என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கர்நாடகா
- குரங்குக்கு வாழை இலையில் தடல் புடல் சாப்பாடு விருந்து வழங்கப்பட்டது.
- வயிறு நிறைந்ததும் அது தனக்குரிய வேலையை காட்ட தொடங்கியது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் ஹிரிசாவே நுகேஹள்ளி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமண விழா நடைபெற்றது. விழாவில் மணமகன் வீட்டார், மணமகள் வீட்டார் ஏராளமானோர் குவிந்தனர்.
திருமணம் முடிந்ததும் மண்டபத்தில் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் சுட சுட சுவையான உணவு விருந்து பரிமாறப்பட்டது. அப்போது குரங்கு ஒன்று மண்டபத்திற்குள் புகுந்து மாப்பிள்ளையின் அருகில் அமர்ந்தது.
அந்த குரங்குக்கு வாழை இலையில் தடல் புடல் சாப்பாடு விருந்து வழங்கப்பட்டது. அது ஹாயாக பந்தியில் உட்கார்ந்து ருசிக்க, ருசிக்க சாப்பிட்டது. வயிறு நிறைந்ததும் அது தனக்குரிய வேலையை காட்ட தொடங்கியது.
பந்தியில் சாப்பிட்டு கொண்டிருந்த மற்றவர்களின் வாழை இழைகளை பிடித்து இழுத்தும், அதில் இருந்த உணவுகளை கீழே இழுத்து போட்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டது.
மேலும் நாற்காலியிலும், மேஜையிலும் தாவி, தாவி குதித்து இலையில் இருந்த உணவுகளை தூக்கி வீசியது.
மேலும் திருமண விழாவிற்கு வந்திருந்த சுசீலாம்மா, லீலாவதி, நிங்ககவுடா, கவுரம்மா, கிரிஜாம்மா மற்றும் மஞ்சுஸ்ரீ என்ற 7 வயது சிறுமி ஆகியோரை துரத்தி துரத்தி கடித்து குதறி காயப்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த திருமணத்திற்கு வந்த 2 வீட்டார் உறவினர்களும் அங்கும், இங்குமாக ஓடினர்.
பின்னர் அங்கிருந்து வெளியே வந்த குரங்கு அதே சாலையில் உள்ள மாவு ஆலைக்குள் புகுந்து ஹொன்ன ஹள்ளியை சேர்ந்த கிரிகவுடா, திம்மே கவுடா ஆகியோைரயும் கடித்து குதறியது. இவர்கள் அனைவரும் ஹிரிசாவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 4 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதால் மேல்சிகிச்சைக்காக ஹாசன் மற்றும் ஆதிசுஞ்சனகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் குரங்கு புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
- சாலையோரம் விற்கப்படும் பானிபூரிகள் தரமில்லாமல் இருப்பதாக பல்வேறு புகார்கள் வந்தன.
- பானிபூரியில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருந்த பானிபூரி தற்போது இந்தியா முழுவதும் உள்ளவர்களும் விரும்பி உண்ணும் உணவாக மாறிவிட்டது.
இந்நிலையில், கர்நாடகாவில் சாலையோரம் விற்கப்படும் பானிபூரிகள் தரமில்லாமல் இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இதனையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பல்வேறு கடைகளில் இருந்து 260 பானிபூரி மாதிரிகளை சோதனை செய்த பின்னர் அதிர்ச்சிகரமான முடிவுகளை கண்டறிந்துள்ளனர்.
சோதனை செய்யப்பட்ட பானிபூரியில் 22% உண்பதற்கான பாதுகாப்பு தரத்தை மீறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
சோதிக்கப்பட்ட 260 பானிபூரி மாதிரிகளில் 41 மாதிரிகளில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
18 பானிபூரி மாதிரிகள் மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்றவை என்றும், பானிபூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து உணவகங்களில் தரமற்ற உணவுகள் விற்கப்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே கர்நாடகாவில் கோபி மஞ்சூரியன், பஞ்சு மிட்டாய்களுக்கு கலக்கப்படும் ரோடமின் பி கெமிக்கலை அம்மாநில அரசு தடை செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டிலும் பல்வேறு வண்ணங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரெயில்வே துறையின் செயல்பாடும் ராணுவம் போன்றது.
- டிக்கெட் கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளோம்.
பெங்களூரு:
மத்திய ரெயில்வே மற்றும் ஜல்சக்தி துறை இணை மந்திரி வி.சோமண்ணா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வந்தே பாரத் ரெயிலில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயணம் செய்யும் வகையில் அதன் டிக்கெட் கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக பிரதமர் மோடியுடன் ஆலோசித்தோம். ரெயில்வே துறையில் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவின் அனுபவம் எனக்கு ஊக்கமளிக்கிறது.
ரெயில்வே துறையின் செயல்பாடும் ராணுவம் போன்றது. நாட்டில் ராணுவம் முதலிடத்திலும், ரெயில்வே துறை 2-வது இடத்திலும் உள்ளது. அதற்கேற்ப 2 துறைகளின் செயல்பாடுகளும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு ஆட்சி செய்கிறது.
- அரசியலில் பெரும் புயலை கிளப்பி வருகிறது.
பெங்களூர்:
கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பதவிச் சண்டையில் ஆட்சி கவிழ்வது, ஆட்சி மாற்றம் ஏற்படுவது, முதல்வர்கள் மாற்றம் என்பது தொடர் கதைதான்.
தற்போது காங்கிரஸ் வெற்றி பெற்று முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு ஆட்சி செய்கிறது.
காங்கிரஸ் வெற்றி பெற்றதும் டி.கே.சிவகுமார் முதல்வர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் காங்கிரஸ் மேலிடம் டி.கே. சிவகுமாரை சமாதானப்படுத்தி சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியை வழங்கியது. டி.கே. சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
அதாவது கர்நாடகா முதல்வராக சித்தராமையா இரண்டரை ஆண்டுகளும் டி.கே.சிவகுமார் இரண்டரை ஆண்டுகளும் பதவி வகிக்கலாம் என காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி இருந்ததாகவும் கூறப்பட்டது.
இதனை இப்போதும் சித்தராமையா கோஷ்டி மறுத்து வருகிறது. டி.கே.சிவகுமாரை சமாதானப்படுத்த துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது.
ஆனால் சித்தராமையா கோஷ்டியோ, துணை முதல்வர் டி.கே சிவகுமாரை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக கூடுதல் துணை முதல்வர்களை நியமிக்க வேண்டும் என்கிறது. இதனை டி.கே.சிவ குமார் தரப்பு கடுமையாக எதிர்க்கிறது. அப்படி கூடுதல் துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டால் முதல்வர் பதவியை டி.கே. சிவகுமாருக்குதான் தர வேண்டும் என்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டி.கே.சிவகுமாருக்கே முதல்வர் பதவி தரப்பட வேண்டும் என முதல்வர் சித்தராமையா மேடையில் அமர்ந்திருக்கும் போதே ஒக்கலிகா ஜாதி மடாதிபதி வலியுறுத்தி இருந்தது பெரும் சர்ச்சையானது.
இதனைத் தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனால் கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றம், துணை முதல்-மந்திரிகளை கூடுதலாக நியமிக்கும் விவகாரங்கள் அரசியலில் பெரும் புயலை கிளப்பி வருகிறது.
சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக இரு கோஷ்டியாக பிரிந்து மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் கருத்து தெரிவித்து வருவதால் காங்கிரஸ் கட்சிக்குள் பூகம்பம் வெடிக்க தொடங்கியுள்ளது.
இதற்கிடையே ஒக்கலிக பிரிவை சேர்ந்த டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியை வழங்கியதைப் போல லிங்காயத்து மற்றும் பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வர் கூறியதாவது:-
கடந்த 2013-ல் நான் காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்த போது நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று சித்த ராமையா முதல்-அமைச்சர் ஆனார். எனக்கு 2018-ல் தான் துணை முதல்வர் பதவி வழங்கினார். ஆனால் கடந்த ஆண்டு காங்கிரஸ் வெற்றி பெற்றதும் நான் துணை முதல்வர் பதவி கேட்டபோது கட்சி மேலிடம் மறுத்தது.
ஒக்கலிக பிரிவை சேர்ந்த டி.கே. சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் வெற்றிக்கு காரணமாக இருந்த லிங்காயத்து, சிறுபான்மையின பிரிவினருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்பட வில்லை.
குறிப்பாக பட்டியல் இனத்தவரின் ஆதரவின் காரணமாகவே காங்கிரஸ் சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. எனவே அந்த பிரிவினருக்கு துணை முதல்வர் பதவி கட்டாயம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் பொதுப் பணித்துறை மந்திரி சதீஷ் ஜார்கி கோளி, கூட்டுறவுத்துறை மந்திரி ராஜண்ணா ஆகியோர் சாதி வாரியாக பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
இதே போல் வீட்டு வசதித்துறை மந்திரி ஜமீர் அகமது கான் சிறுபான்மை யினருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி யதால் கடும் நெருக்கடி ஏற்பட் டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்தே சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் இடையே பதவி சண்டை இருந்து வந்த நிலையில் 3 அமைச்சர்கள் துணை முதல்வர் பதவி கேட்டுள்ளதால் காங்கிரஸ் தலைமைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவகுமார். இனி மேல் முதல்வர், துணை முதல்வர் பதவி பற்றி யாரும் பேசக்கூடாது. காங்கிரஸ் தலைவர்கள் யாரேனும் மீறிப் பேசினால் நோட்டீஸ் கொடுப்போம் என்றார்.
ஆனால் சித்தராமையா மந்திரி அமைச்சர் ராஜண்ணா இதனை உடனே நிராகரித்திருக்கிறார். டி.கே.சிவகுமார் கொடுக்கும் நோட்டீசுக்கு எங்களுக்கு பதிலளிக்க தெரியும்; நாங்கள் எல்லாம் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்க முடியாது என ஆவேசமாக பேசியிருக்கிறார். முதல்வர், துணை முதல்வர் பதவி விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது.
- கொலை செய்யப்பட்ட ரேணுகா சாமி செல்போனை போலீசார் தீவிரமாக தேடினர்.
- ரேணுகா சாமி பயன்படுத்திய செல்போன் எண்ணிலிருந்து மற்றொரு சிம்கார்டு வாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:
கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ரேணுகா சாமி கொலை வழக்கு தொடர்பாக நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா மற்றும் ரசிகர் மன்றத்தினர், கூலிப்படையினர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் நடிகை பவித்ரா கவுடா மற்றும் தர்ஷனுக்கு எதிரான வலுவான ஆதாரங்களை சிறப்பு விசாரணை அதிகாரிகள் தொடர்ந்து சேகரித்து வருகின்றனர்.
அதன்படி கொலை செய்யப்பட்ட ரேணுகா சாமி செல்போனை போலீசார் தீவிரமாக தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கோர்ட் அனுமதியுடன் ரேணுகா சாமி பயன்படுத்திய செல்போன் எண்ணிலிருந்து மற்றொரு சிம்கார்டு வாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் ரேணுகா சாமி பயன்படுத்திய சமூக வலைதளங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கொலை செய்யப்பட்ட ரேணுகா சாமி நடிகை பவித்ரா கவுடாவிற்கு 200-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆபாச வார்த்தைகள் இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பியது தெரியவந்தது.
இதையடுத்து பவித்ரா கவுடா அந்த கணக்கை முடக்கிய பின்பும் ரேணுகா சாமி போலி கணக்கை தொடங்கி மீண்டும் பவித்ரா கவுடாவுக்கு ஆபாச தகவல்கள் அனுப்பியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் பவித்ராவின் செல்போனையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பான தகவல்களை பெற இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கும் போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.
- சம்பளம் கேட்டு அதிர்ந்ததாக ‘ரெடிட்’ வலைத்தளத்தில் பயனர் குறிப்பிட்டுள்ளார்.
- பதிவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வெளியான பதிவு ஒன்று பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அது குறித்து பார்ப்போம்...
பெங்களூருவில் திருமண விழாவிற்கு சென்றவர் வீடு திரும்புவதற்காக காரை புக் செய்துள்ளார். கார் வந்ததும் அதில் ஏறி பயணம் மேற்கொண்டவர் அந்த கார் ஓட்டுநரிடம் சுவாரசியமாக பேசி வந்துள்ளார். அப்போது, அவரின் சம்பளம் கேட்டு அதிர்ந்ததாக 'ரெடிட்' வலைத்தளத்தில் பயனர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது:-
கார் ஓட்டுநர் ஒரு நாளை ரூ. 3000 முதல் 4000 வரை சம்பாதிப்பதாகவும், இதுபோக கூடுதலாக, அவர் ஓலாவுடன் இணைக்கப்பட்ட மற்றொரு வண்டியை வைத்திருக்கிறார். அது கூடுதல் வருமானத்தை தருவதாக கூறியுள்ளார். இதனால் தன் குழந்தைகள் நல்ல பள்ளியில் படிக்கிறார்கள் என்று பெருமையுடன் கூறும் , அவர் 2019-ம் ஆண்டு முதல் காரை ஓட்டுவதாக தெரிவித்தார். மேலும், ஒரு நாளைக்கு 3000 சம்பாதித்து, ஒரு மாதத்திற்கு 25 நாட்கள் வேலை செய்தால், அது ஒரு மாதத்திற்கு ரூ.75,000 ஆகும். பெட்ரோல், EMI மற்றும் இதர செலவு போக தன்னிடம் போதுமான பணம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த பதிவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், "இது மிகவும் நியாயமானது மற்றும் நம்பக்கூடியது. எனக்கு நெருங்கிய நண்பரின் சகோதரர் ஒருவர் ஓலா ஓட்டுநராக பணிபுரிகிறார். அவர் வழக்கமாக விமான நிலையம் அல்லது ரெயில் நிலையம் பிக்-அப்களில் மட்டுமே கவனம் செலுத்துவார். சிறிது நேரம் வேலை செய்கிறார். ஆனால் செலவுகளுக்குப் பிறகு வீட்டிற்கு ஒரு தொகையை கொண்டு வருகிறார்" என்று எழுதினார்.
- கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80அடியாகும்.
- தொடர் மழையின் காரணமாக 2 அணைகளுக்கும் வினாடிக்கு 36 ஆயிரத்து 517 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை கடந்த 2 நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொட்டி வரும் மழை காரணமாக காவிரி, நேத்ராவதி, குமாரதாரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கிருஷ்ண ராஜசாகர் அணை மற்றும் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகாவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 92.80 அடியாக உயர்ந்து காணப்பட்டது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரத்து 644 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 496 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 75,06 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 17 ஆயிரத்து 873 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் மழையின் காரணமாக 2 அணைகளுக்கும் வினாடிக்கு 36 ஆயிரத்து 517 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நீர்வரத்து இதே அளவில் நீடித்தால் இன்னும் ஒரு வாரத்தில் 2 அணைகளும் நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பி வரும் நிலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு வெறும் 43 கனஅடி தண்ணீரே வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 39.90 அடியாக குறைந்தது. தொடர்ந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட அதிகளவில் வெளி யேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
- எடியூரப்பா மீது சிஐடி போலீசார் நேற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
- பெண்னின் வீட்டுக்குச் சென்று தாயையும் மகளையும் தங்களின் இடத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.
பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வருமான 81 வயதான எடியூரப்பா தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அவர் மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக துரித நடவடிக்கை மேற்கொள்ள வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டது.
அதன்படி சிஐடி போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் எடியூரப்பா மீது சிஐடி போலீசார் நேற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், பாதிக்கப்பட்ட 17 வயது பெண்ணும் அவரது தாயும் தங்களுக்கு நேர்ந்தது குறித்து வாய் திறக்காமல் இருக்க எடியூரப்பா மற்றும் அவரது சகாக்கள் 3 பேர் அவர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர் என்று சிஐடி அம்பலப்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பேஸ்புக்கில் எடியூரப்பாவை குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், எடியூரப்பாவின் சகாக்களான அருண், ருத்ரேஷ், மாரிச்சாமி ஆகியோர் அப்பெண்னின் வீட்டுக்குச் சென்று தாயையும் மகளையும் தங்களின் இடத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.
அங்கு வைத்து பெண்ணின் தாய் பேஸ்புக்கில் பதிவிட்ட வீடியோவை நீக்க வறுபுறுத்தியுள்ளனர். மேலும் எடியூரப்பாவின் கட்டளைப்படி அவர்களுக்கு ரூ. 2 லட்சம் ரொக்கமாக அளித்துள்ளனர் என்று அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கடந்த மாதம் நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- சிவமோகாவிற்கு பக்தர்கள் மினி பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
- டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் பைடாகி பகுதியில் இன்று [ஜூன் 28] வெள்ளிக்கிழமை அதிகாலை புனே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு டிரக் வாகனம் மீது பயணிகள் சென்ற மினி பஸ் மோதிய விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவி மாவட்டத்தில் சாவாடத்தி பகுதியில் உள்ள எல்லம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது சொந்த ஊரான சிவமோகாவிற்கு பக்தர்கள் மினி பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தபோது அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் பஸ் ஓட்டும்போது டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- மறுமார்க்கமாக தாதர்-நெல்லை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலும் (11021) இனிமேல் யஷ்வந்தபுரம் வழியாக செல்லாமல் சிக்கபானவாரா, எஸ்.எம்.வி.டி. பெங்களூரு வழியாக இயக்கப்படும்.
- கடந்த ஆண்டு கே.எஸ்.ஆர். பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்டு வந்த ரெயில், எஸ்.எம்.வி.டி. பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு:
தென்மேற்கு ரெயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட யஷ்வந்தபுரம் ரெயில் நிலையம் வழியாக ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களுக்கு இங்கிருந்து தான் ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இதனால் இங்கு ஏற்படும் நெரிசலை தவிர்க்க சில ரெயில்களை மாற்றுப்பாதையில் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி நெல்லை-தாதர் 'சாளுக்கியா' எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு யஷ்வந்தபுரம் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இனிமேல் சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரெயில் யஷ்வந்தபுரம் வழியாக இயங்காது. இந்த ரெயில் இனி எஸ்.எம்.வி.டி. பெங்களூரு வழியாக இயங்க உள்ளது. வாரத்தில் திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் கோவில்பட்டி, மதுரை, திண்டுக்கல், சேலம், ஓசூர், யஷ்வந்தபுரம் வழியாக இயக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நெல்லை-தாதர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 11022) ஓசூருக்கு அடுத்து எஸ்.எம்.வி.டி. பெங்களூரு, சிக்கபானவாரா வழியாக இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கமாக தாதர்-நெல்லை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலும் (11021) இனிமேல் யஷ்வந்தபுரம் வழியாக செல்லாமல் சிக்கபானவாரா, எஸ்.எம்.வி.டி. பெங்களூரு வழியாக இயக்கப்படும்.
இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு கே.எஸ்.ஆர். பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்டு வந்த ரெயில், எஸ்.எம்.வி.டி. பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
- நகைச்சுவையாக பேசி அந்த இளைஞரிடம் சில கேள்விகளை கேட்டார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஒரு திருமண மண்டப த்தில் நேற்று தாலுகா அளவிலான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் நளின் அதுல் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கலெக்டர் மேடையில் இருந்தபடி முகாமில் பங்கேற்ற பொதுமக்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் மனு வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது கனககிரி கவுடா ஓனி பகுதியை சேர்ந்த சங்கப்பா என்ற வாலிபர் முகாமில் கலந்து கொண்டு தனக்கு மணமகள் தேடி தருமாறு கலெக்டர் நளின் அதுலிடம் மனு கொடுத்தார்.
அப்போது அவர் கூறுகையில், `நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எஸ்.எஸ்.எல்.சி. படித்து விட்டு ஊரில் உள்ள தனியார் கல்லூரியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன்.
விவசாய குடும்பத்தில் இருந்து வந்த நான் 10 ஆண்டுகளாக மணமகள் தேடி லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனக்கு பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இதனால் நான் மனதளவில் கஷ்டப்படுகிறேன். நீங்கள் ஒரு மணப்பெண்ணை கண்டுபிடித்து என் திருமணத்திற்கு உதவுங்கள் என கோரிக்கை வைத்தார்.
இதைக் கேட்டு மேடையில் இருந்த கலெக்டர் நளின் அதுல் மற்றும் அனைத்து அதிகாரிகளும் சிரித்தனர். மனுவை படித்து முடித்த கலெக்டர் நகைச்சுவையாக பேசி அந்த இளைஞரிடம் சில கேள்விகளை கேட்டார். கடைசியில் தாசில்தார் உங்களுக்கு பெண் தேடி தருவார் என கூறி, அந்த இளைஞரை சமாதானப்படுத்தினார்.
- 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
- பவித்ரா கவுடாவுக்கு வருத்தம் இல்லாதது குறித்து மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டு
பெங்களூரு:
கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ரேணுகா சாமி கொலை வழக்கு தொடர்பாக நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கில் இருந்து தப்பிக்க தர்ஷன், பவித்ரா கவுடா ஆகியோருக்கு அரசியல் கட்சியினர் ஆதரவாக செயல்பட்டு வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் போலீசார் அதை மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் போலீஸ் காவலில் இருந்த போது பெண் சப்-இன்ஸ்பெக்டர் பாதுகாப்புடன் விசாரணைக்காக பவித்ரா கவுடாவை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
அப்போது போலீஸ் காவலில் இருந்த போது பவித்ரா கவுடா தனது வீட்டில் இருந்து மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு திரும்பினார். அப்போது அவர் லிப்டிஸ் டிக் மற்றும் மேக்அப் போட்டு கொண்டு சிரித்தப்படி வந்ததாக தகவல் வெளியானது.
மேலும் ரேணுகா சாமி கொலையில் பவித்ரா கவுடாவுக்கு வருத்தம் இல்லாதது குறித்து மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து பவித்ரா கவுடாவுடன் பாதுகாப்புக்கு சென்ற பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்