search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
    • அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.

    புதுச்சேரி :

    புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த கொடூரமான சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக ஜிப்மர் மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஜிப்மரின் வெளிப்புற நோயாளி பிரிவுகளில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு போராட்டங்கள் முடிவுக்கு வரும் வரை, திங்கட்கிழமை (19.08.2024) முதல் வெளிப்புற நோயாளி பிரிவுகள் காலை 08:00 முதல் 10:00 மணி வரை மட்டுமே இயங்கும்.

    இந்த நேரத்தில் அவசரமற்ற அல்லது நீண்டகால நோய் சிகிச்சை பெறுவோர் வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதனால் மருத்துவர்கள் அவசர சிகிச்சை தேவைப்படும் நோய்களைக் கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்த முடியும். இன்னும் சில நாட்களில் போராட்டம் முடிவுக்கு வரும் என நம்புகிறோம். அதனைத் தொடர்ந்து முழு வெளிப்புற பிரிவு சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு செய்தித்தாள் மற்றும் ஊடகங்களின் மூலம் தெரிவிக்கப்படும்.

    இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இருப்பினும், மருத்துவ பராமரிப்பு அவசியமாக தேவைப்படும் நபர்களின் கவனிப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இது மேற்கொள்ளப்படுகிறது.

    அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். மேலும் உயிர்காக்கும் பராமரிப்பு தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதை உறுதிசெய்கிறோம்.

    நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக சுகாதார சேவைகளை தொடர்ந்து வழங்குவதில் ஜிப்மர் அர்ப்பணிப்புடன் உள்ளது.

    இந்த இக்கட்டான நேரத்தில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள், ஒத்துழைப்பையும் உதவியையும் அளிப்பதன் மூலம் அத்தியாவசிய மற்றும் அவசரமான சேவைகளை அதிகபட்சமாக முடிந்தவரை வழங்க இயலும் என்பதை ஜிப்மர் நிறுவனம் அறிவுறுத்துகிறது. பொதுமக்களின் இந்த ஒத்துழைப்பிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கூட்டுறவு பதிவாளர் தீவிர விசாரணை.
    • 6,237 சங்கங்கள் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஊழி யர்கள், உறுப்பினர்கள் நலனுக்கான கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்படு கின்றன. சங்க உறுப்பினர் களிடமிருந்து நிதி திரட்டி இந்த சங்கங்கள் வழியாக கடனுதவி, நலத்திட்டங்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்கின்றன.

    இந்த கூட்டுறவு சங்கங்கள், புதுச்சேரி கூட்டுறவு சொசைட்டி சட்டத்தின் கீழ் கூட்டுறவு துறையில் பதிவு செய்யப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான சங்கங்கள், முறையாக செயல்படாமல் பெயரளவுக்கு உள்ளதாக, கூட்டுறவு துறைக்கு புகார்கள் சென்றன.

    இது தொடர்பாக கூட்டுறவு பதிவாளர் தீவிர விசாரணை நடத்தினார். இதனை யடுத்து தற்போது 86 கூட்டுறவு சங்கங்கள் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை கூட்டு றவு பதிவாளர் யஸ்வந்தையா பிறப்பித்தார்.

    இந்த பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கழகம், புதுச்சேரி பொறியியல் கல்லூரி, எரிசாராய ஆலை, காவலர், சுதேசி காட்டன் மில் உள்பட பல்வேறு அரசு ஊழியர்களின் கூட்டுறவு சங்கங்களும் அடங்கியுள்ளன.

    இந்த கலைப்பு பட்டியல் அரசாணையாக பொது மக்களின் பார்வைக்காக தற்போது வெளியிடப் பட்டுள்ளன.

    புதுச்சேரியில் ஏற்கனவே கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை 1256 சங்கங்களும், 1996-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை 1512 சங்கங்களும் கலைக்கப்பட்டுள்ளன.

    கடந்த 32 ஆண்டுகளில் புதுச்சேரியில் செயல்படாத 6,237 சங்கங்கள் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளன. இந்த அதிரடியை இந்திய கம்பெனியின் மாவட்ட சங்கங்களின் பதிவாளர் எடுத்து இருந்தார்.

    தற்போது அந்த வரிசையில் கூட்டுறவு பதிவாளரும் இறங்கி, கூட்டுறவு சங்கங்களை அதிரடியாக கலைத்துள்ளார். இந்த கூட்டுறவு சங்கங்கள் செயல் படுகின்றதா? என்பதை அறிய பல முறை, நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. அதற்கு முறையான பதில் வரவில்லை.

    சங்க முகவரிக்கு அனுப்பப்பட்ட கடிதங்களும் திரும்பி வந்தது. இதனையடுத்து அதிரடியாக 86 கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்பட்டுள்ளது.

    • சமீபத்தில் புதுச்சேரி கவர்னராக கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டார்.
    • புதுச்சேரியில் சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், குஜராத் தில் சப்-கலெக்டராக பணியில் சேர்ந்து, கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர்.

    இவர் குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி, முதல்-மந்திரியாக இருந்த போது, முதன்மை தலைமை செயலராக பணி புரிந்து ஓய்வு பெற்றார். ஓய்விற்கு பின்னரும், கடந்த ஜூன் மாதம் வரை முதன்மை செயலாராக பணி புரிந்தார்.

    இந்நிலையில் தான் சமீபத்தில் புதுச்சேரி கவர்னராக கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டார். குஜராத்தை பொருத்தவரை, சோலார் மின் உற்பத்தியில், மின் மிகை மாநிலமாக உள்ளது.

    நாட்டிலேயே, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனில் குஜராத் முன்னணியில் இருக்க முக்கிய காரணமாக விளங்கியவர் கவர்னர் கைலாஷ்நாதன்.

    இந்நிலையில் அவர் தற்போது புதுச்சேரியில் சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இங்குள்ள அனைத்து அரசு அலுவலங்களிலும், சூரிய சக்தி மின் உற்பத்தியை தொடங்க உத்தரவிட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து, இது சம்பந்தமான விரிவான திட்ட மதிப்பீடு அறிக்கையை தயாரிக்கும் பணியை, மின்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின் றனர்.

    இதையடுத்து அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களில், சூரிய சக்தி மின் உற்பத்தி விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    • கவர்னர் தேநீர் விருந்தை தொடர்ந்து நாங்கள் புறக்கணிக்கவில்லை.
    • என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வைத்துக்கொண்டு அவரால் மாநில அந்தஸ்து கண்டிப்பாக பெற முடியாது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னர் தேநீர் விருந்தை தொடர்ந்து நாங்கள் புறக்கணிக்கவில்லை. முன்பு இருந்த கவர்னர்கள் கிரண்பேடி, தமிழிசை ஆகியோர் அரசியல் செய்தனர். அதற்குத்தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அதிகாரியாக இருந்த கைலாஷ்நாதன், பா.ஜனதா முதலமைச்சர்களிடம் வேலை செய்திருந்தாலும், தற்போது அவர் கவர்னர்.

    அவர் நடுநிலையோடு செயல்படுவார் என நம்புகிறோம். அப்படி செயல்பட்டால் அவருடன் சேர்ந்து செயல்படுவோம். காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் அரசியல் செய்து அந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கின்றனர்.

    புதுவை கவர்னர் அரசியல் செய்தால் அதையும் எதிர்ப்போம்.

    புதுவைக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. மத்திய அரசிடம் வாங்குவது ரூ.2 ஆயிரத்து 300 கோடிதான். புதுவைக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை கிடைக்க வேண்டும்.

    எனவே மாநில அந்தஸ்து பெற வேண்டியது அவசியம். புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் டெல்லிக்கும் கொடுக்க வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவால் இதை கேட்பார் என்பதால் மத்திய அரசு புதுவையை புறக்கணித்து வருகிறது.

    முதலமைச்சராக ரங்கசாமி இருக்கும் வரை அவரால் மாநில அந்தஸ்து வாங்க முடியாது. அவர் புதுவை எல்லையை தாண்டி டெல்லி செல்லாதவர். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதவர். முதலமைச்சர் மாநாட்டில் பங்கேற்காதவர். அவர் பா.ஜனதாவில் சேர்ந்தால் மட்டுமே புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்.

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வைத்துக்கொண்டு அவரால் மாநில அந்தஸ்து கண்டிப்பாக பெற முடியாது. பா.ஜனதா தனியாக ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் அப்போது வழங்குவார்கள். மத்திய மோடி அரசு புதுவையில் அரசியல் விளையாட்டு செய்கிறது. ரங்கசாமியை ஏமாற்றுகின்றனர். மாநில அந்தஸ்து பெற பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்த ரங்கசாமி, ஏன் எந்த கூட்டணியை விட்டு வெளியேறவில்லை?

    அவருக்கு முதலமைச்சர் நாற்காலி வேண்டும். அதற்காக அவர் கட்சியை, எம்.எல்.ஏ.க்களை தியாகம் செய்வார். மாநில அந்தஸ்து பெற ராகுல்காந்தி, எதிர்கட்சி எம்.பிக்கள், பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காலை 6 மணிக்கு ஆசிரமம் வாசிகளின் கூட்டு தியானம் நடைபெறுகிறது.
    • அரவிந்தர் அறை மற்றும் சமாதியை தரிசனம் செய்யலாம்.

    புதுச்சேரி:

    தேசிய மற்றும் ஆன்மிக வாதியான மகான் அரவிந் தர் 1872-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி மேற்கு வங்க மாநி லம் கொல்கத்தா வில் பிறந்தார். புதுச்சேரியில் ஆன்மிகப் பணியில் ஈடு பட்ட அரவிந்தர் 1950-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மறைந்தார்.

    அரவிந்தரின் 152-வது பிறந்த நாள் வருகிற 15-ந் தேதி (சுதந்திர தினத் தன்று) கொண்டாடப் படுகிறது. இதனையொட்டி சர்வதேச நகரமான புதுவையையொட்டி தமிழக பகுதியில் அமைந்துள்ள ஆரோவில்லில் ஆம்பி தியேட்டரில் அதிகாலை 4. 45 முதல் 6.30 மணி வரை 'போன்பயர்' நிகழ்ச்சி (மூட்டப் பட்ட தீயை சுற்றி அமர்ந்து அமைதியாக தியானம் செய்தல்) மற்றும் கூட்டு தியானம் ஆகியவை நடைபெறுகிறது. இதில் ஆரோவில் பகுதியில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்கிறார்கள்.

    அதே நாளில் புதுச்சேரி மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் காலை 6 மணிக்கு ஆசிரமம் வாசிகளின் கூட்டு தியானம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து ஆசிரமத்தில் உள்ள அரவிந்தர் மற்றும் அவரது சீடரான அன்னை மீரா பயன்படுத்திய அறை பொது தரிசனத்திற்கு காலை 6 முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

    அரவிந்தர் பொது தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆசிரமம் பின்பக்க வழியாக வரிசையில் வந்து அமைதியான முறையில் அரவிந்தர் அறை மற்றும் சமாதியை தரிசனம் செய்யலாம்.

    • சந்திரசேகர் என்பவர் கடந்த 7-ந்தேதி குடும்பத்துடன் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
    • இன்று விடுதி அறையில் விசம் குடித்து உயிரை மாய்த்துள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தனது மனைவி, மகள், மகன் ஆகியோருடன் கடந்த 7-ம் தேதி அன்று புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பிரபல விடுதியில் தங்கியுள்ளனர்.

    சுற்றுலாவை முடித்துக்கொண்டு இன்று விடுதியில் இருந்து வெளியேற இருந்த நிலையில் அவர்கள் 4 பேரும் அறையிலேயே விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

    இதுகுறித்து பெரியகடை காவல்துறைக்கு விடுதில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரின் சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

    இவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் கடன் பிரச்சனையா? இல்ல வேறு எது பிரச்சனையா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கியது.
    • மின் தடையால் பொதுமக்கள் அவதி.

    புதுச்சேரி:

    புதுவையில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறையவில்லை.

    பகல் பொழுதில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. பிற்பகலில் சாலையில் நடக்க முடியாத நிலைமை உள்ளது. அனல்காற்றும் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக மாலையில் கருமேகங்கள் திரண்டு, மழை பெய்வதற்கான அறிகுறிகளை காட்டுகிறது. ஆனால் மழை பெய்வதில்லை. சில நாட்கள் லேசான சாரல்மழை பெய்தது.

    இந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் கடும் வெயில் சுட்டெரித்தது. மாலை 6 மணியளவில் திடீ ரென வானிலை மாறியது. கருமேகங்கள் சூழ்ந்து மழைபெய்ய தொடங்கியது. நகர பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை சுமார் 2 மணி நேரம் பெய்தது.

    இதனால் நகர பகுதியில் உள்ள சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கியது. எல்லா வீதிகளும் வெள்ளக்காடாக மாறியது.

    இருசக்கர வாகனங்கள் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நகரின் சில முக்கிய சாலைகளில் இருசக்கர வாகன என்ஜின் மூழ்கும் வரை மழைநீர் தேங்கியது.

    தற்காலிக பஸ்நிலையத்திலும் மழைநீர் வெள்ளம்போல தேங்கியது. இதனால் பஸ்களில் மக்கள் ஏறவும், இறங்கவும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். பஸ்நிலையம் சேறும், சகதியுமாக மாறி கிடக்கிறது.

    இரவு 10 மணியளவில் மழை முற்றிலுமாக நின்றது. இதனால் சாலைகளில் தேங்கிய மழைநீர் வெளி யேறியது. பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. சுமார் 3 மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிய டைந்தனர்.

    இன்று காலை 6 மணி முதலே வழக்கம்போல கடுமையான வெயில் அடித்து. இரவில் கன மழையும், பகலில் கடும் வெயில் என நூதன வானிலையால் புதுவை மக்கள் அவதிக்குள்ளாகி யுள்ளனர். * * * புதுவை புஸ்சி வீதியில் தேங்கிய மழை வெள்ளம்.

    • போலீசாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • போலீஸ் ஏட்டு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 4 பேர் கைது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வில்லியனூர் அருகே கோபாலன் கடை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். ரவுடியான இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவரது தம்பி பிரதீப். இவர்கள் இருவரும் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக வில்லியனூர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் போதைப் பொருள் ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் ஏட்டு வசந்த் மற்றும் வில்லியனூர் போலீசார் கோபாலன் கடை பகுதிக்கு சென்றனர். வில்லியனூர் போலீசாரை சற்று தூரத்தில் நிற்க வைத்து விட்டு சதீஷ் வீட்டுக்கு போலீஸ் ஏட்டு வசந்த் சென்றார்.

    அங்கு சதீசை மடக்கி பிடித்து கை விலங்கிட்டு போலீஸ் ஏட்டு வசந்த் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல முயன்றார். அப்போது சதீசின் மனைவி ராஜேஸ்வரி சதீசை அழைத்து செல்ல விடாமல் தடுக்க முயன்றார்.

    மேலும் சதீசின் தம்பி பிரதீப் மற்றும் 17 வயதுடைய மற்றொரு தம்பி, ராஜேஸ்வரி, சதீஷ் ஆகிய 4 பேரும் சேர்ந்து போலீஸ் ஏட்டு வசந்த்தை சரமாரியாக தாக்கினர். அதோடு குக்கரின் மூடியால் வசந்த்தின் முகத்தில் குத்தினர். இதில் நிலை குலைந்து போன வசந்த் அலறல் சத்தம் போட்டார்.

    இந்த சத்தம் கேட்டு சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த வில்லியனூர் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த போலீஸ் ஏட்டு வசந்த்தை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதை தொடர்ந்து போலீஸ் ஏட்டு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ரவுடி சதீஷ், அவரது மனைவி ராஜேஸ்வரி, தம்பி பிரதீப் மற்றும் 17 வயதுடைய மற்றொரு தம்பி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
    • சுமார் 3½ ஆண்டுக்கும் மேலாக புதுவைக்கு தனி கவர்னர் இல்லாமல் பொறுப்பு கவர்னர்கள் நிர்வகித்து வந்தனர்.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவையில் கவர்னர்தான் அரசு என்றும், நிர்வாகி என்றும் அழைக்கப்படுகிறார்.

    கவர்னரின் அனுமதி பெற்றே அரசின் அனைத்து செயல்பாடுகளும் நடக்கிறது. அதேநேரத்தில் 2021-ம் ஆண்டு முதல் புதுவைக்கு தனி கவர்னர் நியமிக்கப்படவில்லை. தனி கவர்னராக இருந்த கிரண்பேடி நீக்கத்துக்கு பிறகு தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவையின் பொறுப்பு கவர்னராக செயல்பட்டார். அவர் சுமார் 3 ஆண்டுகள் பதவி வகித்தார். .

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மீண்டும் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, புதுவை பொறுப்பு கவர்னர் பதவி கூடுதலாக அளிக்கப்பட்டது. இதனால் சுமார் 3½ ஆண்டுக்கும் மேலாக புதுவைக்கு தனி கவர்னர் இல்லாமல் பொறுப்பு கவர்னர்கள் நிர்வகித்து வந்தனர்.

    இந்த நிலையில் புதுவையின் பொறுப்பு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். புதுவையின் புதிய கவர்னராக கேரளா மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைலாஷ்நாதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார். புதிய கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று மதியம் 12 மணியளவில் புதுவைக்கு வந்தார்.

    அவரை முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.

    இன்று கவர்னர் மாளிகையில் புதிய கவர்னர் பதவியேற்பு விழா நடந்தது.இதற்காக கவர்னர் மாளிகை வளாகத்தில் மேடையும், பந்தலும், விருந்தினர் அமர இருக்கையும் அமைக்கப்பட்டிருந்தது.

    சரியாக காலை 11.15 மணிக்கு மாளிகையிலிருந்து கைலாஷ்நாதன் மேடைக்கு வந்தார். இதனையடுத்து பதவியேற்பு விழா, தேசிய கீதத்துடன் தொடங்கியது. தொடர்ந்து புதுவை தலைமை செயலாளர் சரத்சவுகான், புதிய கவர்னராக கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டதற்கான ஜனாதிபதியின் உத்தரவை வாசித்தார்.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், புதிய கவர்னர் கைலாஷ்நாதனுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மீண்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

    புதுவை கவர்னர் கைலாஷ்நாதனுக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்.
    • 100-க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் பறிமுதல்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பிரசத்தி பெற்றது. சனி கிரக பரிகாரஸ்தலம் என்பதால், இக்கோவிலுக்கு புதுச்சேரி தமிழகம் மட்டுமின்றி பல மாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் இங்கு வருகின்றனர்.

    பரிகாரம் செய்ய வரும் பக்தர்கள் நளன் குளத்தில் எண்ணெய் தேய்த்து நீராடி, விநாயகரை வழிப்பட்டு, ஏழை,எளிய மற்றும் யாசகம் கேட்போருக்கு அன்ன தானம் வழங்குவது வழக்கம்.

    பக்தர்களின் பரிகாரத்திற்காக நளன் குளம் மற்றும் கோவில் சுற்றி ஏராளமான இடங்களில் அன்னதானம் செய்வதற்காக சிறிய உணவு பொட்டலங்கள் விற்பனை செய்கின்றனர்.

    பக்தர்கள் உணவு பொட்டலங்களை வாங்கி யாசகம் கேட்போருக்கு அளிப்பர். அந்த பொட்டலங்களை அங்கு கடை வைத்திருக்கும் நபர்கள் குறைந்த விலைக்கு வாங்கி, மீண்டும் பக்தர்களுக்கே விற்பனை செய்கின்றனர்.

    இதனால் நளன் குளத்தை சுற்றியுள்ள வியாபாரிகளுக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் நளன் குளத்தை சுற்றி பரிகார உணவு பொட்டலம் விற்பனை செய்ய கூடாது என கலெக்டர் தடை விதித்து உத்தரவிட்டார்.

    ஆனாலும் தடையை மீறி நளன் குளம் அருகில் தர மற்ற உணவு பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் சென்றது.

    இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையி லான குழுவினர் போலீ சாருடன், நளன் குளம் பகுதியில் ஆய்வு மேற் கொண்டனர்.

    அப்போது, நளன் குளம் சுற்றி தடை செய்யப்பட்ட பகுதியில் தரமற்ற பரிகார உணவு பொட்டலம் விற்பனை செய்த 8 பேரிடம் இருந்து எள், தயிர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.

    அப்போது, பரிகார உணவு பொட்டலம் விற்பனை செய்த பெண், உணவு பாதுகாப்பு அதிகாரியுடன் கடும் வாக்குவாதம் செய்தார். போலீசார் தலையி்ட்டு சமாதானம் செய்தனர்.

    இதுதொடர்பாக 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

    • புதுவை முதலமைச்சருக்கு எதிராக செயல்பட்ட பா.ஜனதா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அடிக்கடி டெல்லி சென்று வந்தனர்.
    • இந்த விவகாரம் புதுவை சட்டமன்றத்தில் இன்று பேசப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை முதலமைச்சருக்கு எதிராக செயல்பட்ட பா.ஜனதா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அடிக்கடி டெல்லி சென்று வந்தனர்.

    அவர்கள் சட்டமன்றத்தில் பெருமளவில் பிரச்சினை எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை. சட்டமன்றம் நடைபெறும் நேரத்தில் பா.ஜனதாவின் எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்ட் மற்றும் பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. சிவசங்கரன் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளனர்.

    இவர்களில் பிரதானமாக செயல்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரம் வெளிநாடு செல்லவில்லை.

    இந்த விவகாரம் புதுவை சட்டமன்றத்தில் இன்று பேசப்பட்டது. தி.மு.க. எம்.எல்.ஏ.செந்தில்குமார், அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு கல்யாண சுந்தரம் தங்கி விட்டார். அவர்கள் சொந்தகாசில் சூனியம் வைத்துள்ளனர் என்றார்.

    அப்போது கல்யாண சுந்தரம், எனக்கு பாஸ்போர்ட் வரவில்லை, அதனால் செல்லவில்லை. சட்டமன்றத்துக்கு உள்ளே வரும்போது முதலமைச்சர் என்னைப் பார்த்து ஏன்பா நீ வெளிநாடு போகலையா? என்று கேட்டார். அவர் எதற்காக கேட்டார் என எனக்கு புரிய வில்லை என்றார்.

    இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ. நாஜிம், அவர் நடிகர் சத்யராஜ் மாதிரி, அவர் கேரக்டரையே புரிஞ்சிக்க முடியாது என குறிப்பிட சபையில் சிரிப்பலை எழுந்தது.

    • கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடக்கிறது.
    • 11 மணிக்கு முன்பாக சட்டசபை கூட்டத்தை முடிக்க திட்டம்.

    புதுச்சேரி:

    தெலுங்கானா கவர்ன ராகவும், புதுச்சேரியில் பொறுப்பு கவர்னராக பதவி வகித்து வந்த தமி ழிசை சவுந்தரராஜன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதால், கவர்னர் பதவியை கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார்.

    அவருக்கு பதிலாக ஜார்க்கண்ட் மாநில கவர்னராக பதவி வகித்து வந்த தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதா கிருஷ்ணன் கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் பதவி வழங்கப்பட்டது.

    தற்போது அவர் மகாராஷ்டிரா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கடந்த 27-ந் தேதி புதுச்சேரியின் புதிய கவர்னராக கே.கைலாசநாதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார்.

    புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள கைலாசநாதன் 7-ந் தேதி (புதன்கிழமை) பதவியேற்கிறார். 6-ந் தேதி மாலை புதுச்சேரி வருகிறார். 7-ந் தேதி காலை 11.15 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடக்கிறது.

    இதில் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கிருஷ்ண குமார் புதிய கவர்னராக நிமியக்கப்பட்டுள்ள கைலாசநாதனுக்கு பதவி பிரமானமும், ரகசிய காப்பு பிரமானமும் செய்து வைக்கிறார்.

    விழாவில் முதல்- அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர திகாரிகள் கலந்து கொண்டு கவர்னருக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கவர்னர் மாளிகை செய்து வருகிறது.

    இந்த பதவி ஏற்பு விழாவில் முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பதற்காக, 7-ந் தேதி காலை 11 மணிக்கு முன்பாக சட்டசபை கூட்டத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×