search icon
என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • தற்போது தவுபா தவுபா பாடல் டிரெண்டிங்கில் உள்ளது.
    • நடிகர் விக்கி கவுசல் அசத்தலாக நடனம் ஆடியிருப்பார்.

    சமூக ஊடகங்களில் தற்போது தவுபா தவுபா பாடல் டிரெண்டிங்கில் உள்ளது. பேட் நியூஸ் படத்தில் இடம் பெற்ற இந்த பாடலுக்கு நடிகர் விக்கி கவுசல் அசத்தலாக நடனம் ஆடியிருப்பார்.

    இந்த பாடலுக்கு இளசுகள் நடனமாடி வலைத்தளத்தில் பதிவேற்றி லைக்குகளை அள்ளிக் குவித்துவரும் நிலையில், கர்நாடகத்தின் ஆதரவற்ற முதியோர் இல்ல மூதாட்டிகளும் நடனமாடி யாவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளனர்.

    மூதாட்டிகள் 6 பேர் குழுவாக ஒரே நிறத்தில் சேலை கட்டி, தவுபா பாடலுக்கு அழகாக நடனம் ஆடுகிறார்கள். துள்ளல் நடனம் நிறைந்த அந்த பாடலுக்கு, மூதாட்டிகள் எளிமையாக நடனமாடி இருப்பது, நடிகரான விக்கி கவுசலையும் கவர்ந்துள்ளது.

    அவரும் அந்த நடன வீடியோவின் கீழ் கருத்து பதிவிட்டு பாராட்டி உள்ளார். தனது வலைத்தள பக்கத்திலும் பகிர்ந்தார்.

    இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது. 3.5 லட்சம் பேர் விருப்பப் பொத்தானை அழுத்தி ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    • கர்நாடகத்தில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படாது.
    • மதுபானங்களின் தேவை அதிகரிப்பு என்பது, மதுக்கடைகள் குறைவாக இருப்பதை காட்டுகிறது.

    பீதர்:

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்பு மதுபானங்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், மீண்டும் மதுபானங்களின் விலையை உயர்த்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியானது. குறிப்பாக ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், ஆன்லைன் உணவு விற்பனை நிறுவனங்கள் மூலமாக மதுபானமும் விற்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து பீதர் மாவட்டத்தில் கலால் துறை மந்திரி ஆர்.பி.திம்மாபூரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படாது. மதுபானங்களின் விலையை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. அண்டை மாநிலங்களை ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் மதுபானங்களின் விலை குறைவாக தான் உள்ளது. சில உயர்ரக மதுபானங்களின் விலை மற்ற மாநிலங்களை விட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் வருவாய் பாதிக்கப்படுகிறது. மதுபானங்களின் தேவை அதிகரிப்பு என்பது, மதுக்கடைகள் குறைவாக இருப்பதை காட்டுகிறது.

    மாநிலத்தில் ஆன்லைன் மூலமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படாது. அதுபற்றி அரசு தரப்பில் எந்த விதமான ஆலோசனையும் இதுவரை நடக்கவில்லை. ஆன்லைன் மூலமாக மதுபானம் விற்பனை செய்ய சாத்தியமும் இல்லை. இனிவரும் நாட்களிலும் ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யப்படாது. எந்த ஒரு ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாகவும் மதுபானங்கள் விற்பனை செய்வதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கல்யாணம் செய்து கொள்ள முன்வராமலேயே 6 வருட காலமாக தொடர்ந்து பாலியல் உறவு வைத்து அதன்பின் பிரிந்து சென்றுள்ளார்
    • விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொள்வது [பாலியல் வன்கொடுமை] சட்டப்பிரிவு 375 இந்த கீழ் வராது

    கடந்த 2012 இல் இருந்து பெண் ஒருவர் ஆண் ஒருவருடன் காதல் உறவில் இருந்துள்ளார். அவர்களுக்கிடையில் உடல் ரீதியான உறவும் இருந்து வந்துள்ளது, இதற்கிடையில் அந்த ஆண் இவரிடமிருந்து விலகி முற்றிலுமாக தவிர்த்து விட்டு வேறொரு பெண்ணுடன் காதல் செய்து வந்துள்ளார்.

    கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அந்த ஆண் தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக ஏமாற்றப்பட்ட அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஏமாற்றப்பட்ட பெண்ணின் வக்கீல், தனது கட்சிக்காரரை குற்றம்சாட்டப்பட்டவர் கல்யாணம் செய்து கொள்ள முன்வராமலேயே 6 வருட காலமாக தொடர்ந்து பாலியல் உறவு வைத்து அதன்பின் பிரிந்து சென்றுள்ளார் என்ற வாதத்தை முன்வைத்தார்.

    இந்நிலையில் வாதத்தை கேட்ட நீதிபதி, புகார் அளித்துள்ள பெண்ணே, தான் அந்த நபரை காதலித்து வந்ததாக தெரிவித்துள்ளார். இப்போது அவர்களுக்கிடையில் காதல் இல்லை எனபதற்காக இதற்குமுன்  விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டது பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவு 375 கீழ் வராது என்று வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

    பழைய சட்டத்தின்படி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாரதீய சட்டங்களின்படி திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனை பெண்கள் தவறாக பயன்படுத்தக்கூடும் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. 

    • அப்பார்ட்மெண்ட், கோயில்கள் என பல இடங்களில் இவர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.
    • திருடப்பட்ட ஷூக்களை சுத்தம் செய்து ஊட்டி, புதுச்சேரி போன்ற சுற்றுலா தளங்களில் அவர்கள் விற்றுள்ளனர்.

    பெங்களூரு நகரில் கடந்த 7 ஆண்டுகளாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பிராண்டட் ஷூக்களை திருடிய 2 திருடர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    திருடர்களை கைது செய்த பின்பு அவர்களது வீட்டை காவல்துறையினர் சோதனை செய்தனர்.அப்போது, 715 -ற்கும் மேற்பட்ட பிராண்டட் ஷூக்களை காவல்துறையினர் கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் ஆகும். 

    இரவு நேரங்களில் ஆட்டோவில் வந்து அப்பார்ட்மெண்ட், கோயில்கள் என பல இடங்களில் இவர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.

    திருடப்பட்ட ஷூக்களை சுத்தம் செய்து ஊட்டி, புதுச்சேரி போன்ற சுற்றுலா தளங்களில் அவர்கள் விற்றுள்ளனர்.

    அண்மையில், வித்யாரண்யபுரா நகரில் உள்ள ஒரு வீட்டில் ஷூக்கள் மற்றும் 2 கேஸ் சிலிண்டர்களை இவர்கள் திருடியுள்ளனர். இது தொடர்பாக வீட்டுக்காரர் புகார் கொடுக்க அங்குள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது குற்றவாளிகள் பயன்படுத்திய ஆட்டோ விவரங்களை கண்டறிந்து 2 திருடர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    • கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1961 இல் அம்மாநில அரசு திருத்தும் கொண்டு வர பரிசீலனை செய்து வருகிறது.
    • IT/ITeS/BPO துறையில் உள்ள பணியாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

    தினமும் 14 மணி நேர வேலை: அடுத்த சர்ச்சைக்கு ரெடியான கர்நாடகா.. கொந்தளிக்கும் ஊழியர்கள்கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1961 இல் அம்மாநில அரசு திருத்தும் கொண்டு வர பரிசீலனை செய்து வருகிறது. இந்த நிலையில்தான் அந்த சட்டத்திருத்தத்தில் 14 மணி நேர வேலை என்பதையும் கொண்டுவரவேண்டும் என்று ஐ.டி நிறுவனங்கள் முயற்சி செய்து வருகிறது. தற்போதுள்ள, தொழிலாளர் சட்டங்களின்படி அதிகபட்ச வேலை நேரம் என்பது 12 மணிநேரத்தை தாண்டக்கூடாது. ஆனால் நிறுவனங்கள் வைத்துள்ள முன்மொழிவில், 'IT/ITeS/BPO துறையில் உள்ள பணியாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரத்திற்கு மேல் 14 மணி நேரம் வரை வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்'  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐ.டி நிறுவனங்களின் இந்த முன்மொழிவை கர்நாடக அரசு பரிசீலித்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிகின்றன. இந்நிலையில் இதற்கு ஊழியர்கள் மற்றும்  தொழிலாளர்கள் சங்கங்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு நாளைக்கு 14 மணி நேர வேலை என்பது மனிதாபிமானமற்றது என்றும் ஊழியர்களின் உடல் மற்றும் மன நலனை கடுமையாக கூடியது என்றும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் கர்நாடகா அரசு மாநிலத்தில் உள்ள நிறுவனங்களில் கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கே அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

    • விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
    • மனிதாபிமானமற்ற செயலாகும்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள மல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சம்பவத்தன்று தனது நாயை ஸ்கூட்டரில் இரும்பு சங்கிலியால் கட்டி சாலை வழியாக ஷிர்வா என்ற பகுதிக்கு சுமார் 6 கி.மீ. தூரம் இழுத்துச் சென்றார்.

    இதை அந்த வழியாக பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து தங்களது செல்போன்களில் வீடியோ பதிவு செய்தனர். இந்த வீடியோக்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

    இதையடுத்து மொபட்டில் நாயை கட்டி இழுத்து சென்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து போலீசார் வீடியோவை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதன் அடிப்படையில் நாயை மொபட்டில் கட்டி இழுத்துச் சென்ற நபர் குறித்து விசாரணை நடத்தியபோது அவர் கொம்புகுடேவை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இதுகுறித்து உடுப்பி போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் அருண் கூறியதாவது:-

    நாயை மொபட்டில் கட்டி இழுத்துச் சென்றது தொடர்பாக தீவிர விசாரணை செய்து சம்மந்தப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம்.

    மேலும் சிலர் நாயை இழுத்துச் சென்றபோது இறந்துவிட்டதாகவும், சிலர் இறந்த பின்புதான் அந்த நாயை இழுத்துச் சென்றதாகவும் கூறுகின்றனர். எனவே அதனடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

    இதுகுறித்து பிராணிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த மஞ்சுளா கரகேரா கூறும்போது, `இந்த சம்பவம் ஒரு மனிதாபிமானமற்ற செயலாகும். நாயை இழுத்து சென்ற நபர் ஹெல்மெட் அணியாமல் மிகவும் தைரியமாக இந்த கொடூர சம்பவத்தை செய்துள்ளார். அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    • தகவல் தொழிநுட்பச் சட்டம் [2000] பிரிவு 67B இன்கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
    • குழந்தைகளின் ஆபாசப் படத்தைப் பார்ப்பது சட்டப்படி குற்றமாகாது என்று தீர்ப்பளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இணையதளத்தில் குழைந்தைகளின் ஆபாச படங்களைப் பார்த்ததாக கடந்த 2022 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    தகவல் தொழிநுட்பச் சட்டம் [2000] பிரிவு 67B இன்கீழ் [குழந்தைகளுக்கு எதிரானவற்றை உருவாக்குதல், பரப்புதல்] அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி நாகப்பிரசன்னா, குழந்தைகளின் ஆபாசப் படத்தைப் பார்ப்பது சட்டப்படி குற்றமாகாது என்று தீர்ப்பளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் தற்போது அந்த தீர்ப்பை கர்நாடக உய்ரநீதிமன்றம் திரும்பப்பெற்றுள்ளது. முந்தைய தீர்ப்பு குறித்து விளக்கமளிதுள்ள நீதிமன்றம், 'இங்கிருப்பவர்களும் மனிதர்கள்தான், எங்கள் தரப்பிலும் தவறுகள் நடப்பது சகஜம் தான். தவறைத் திருத்திக்கொள்ள எப்போதும் சந்தர்ப்பம் உள்ளது. தவறாக வாசிக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பை திரும்பப்பெறுவதோடு, வழக்கில் புதிய தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

    • உடல் ஆரோக்கியத்துடன் பிறந்த அந்த குழந்தையின் கால், கை விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது.
    • விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் பயப்பட தேவையில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    பொதுவாக இரண்டு தலைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தைகளை பார்த்து இருக்கிறோம். மேலும் கை, கால் இல்லாமல் பிறந்த குழந்தைகள் பற்றியும் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் கர்நாடகத்தில் 25 விரல்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ள அதிசயம் நடந்துள்ளது. அது பற்றிய விவரம் பின்வருமாறு:-

    பாகல்கோட்டை மாவட்டம் ராபகவி அருகே கொன்னூரை சேர்ந்தவர் பாரதி (வயது 35). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பாரதி பிரசவத்திற்காக ராபகவி டவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. உடல் ஆரோக்கியத்துடன் பிறந்த அந்த குழந்தையின் கால், கை விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது.

    அதாவது வலது கையில் 6 விரல்களும், இடது கையில் 7 விரல்களும், இரு கால்களிலும் தலா 6 விரல்களும் என மொத்தம் 25 விரல்களுடன் அந்த அதிசய குழந்தை பிறந்துள்ளது. இதை பார்த்து டாக்டர்களும், பாரதி மற்றும் அவரது குடும்பத்தினரும் ஆச்சரியம் அடைந்தனர்.

    இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில், "பாரதியின் குழந்தைக்கு 25 விரல்கள் உள்ளன. மற்றபடி குழந்தையின் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் பயப்பட தேவையில்லை" என்றனர்.

    • சினிமா மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் (நலன்) மசோதா வெள்ளிக்கிழமை சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • ஏழு உறுப்பினர்களைக் கொண்ட நல வாரியத்தை அமைப்பது, நிதியளிப்புத் திட்டங்களுக்கான நிதியை நிறுவுவதை இந்த மசோதா வலியுறுத்துகிறது.

    கர்நாடக மாநில அரசு சினிமா டிக்கெட்டுகள், சினிமா தொடர்பான ஓடிடி சந்தா கட்டணம், கலாச்சார கலைஞர்கள் வருமானத்தின் மீது இரண்டு சதவீதம் செஸ் வரி விதிக்க பரிசீலனை செய்து வருகிறது.

    மாநில அரசால் மூன்று வருடத்திற்கு ஒருமுறை ஒன்றில் இருந்து இரண்டு சதவீதம் வரை செஸ் திருத்தப்படும். இந்த செஸ் வரி சினிமா டிக்கெட்டுகள், ஓடிடி சந்தாக்கள், கர்நாடகாவில் உள்ள நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் வருவாய்க்கு ஆகியவற்றிற்கு இந்த செஸ் வரி பொருந்தும். கர்நாடக சினிமா மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் (நலன்) மசோதா வெள்ளிக்கிழமை சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஏழு உறுப்பினர்களைக் கொண்ட நல வாரியத்தை அமைப்பது மற்றும் நிதியளிப்புத் திட்டங்களுக்கான நிதியை நிறுவுவதை இந்த மசோதா வலியுறுத்துகிறது.

    இந்த மசோதா திரைப்படத் துறையில் ஒரு கலைஞராக (நடிகர், இசைக்கலைஞர், நடனக் கலைஞர், முதலியன) அல்லது மேற்பார்வை, தொழில்நுட்பம், கலை ஆகியவற்றில் பணிபுரியும் எந்தவொரு நபரும் ஒரு சினிமா மற்றும் கலாச்சார ஆர்வலராகக் கருதப்படுவார் எனக் கூறுகிறது.

    • பெங்களூரில் டாட்டூ சூத்ரா ஸ்டூடியோ வைத்திருக்கும் கலைஞர் ரிதேஷ் அகாரியா
    • அவரது நெஞ்சில் “F**k the police” என்று எழுத சொல்லியதாக தெரிவித்துள்ளார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள டாட்டூ கலைஞர் ஒருவர் "F**k the police" என்று நபர் ஒருவரின் நெஞ்சில் குத்திய டாட்டூவை இணையத்தில் பகிர்ந்து வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளார். பெங்களூரில் டாட்டூ சூத்ரா ஸ்டூடியோ வைத்திருக்கும் ரிதேஷ் அகாரியா என்ற நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நபர் ஒருவரின் நெஞ்சில் "F**k the police" என்று எழுதப்பட்டிருந்த டாட்டூவை பகிர்ந்ததிலிருந்தே இந்த பிரச்சனை தொடங்கியுள்ளது.

     

    இந்த புகைப்படம் வைரலாக நிலையில் போலீசின் கவனத்துக்கும் இது சென்றுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரிதேஷ், தனது கடைக்கு வந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர் அவரது நெஞ்சில் "F**k the police" என்று எழுத சொல்லியதாக தெரிவித்துள்ளார்.

    இருந்தபோதிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக டாட்டூ கலைஞர் ரிதேஷ் அகாரியா மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 352 இந்த கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    • மக்களுக்கும் பாம்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விடைபெற்றனர்.
    • பாம்பு பிடிக்கும் வீரர் லாவகமாக குச்சியால் அதை சுவர் பக்கமாக திருப்பிவிட, அது பொந்து என நினைத்து பைக்குள் தஞ்சம் அடைந்தது.

    கர்நாடகாவின் அகும்பே பகுதி மழைக்காடுகள் நிறைந்த செழுமையான இடமாகும். இங்குள்ள குடியிருப்பு பகுதியில் பிரமாண்ட ராஜநாகம் ஒன்று புகுந்ததை மக்கள் கண்டனர். அது ஒரு வீட்டை ஒட்டிய புதரில் புகுந்து மரத்தின் மீது ஏறிவிட்டது. மரத்தில் நின்ற பாம்பை ஊரே கூடி வேடிக்கை பார்த்தது. அதற்குள்ளாக தகவல் அறிந்து மழைக்காடு ஆராய்ச்சி நிலைய பாம்பு பிடி வீரர்கள் களத்திற்கு வந்தனர்.

    அவர்கள் மரத்தில் நின்ற பாம்பை கீழே இறக்க சற்று சிரமப்பட்டனர். நீளமான அந்தப் பாம்பு பயங்கரமாக சீறிக் கொண்டே இருக்கிறது.

    இறுதியில் அந்த பாம்பை வாலைப் பிடித்து மரத்தில் இருந்து கீழே இறங்கினார் ஒரு பாம்பு பிடி வீரர். மற்றொரு பெண் வன அதிகாரி, சுவரை ஒட்டி பாம்பு பிடிக்கும் பையை வைத்து அதன் வாய்ப்பகுதியில் ஒரு குழாயை கட்டி, பொந்து போல ஏற்பாடு செய்கிறார். கீழே இறக்கப்பட்ட பாம்பு எந்தப்பக்கம் செல்வது என்று பரபரப்பாக ஓடும்போது, பாம்பு பிடிக்கும் வீரர் லாவகமாக குச்சியால் அதை சுவர் பக்கமாக திருப்பிவிட, அது பொந்து என நினைத்து பைக்குள் தஞ்சம் அடைந்தது. அதை மூட்டை கட்டிய அதிகாரிகள் வனப்பகுதிக்குள் கொண்டு பாதுகாப்பாக விடுவித்தனர்.

    மக்களுக்கும் பாம்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விடைபெற்றனர். இதுபற்றிய வீடியோவை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். ஐ.எப்.எஸ். அதிகாரி சுசந்தா நந்தா எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். அவை இரண்டும் லட்சக்கணக்கானவர்களின் பார்வையை ஈர்த்தது.





    • சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு அதிவிரைவு ரெயில் (12657) வருகிற 31-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 7, 14-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
    • ஒயிட்பீல்டு-கே.எஸ்.ஆர். பெங்களூரு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    பெங்களூரு:

    பெங்களூரு யார்டு மற்றும் பெங்களூரு கன்டோன்மென்ட்-கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் நிலையங்கள் இடையே உள்ள பாலங்கள் மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சில ரெயில்கள் முழுவதுமாகவும், பகுதியாகவும் ரத்தும் செய்யப்பட்டுள்ளன. சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    * கே.எஸ்.ஆர். பெங்களூரு-டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் அதிவிரைவு ரெயில் (வண்டி எண்: 12658) வருகிற 30-ந்தேதி, அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6 மற்றும் 13-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    * டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு அதிவிரைவு ரெயில் (12657) வருகிற 31-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 7, 14-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    * டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு அதிவிரைவு ரெயில் (12657) வருகிற 30, அடுத்த மாதம் 6 மற்றும் 13-ந்தேதிகளில் ஒயிட்பீல்டு வரை மட்டும் இயக்கப்படும். ஒயிட்பீல்டு-கே.எஸ்.ஆர். பெங்களூரு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * லோக்மானிய திலக் டெர்மினஸ் (மும்பை)-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (11013) வருகிற 29, அடுத்த மாதம் 5 மற்றும் 12-ந்தேதிகளில் பெங்களூரு கிழக்கு, பெங்களூரு கன்டோன்மென்ட், கே.எஸ்.ஆர். பெங்களூரு வழியாக இயங்குவதற்கு பதிலாக கவுரிபித்தனூர், எஸ்.எம்.வி.டி. பெங்களூரு, ஓசூர் வழியாக இயக்கப்படும்.

    * டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-மைசூரு காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16021) வருகிற 30, அடுத்த மாதம் 6, 13-ந்தேதிகளில் பெங்களூரு கிழக்கு, பெங்களூரு கன்டோன்மென்ட் வழியாக இயங்குவதற்கு பதிலாக கே.ஆர்.புரம், பையப்பனஹள்ளி, பானசவாடி, ஹெப்பால், யஷ்வந்தபுரம், கே.எஸ்.ஆர். பெங்களூரு வழியாக மாற்று பாதையில் இயங்க உள்ளது.

    * மைசூரு-டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16022) வருகிற 30, அடுத்த மாதம் 6 மற்றும் 13-ந்தேதிகளில் பெங்களூரு கன்டோன்மென்ட் வழியாக இயங்குவதற்கு பதிலாக கே.எஸ்.ஆர். பெங்களூரு, யஷ்வந்தபுரம், ஹெப்பால், பானசவாடி, பையப்பனஹள்ளி, கே.ஆர்.புரம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×