின் கரையில் அமைந்துள்ள விஜயநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட புராதன நகரமான ஹம்பியில் 12 வரலாற்று நினைவுச்சின்னங்கள் மூழ்கி உள்ளன. 

    • பாஜகவின் ப்ரீதம் கவுடா, எங்கள் குடும்பத்தை அழிக்க வேண்டும் என்று துடித்தவர்.
    • என் சகிப்புத்தன்மைக்கும் ஒரு எல்லை உண்டு.

    மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் ரூ4,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும் முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு சட்டவிரோத வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை கர்நாடக முதல்வர் சித்தராமையா மறுத்துள்ளார்.

    இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி சம்பந்தப்பட்ட மூடா ஊழல் தொடர்பாக சட்டசபையில் விவாதிக்க வேண்டும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்தனர். அதனை சபாநாயகர் மறுத்த நிலையில், சட்டசபையில் இரவு பகலாக தர்ணா போராட்டத்தை பாஜக எம்.எல்.ஏ.க்கள் நடத்தினர்.

    மூடா ஊழல் முறைகேடுகளுக்கு எதிராக பாத யாத்திரை மேற்கொள்ள அம்மாநில பாஜக முடிவு செய்துள்ளது. பெங்களூருவில் இருந்து மைசூரு வரை ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இந்த பாத யாத்திரை நடைபெறும் என்று பாஜக அறிவித்தது.

    இந்நிலையில், பாஜகவின் இந்த பாத யாத்திரையில் பங்கேற்கப்போவதில்லை என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ளது.

    பாஜகவின் இந்த பாத யாத்திரை போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு கூட தரப்போவதில்லை என்று மத்திய அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "கனமழையைத் தொடர்ந்து மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் இதுபோன்ற போராட்டங்கள் நடத்துவதற்கு இது சரியான நேரம் அல்ல. இந்த சமயத்தில் நாம் மக்களுடன் இருக்க வேண்டும். ஆகவே பாஜகவின் பாத யாத்திரை போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

    பாஜகவின் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தும் பாஜகவின் ப்ரீதம் கவுடா, எங்கள் குடும்பத்தை அழிக்க வேண்டும் என்று துடித்தவர். பென்-டிரைவ் விநியோகத்திற்கு யார் பொறுப்பு? என் சகிப்புத்தன்மைக்கும் ஒரு எல்லை உண்டு. ஹாசனில் என்ன நடந்தது என்பது இவர்களுக்கு தெரியாதா? அதற்கு யார் பொறுப்பு?'' என்று அவர் கோபத்துடன் பேசினார்.

    ஹாசனில் நடந்து மக்களவை தேர்தலுக்கு முன்பாக, தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்கள் அடங்கியதாகக் கூறப்படும் பென்-டிரைவ்களை பெரிய அளவில் விநியோகம் செய்யப்பட்டதை குமாரசாமி குறிப்பிடுகிறார். 

    • கேஆர்எஸ் அணையில் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
    • கபினி அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கேஆர்எஸ் அணையில் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    கபினி அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால், காவிரி கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    காலை ஒரு லட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 1.40 லட்சமாக அதிகரித்துள்ளது.

    • நாங்கள் தயாராக இருக்கும் நிலையில், அவர்கள் விவாதிக்க தயாராக இல்லை.
    • மேகதாது எங்களுடைய உரிமை. எங்கள் மாநிலத்தில் நீர்த்தேக்கம் கட்டப்படும்.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுடன் விவாதிக்க கர்நாடக மாநில அரசு தயாராக இருக்கிறது. மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை. மத்திய அரசு தேவையான அனுமதி அளித்தால், கர்நாடக மாநிலம் திட்டத்தை அமல்படுத்த தயாராக உள்ளது.

    நாங்கள் தயாராக இருக்கும் நிலையில், அவர்கள் விவாதிக்க தயாராக இல்லை. மேகதாது எங்களுடைய உரிமை. எங்கள் மாநிலத்தில் நீர்த்தேக்கம் கட்டப்படும். தமிழ்நாடு தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்குகிறது.

    வழக்கமான மழைக்காலங்களில் கேஆர்எஸ் உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டும். அப்போது 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 2022-23-ல் 665 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த வருடம் அதிகமான தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது. ஏற்கனவே 83 டிஎம்சிக்கு அதிகமான நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் குறைவான காலத்தில் எங்களால் அதிகமான தண்ணிர் திறந்து விட முடியாது.

    கர்நாடகா மாநிலத்தில் அணைகள் நிரம்பும்போது கூடுதல் நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது. தமிழகத்தில் மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டும்போது கடலுக்கு நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கூடுதல் நீரை மேகதாதுவில் சேமித்து வைக்க முடியும்.

    இது நம்மை விட தமிழகத்திற்குத்தான் பலன் தரும். இருந்தும் அரசியலுக்காக பிரச்சனைகளை கிளப்பி விடுகிறார்கள். இத்திட்டத்திற்கு இதுவரை மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    • செய்தியாளர் சந்திப்பில் குமாரசாமி பங்கேற்றபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
    • குமாரசாமியை அவரது மகன் நிகில் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

    மத்திய அமைச்சரும், ஜேடிஎஸ் தலைவருமான எச்.டி.குமாரசாமிக்கு திடீரென மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, எடியூரப்பா ஆகியோருடன் செய்தியாளர் சந்திப்பில் குமாரசாமி பங்கேற்றபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, குமாரசாமியை அவரது மகன் நிகில் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

    குமாரசாமிக்கு ஏற்கனவே இதய பிரச்சனை இருப்பதாகவும், அவருக்கு 2 முதல் 3 முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • கொலை சம்பவத்தின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கொலை செய்த நபரின் பெயர் அபிஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தங்கும் விடுதிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், 22 வயது மதிக்கத்தக்க பீகார் பெண்ணைக் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இந்த கொலை சம்பவத்தின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பீகாரைச் சேர்ந்தவர் கிருத்தி குமாரி என்கிற 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண். இவர் பெங்களூருவில் கோரமங்களா பகுதியில் பெண்கள் விடுதியில் ரூம் எடுத்து தங்கி இருந்தார்.

    இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை இரவு 11 மணியளவில் பெண்கள் விடுதிக்குள் கத்தியுடன் புகுந்த நபர் ஒருவர் கிருத்தியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், "குற்றம்சாட்டப்பட்ட நபர் கிருத்தி அறையில் தங்கியிருக்கும் தோழியின் காதலன். அவர் வேலையில்லாமல் இருப்பதால் அடிக்கடி கிருத்தியின் தோழிக்கும் அவருக்கும் இடையே சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது.

    இந்த சண்டையில் கிருத்தி குமாரி பெரும்பாலும் தலையிட்டு வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. மேலும் அந்த நபரிடம் இருந்து தோழியை விலகி இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார் கிருத்தி. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கிருத்தியை கொலை செய்துள்ளார்" என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த கொடூர கொலை சம்பவம் விடுதி வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    இந்த காட்சியில், குற்றம்சாட்டப்பட்ட நபர் கிருத்தி இருந்த அறையின் கதவைத் தட்டுகிறார். வெளியே வந்த கிருத்தியின் தலை முடியைப் பிடித்து, அவரை சுவரில் தள்ளி கத்தியால் பலமுறை கழுத்தில் குத்திவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    சத்தம் கேட்டு ஓடி வந்த சக அறை பெண்கள் போலீசாருக்கு உடனே தகவல் தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து, கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். குற்றவாளியை பிடிக்க பெங்களூரு போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர்.

    இந்நிலையில் அந்த நபர் மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த நபரின் பெயர் அபிஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க பெங்களூருவில் குற்றவாளியிடம் விசாரணை நடத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    • ரெயில் நிலையத்தில் இருந்த மக்கள் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    • அவை நாய் இறைச்சி என்று புனீத் கேரஹல்லி என்ற பசுப் பாதுகாவலரும் அவரது சாகாக்களும் போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    பெங்களூரு கேஎஸ்ஆர் ரெயில் நிலயத்தில் நேற்று இரவு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து கொண்டுவரப்பட்ட 150 பெட்டிகளில் 3 டன் [3000 கிலோ] பதப்படுத்தப்பட்ட இறைச்சி அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. வித்தியாசமான முறையில் இருந்த அந்த இறைச்சிகளை பார்க்க ரெயில் நிலையத்திலிருந்த மக்கள் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் அவை  நாய் இறைச்சி என்று புனீத் கேரஹல்லி என்ற பசுப் பாதுகாவலரும் அவரது சாகாக்களும் போலீசிடம்  தெரிவித்துள்ளனர்.மேலும் அவை பெங்களூரில் உள்ள ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யப்படுவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். எனவே அவர்களை கஸ்டடியில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அப்துல் ரசாக்  என்ற டீலர் அதை அவர் விற்பதற்காக ஜெய்ப்பூரில் இருந்து கொண்டுவந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் தான்  வரவழைத்தது ஆட்டிறைச்சி தான் என்றும், அதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் அப்துல் ரசாக் மறுத்துள்ளார். தன்னை பொய் வழக்கில் மாட்டி விட கேரஹல்லி சதி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் அது உண்மையில் என்ன இறைச்சி என்று அறிய போலீசார் அதை பரிசோதனைக்கு அனுப்பியுன்னர்.

    • 2 பைக்கில் வந்த 4 இளைஞர்கள் மேம்பாலத்தில் வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்டனர்.
    • அப்போது கத்தியை காட்டி கார் ஓட்டுனரை அவர்கள் மிரட்டியுள்ளனர்.

    பெங்களூருவில் உள்ள பிரபல மாரேனஹள்ளி - சில்க் போர்டு மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் அவ்வழியே வந்த காரை எட்டி உதைத்து, வரம்பு மீறிய செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    2 பைக்கில் வந்த 4 இளைஞர்கள் அந்த மேம்பாலத்தில் வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்டனர். இதனால் அதே மேம்பாலத்தில் வந்த பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டது. அப்போது அவ்வழியே வந்த காரை எட்டி உதைத்து அராஜகத்தில் ஈடுபட்டனர். அப்போது கத்தியை காட்டி கார் ஓட்டுனரை அவர்கள் மிரட்டியுள்ளனர். பின்னர் வீலிங் செய்தபடியே அங்கிருந்து சென்றனர்.

    இதனை காரில் பின்னாடி வந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். நகரில் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக குறிப்பிட்டு அந்த வீடியோவை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

    அந்த வீடியோ வைரலான நிலையில் 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர்களின் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய மாநிலமாக கர்நாடகா உள்ளது.
    • காங்கிரஸ் அரசுக்கு எதிரான சதியின் ஒரு பகுதிதான் முடா மோசடி குற்றச்சாட்டு.

    மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் (MUDA) மனைகள் ஒதுக்கியது தொடர்பான மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என அம்மாநில பாஜக-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அடுத்த வாரம் சித்தராமையா முதல் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மைசூரு நோக்கி பாஜக-வினர் பேரணி நடத்த உள்ளனர்.

    இந்த நிலையில் முடா ஊழல் குற்றச்சாட்டு காங்கிரஸ் அரசுக்கு எதிரான பாஜக சதியின் ஒரு பகுதி என துணை முதல்வர் சிவக்குமார் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய மாநிலமாக கர்நாடகா உள்ளது. காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் வெற்றிபெறும் என பாஜக ஒருபோதும் நினைக்கவில்லை. ஆகவே, அவர்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக சதி வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், முடிந்தவரை பேரணிகளை நடத்தட்டும். அவர்களுடைய பிரசாரத்திற்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்று நாங்கள் திட்டமிடுவோம்.

    இவ்வாறு சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    முடா (MUDA) முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு வீட்டுமனை அமைப்பதற்காக 3.16 ஏக்கருக்கும் அதிகமாக 14 இடங்களை ஒதுக்கியதாக பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை குற்றம்சாட்டியுள்ளன.

    எந்த தவறும் நடக்கவில்லை எனத் தெரிவிக்கும் சித்தராமையா, இந்த நிலங்கள் 2021-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் இருக்கும்போது ஒதுக்கப்பட்டது. என்னுடைய மனைவி ஒரு குறிப்பிட்ட இடத்தில் வீட்டுமனை ஒதுக்க ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை என்றார்.

    மேலும், முடா தனது மனைவியின் சொத்தை ஆக்கிரமித்துள்ளதாக முதல்வர் கூறி வந்தார். இதுகுறித்து முடா அதிகாரிகளின் கவனத்திற்கு அவர் கொண்டு சென்றபோது, அவர்கள் தங்கள் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதற்கு பதிலாக மாற்று இடங்களை ஒதுக்கீடு செய்தனர் என்றார்.

    இது தொடர்பாக சிவக்குமார் கூறுகையில் "நிலத்தை இழந்த பலர் மாற்று இடங்களை பெற்றுள்ளனர். மற்றவர்கள் மாற்று தளங்களைப் பெற்ற விதத்தில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் விளக்கம் அளிப்பார். நானும் தகவல் சேகரித்து வருகிறேன். இது தொடர்பாக முதல்வர் கேள்வி எழுப்பியபோது, அவருக்கு மாற்று நிலத்தை முடா வழங்கியது" என்றார்.

    • நிலச்சரிவில் 2 வீடுகள், ஒரு ஓட்டல் மண்ணுக்கு அடியில் சிக்கின.
    • தமிழகத்தை சேர்ந்த 8 பேர் நிலச்சரிவில் சிக்கினர்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கடந்த 16-ந்தேதி உத்தரகன்னடா மாவட்டம் அங்கோலா தாலுகா சிரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இந்த நிலச்சரிவில் 2 வீடுகள், ஒரு ஓட்டல் மண்ணுக்கு அடியில் சிக்கின. அப்போது அங்கு தேநீர் குடிப்பதற்காக சாலையோரம் நிறுத்தி இருந்த லாரி டிரைவர்களும் இதில் சிக்கிக் கொண்டனர்.

    தமிழகத்தை சேர்ந்த லாரி டிரைவர்கள் 3 பேர் உள்பட 12 பேர் இந்த நிலச்சரிவில் சிக்கினார்கள். இவர்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முருகன், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சின்ணண்ன் உடல்கள் மீட்கப்பட்டன.

    கேரளாவை சேர்ந்த லாரி டிரைவர் அர்ஜுன், ஓட்டலில் வேலை பார்த்த ஜெகநாத், கோகர்ணாவை சேர்ந்த லோகேஷ் ஆகியோரை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நாமக்கல்லை சேர்ந்த கியாஸ் டேங்கர் லாரி டிரைவரான சரவணன் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என்றும், கடந்த 16-ந்தேதியில் இருந்து அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரது உறவினர்கள் அங்கோலா போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    தற்போது நாமக்கல்லை சேர்ந்த சரவணன் (வயது 45) என்பவரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

    நிலச்சரிவில் டேங்கர் லாரி, மரக்கட்டைகள் லோடு ஏற்றி வந்த லாரி ஆகியவை அருகில் ஓடும் கங்காவளி ஆற்றுக்குள் தள்ளப்பட்டு அடித்து செல்லப்பட்டன. கியாஸ் டேங்கர் மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு லாரியை தேடும் பணி நடைபெற்றது.

    இந்த நிலையில் கங்காவளி ஆற்றில் கேரளாவை சேர்ந்த அர்ஜுன் என்பவர் ஓட்டி சென்ற லாரி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    10 நாட்களுக்கு பிறகு அந்த லாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட 30 அடி தூரத்தில் கங்காவளி ஆற்றுக்குள் அந்த லாரி கிடக்கிறது. எனினும், டிரைவர் அர்ஜுன் லாரியில் சிக்கி உள்ளாரா? அல்லது ஆற்றில் அடித்து செல்லப்பட்டாரா? என்பது இதுவரை தெரியவில்லை. தற்போது ஆற்றில் இருந்து லாரியை தூக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    இதனிடையே அர்ஜூனின் தாயார் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தனது மகனை மீட்டு தருமாறு வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு பதில் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

    மேலும் கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் இது தொடர்பாக செல்போனில் தொடர்பு கொண்டு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவிடம் பேசியுள்ளார். கேரளாவில் இருந்து மீட்பு குழுவும் அங்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இதுவரை 8 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 4 பேரின் கதி என்ன? என தெரியவில்லை. மாயமான 4 பேரின் உடல்களும் கங்காவளி ஆற்றில் கிடக்கலாம் என்பதால், தேடுதல் பணியில் அதிநவீன ஆளில்லாத விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

    அதாவது அந்த ஆளில்லாத விமானம், நீருக்கு அடியில் 20 கிலோ மீட்டர் அடியில் உள்ள பொருட்களையும் கண்டறியும் திறன் கொண்டதாகும். அதன்மூலம் டெல்லியை சேர்ந்த நிபுணர்கள் கங்காவளி ஆற்றில் 4 பேரையும் தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

    கடந்த 10 நாட்களாக நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 44 துணை ராணுவ வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    உத்தரகன்னடா மாவட்ட கலெக்டராக தமிழகத்தை சேர்ந்த உமா என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் மீட்பு பணிகளை தீவிரமாக முடுக்கி விட்டுள்ளார். அடையாளம் காணப்பட்ட தமிழர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு விரைவில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • பாப்லோ எஸ்கோபார் கொலம்பியாவின் போதைப்பொருள் ஜாம்பவான்.
    • உலகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விற்பனை செய்தார்.

    ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஜெகன்மோகன் ரெட்டி படுதோல்வியடைந்தார்.

    ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஜெகன் மோகன் ரெட்டி கட்சியினர் தாக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெகன்மோன் ரெட்டி டெல்லி போராட்டம் நடத்தினார். அவரது கட்சி தொண்டர்கள் தாக்கப்பட்ட படங்களை வெளியிட்டு வீடியோக்களையும் காட்சிப்படுத்தினார்.

    இந்த நிலையில் ஆந்திர சட்டப்பேரவையில் ஜெகன் மோகன் ரெட்டியை போதைப்பொருள் ஜாம்பவான் பாப்லோ எஸ்கோபார் உடன் ஒப்பிட்டு பேசினார்.

    இன்று சந்திரபாபு நாயுடு சட்டமன்றத்தில் பேசும்போது கூறியதாவது:-

    பாப்லோ எஸ்கோபார் கொலம்பியாவின் போதைப்பொருள் ஜாம்பவான். அவன் ஒரு போதைப்பொருள் பயங்கரவாதி. பின்னர் அரசியல்வாதியாக மாறினார். அதன்பிறகு உலகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விற்பனை செய்தார். அந்த நேரத்திலேயே 30 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் சம்பாதித்தார். தற்போது அது ஏறக்குறைய 90 பில்லியன் டாலராகும்.

    1976-ல் கைது செய்யப்பட்டார். 1980-ல் உலகின் மிகப்பெரிய பொதைப்பொருள் ஜாம்பவானாக திகழ்ந்தான். போதைப்பொருள் விற்றும் ஒருவர் கோடீஸ்வரர் ஆக முடியும்.

    முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் இலக்கு எண்ணம்?. டாடா, ரிலையன்ஸ், அம்பானியிடம் பணம் இருக்கிறது. அவர்களை விட பணக்காரர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார். சிலருக்கு தேவைகள் உள்ளன, சிலருக்கு பேராசை உள்ளது மற்றும் சிலருக்கு வெறி உள்ளது. இந்த வெறி பிடித்தவர்கள் இதுபோன்ற விஷயங்களைச் செய்கிறார்கள்.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆந்திர பிரதேசம் நாட்டின் போதை தலைநகராகியுள்ளது. இதில் முன்னாள் முதல்வரின் பங்கு உள்ளது என சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஜெகன் மோகன் ரெட்டி மீது உள்ளது. கொலை முயற்சி வழக்கு இந்த மாதம் தொடக்கத்தில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கொண்டா ரஜின் காந்தி "தெலுங்கு தேசம் கட்சி தேர்தல் இன்னும் முடியடைவில்லை என் பார்வையில் உள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியில் வன்முறை குறித்து கண்காட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மாநிலத்தில் நடைபெறும் வன்முறையை மீதான பார்வையை திசைதிருப்ப முயற்சிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    ×