search icon
என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • காசா எல்லையில் அமைந்துள்ளதால் ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு எளிதாக உள்ளாக்கப்பட்டது
    • பொதுமக்கள் வீடுகளிலேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்

    ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை திடீரென இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் கொன்று குவித்தனர்.

    காசா எல்லையில் இருந்து சில நிமிடங்களில் சென்றடையும் தூரத்தில் இருக்கும் இஸ்ரேல் கிராமம் க்ஃபர் அஜா. சுமார் 700 பேர் கொண்ட இந்த கிராமம், பண்ணைகளால் சூழ்ந்தது. ஒரு பள்ளிக்கூடம், தேவாலயத்துடன் செழிப்பான இடமாக இருந்தது.

    கடந்து சனிக்கிழமை இந்த கிராமத்திற்குள் புகுந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் குண்டுகளால் வீடுகளை தாக்கி, வீட்டில் இருந்த குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனால் இந்த கிராமத்தில் எந்த வீட்டிற்குள் சென்றாலும் இறந்தவர்கள் உடல்களாக காட்சியளிக்கின்றன.

    இஸ்ரேல் உடனடியாக பதிலடி கொடுத்ததில் பல ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். தெருக்களில் இவர்களின் உடல்கள் சிதறிக்கிடக்கின்றன.

    இதனால் ஒரு செழிப்பான கிராமம், இந்த போரினால் பிணங்களாக குவிந்து காட்சியளிக்கின்றன. ஒரு பக்கம் ரத்தம் படிந்து சுவர்கள், வீடுகள். மறுபக்கம் அடையாளம் காணப்படுவதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ள உடல்கள் என காட்சியளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இஸ்ரேலில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது
    • காசா பகுதியில் 900 பேர் உயிரிழந்துள்ளனர்

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது.

    இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய 4-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் 1,008 பேர் உயிரிழந்துள்ளனர். 3,418 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    காசாவில் 900 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 4,250 பேர் காயம் அடைந்துள்ளனர். இஸ்ரேல் மண்ணில் 1500 ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேல் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. வெஸ்ட் பேங்க் (மேற்கு கரை) பகுதியில் 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 130 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    • காசா முனை, மேற்குகரை உள்ளிட்ட பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
    • கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 88 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரின் இருப்பிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக காசா முனை, மேற்குகரை உள்ளிட்ட பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்த போரின் எதிரொலியாக சர்வதேச சந்தையில் தங்கம், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை 5% உயர்ந்துள்ளது. இதன்படி சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 88 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

    • 48 மணிநேரத்தில் 3 லட்சம் வீரர்களை இஸ்ரேல் குவித்து உள்ளது.
    • 140 குழந்தைகள் உள்பட 800-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலில் பலியாகி உள்ளனர்.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் முன்னறிவிப்பு எதுவுமின்றி கடந்த சனிக்கிழமை திடீரென தாக்குதல் தொடுத்தது. ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவியது. இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பதிலடி தரும் வகையில், 48 மணிநேரத்தில் 3 லட்சம் வீரர்களை இஸ்ரேல் குவித்து உள்ளது. இதுவரை இல்லாத வகையில் விரைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    1973-ம் ஆண்டு யோம் கிப்பூர் போரின்போது, 4 லட்சம் படை வீரர்கள் குவிக்கப்பட்டதே அதிக எண்ணிக்கையாக இருந்தது என டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

    இஸ்ரேல் மற்றும் காசா எல்லையில் ஏற்பட்டு வரும் தொடர் சண்டையில் 140 குழந்தைகள் உள்பட 800-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலில் பலியாகி உள்ளனர்.

    இந்நிலையில், தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத குழுவினர் இடையே தொடர்ந்து நடந்து வரும் சண்டையை முன்னிட்டு, இஸ்ரேல் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் வரவுள்ள நாட்களில் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்து உள்ளது.

    இதுதவிர, நேதன்யாகுவுக்கு தெற்கே மற்றும் மத்திய நெகேவ் பகுதிக்கு வடக்கே வர்த்தக நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. வெடிகுண்டு புகலிடங்களுக்கான வசதிகள் உடனடியாக கிடைக்குமென்றால் மட்டுமே வர்த்தக நடவடிக்கைகளை செயல்படுத்தலாம் என ராணுவம் அனுமதித்து உள்ளது.

    இதேபோன்று, இந்த பகுதிகளில், வெளியே 10 பேருக்கு கூடுதலாக ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. உள்ளரங்கங்களில் 50 பேருக்கு கூடுதலாக ஒன்றுகூடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மாறிமாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
    • காசா பகுதியில் வான்வெளி தாக்குதலை தொடர்ந்து வருகிறது இஸ்ரேல் ராணுவம்.

    ஜெருசலேம்:

    காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினைகள் நடந்து வந்த நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. தொடர்ந்து நான்கு நாட்களாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மாறிமாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இதுவரை இருதரப்பிலும் 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா பகுதியில் வான்வெளி தாக்குதலை தொடர்ந்து வருகிறது இஸ்ரேல் ராணுவம்.

    இந்தநிலையில், காசா மருத்துவமனைகளில் 2,000 படுக்கைகளே உள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். மருத்துவ உதவி கிடைக்காமல் ஏராளமானோர் தவித்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள், மருந்துகளுக்கு தட்டுப்பாடு, தாக்குதலில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சேதம் என தகவல் வெளியாகி உள்ளது.

    • ஹமாஸ் தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலி
    • காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது

    ஹமாஸ் நடத்திய எதிர்பாராத தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மண்ணில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தி வருகிறது. அதேபோல் ஹமாஸ் எல்லையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

    3 லட்சம் ராணுவ வீரர்களை தயார் செய்து வைத்துள்ளது. கடல் வழியாக தற்போது தாக்குதலை தொடங்கியுள்ளது. காசாவில் இருந்து மக்களை வெளியேறும்படி வலியுறுத்தியுள்ளது.

    காசாவை கட்டுக்குள் கொண்டுவர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் மண்ணில் 1500 ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், எல்லை பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    அதேவேளையில் லெபனான் நாட்டின் எல்லையிலும் ராணுவத்தை குவித்து வருகிறது. இஸ்ரேல் நாட்டின் தெற்கு பகுதியை முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    நேற்று இரவில் இருந்து எல்லைத்தாண்டி ஹமாஸ் பயங்கரவாதிகள் வரவில்லை என்று ராணுவ செய்தி தொடர்பாளர் ரிச்சார்ட் தெரிவித்துள்ளார்.

    • இஸ்ரேல் தரப்பில் 700 பேர் உயிரிழந்த நிலையில் 2,300 பேர் காயம்
    • காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது

    ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. 3 லட்சம் வீரர்களை திரட்டியுள்ளது. 1973-ம் ஆண்டு நடைபெற்ற யோம் கிப்பர் போருக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் ராணுவ வீரர்களை முதல்முறையாக இஸ்ரேல் திரட்டியுள்ளது.

    இருதரப்பிலும் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பலரை ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளை பிடித்து வைத்துள்ளனர். இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

    இந்த நிலையில், இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியதாவது:-

    இஸ்ரேல் போரில் உள்ளது. நாங்கள் இந்த போரை விரும்பவில்லை. இது மிகவும் கொடூரமான, காட்டுமிராண்டித்தனம் வழியாக எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் போரை தொடங்காத போதிலும், இஸ்ரேல் போரை முடிக்கும்'' என்றார்.

    ஏற்கனவே, இதற்கு ஹமாஸ் விலை கொடுப்பார்கள். நீண்ட நாட்களுக்கு இது நினைவில் இருக்கும் வகையில் இருக்கும் என எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹமாஸ் பயங்கரவாதிகள் பெண்கள், குழந்தைகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்
    • இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீனர்கள் பலர் அடைக்கப்பட்டுள்ளனர்

    இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை திடீரென ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தங்களது பார்வையில் தென்பட்டவர்களை சுட்டுத்தள்ளினர். இதனால் இஸ்ரேலில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதேவேளையில் பெண்கள், சிறுமிகள், முதியர்வகள் உள்ளிட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர்.

    பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்கள் நிலை என்னவாகும் என்பதுதான் உலக நாடுகளின் கவலையாக உள்ளது. தற்போதைக்கு பேச்சுவார்த்தை இல்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீனர்கள் உள்ளனர். இஸ்ரேல் பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும். அதேவேளையில் ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை விடுவிக்க வேண்டும். இதற்கு கத்தார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    கத்தார் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து நடத்தி வரும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஹமாஸ்- இஸ்ரேல் பக்கத்தில் இருந்து இதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    இருந்தபோதிலும், தோகா மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அதிகாரிகளுடன் கத்தார் தொடர்பில் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

    இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு இந்த பேச்சுவார்த்தை முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், காசாவில் தாக்குதலை முடிக்கும் வரை இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்கு வருமா? என்பது சந்தேகம்தான்.

    • போரில் இரு தரப்பிலும் 1,200 பேர் பலியாகி உள்ளனர்.
    • நாங்கள் இன்னும் எங்களுடைய எல்லை பகுதியை பாதுகாக்க முயற்சித்து வருகிறோம்.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி, அதிரடியாக தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலில் நடந்த இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

    நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் உள்ளனர். இஸ்ரேலும், படைகளை குவித்து பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த போரில் இரு தரப்பிலும் 1,200 பேர் பலியாகி உள்ளனர். பாலஸ்தீனிய குழுவினரை தோற்கடிப்போம் என இஸ்ரேல் அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக காசா முனை பகுதியருகே ஆயிரக்கணக்கான படை வீரர்களை அனுப்பி வைத்துள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லையர் ஹையாத் கூறும்போது, இந்த முறை யாரிடமும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

    நாங்கள் போரில் இருக்கிறோம். அதனால், பேச்சுவார்த்தைக்கோ அல்லது மத்தியஸ்தம் செய்வதற்கோ உரிய தருணம் இது இல்லை. நாங்கள் இன்னும் எங்களுடைய எல்லை பகுதியை பாதுகாக்க முயற்சித்து வருகிறோம்.

    இஸ்ரேலிய எல்லை பகுதியில் ஹமாஸ் பயங்கரவாதிகள் யாரேனும் இருக்கிறார்களா என கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த பகுதியில் காயத்துடன் இருப்பவர்களை கண்டறியும் பணியிலும் ஈடுபட்டு உள்ளோம் என கூறியுள்ளார்.

    காசாவை உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் எடுத்து கொள்ளும் சாத்தியம் பற்றிய பரிசீலனை எதுவும் உண்டா? என கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த ஹையத், நான் பல விவரங்களுக்குள் செல்லமாட்டேன். இஸ்ரேல் அரசு மற்றும் பாதுகாப்பு படையானது, பாதுகாப்பை மீண்டும் கொண்டு வர என்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்யும்.

    இஸ்ரேல் குடிமக்களை தாக்கும் இந்த திறனை ஹமாஸ் பயங்கரவாதிகள் கொண்டிருப்பதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

    • நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் உள்ளனர்.
    • இஸ்ரேலுக்கு ஆதரவாக அதன் கூட்டணி நாடுகள் முன்வந்துள்ளன.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ஹமாஸ் பயங்கரவாதிகள் அதிரடியாக ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி, தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலில் நடந்த இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

    நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் உள்ளனர். இஸ்ரேலும், படைகளை குவித்து பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த போரில் இரு தரப்பிலும் 1,200 பேர் பலியாகி உள்ளனர். பாலஸ்தீனிய குழுவினரை தோற்கடிப்போம் என இஸ்ரேல் அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக காசா முனை பகுதியருகே ஆயிரக்கணக்கான படை வீரர்களை அனுப்பி வைத்துள்ளது.

    இந்த நிலையில் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நப்தலி பென்னட் போர் முனையில் வீரர்களுடன் ஒன்றாக கைகுலுக்கி கொண்ட காட்சிகள் வெளிவந்துள்ளன. பகுதிநேர பணியாக அவர் போரில் பங்கேற்க சென்றுள்ளார்.

    இஸ்ரேலுக்கு ஆதரவாக அதன் கூட்டணி நாடுகள் முன்வந்துள்ளன. அமெரிக்கா தன்னுடைய விமானந்தாங்கி கப்பலை அனுப்பி வைத்துள்ளது. போர் கப்பல்கள் அடங்கிய வரிசையானது கிழக்கு மத்திய தரை கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், காசா முனை பகுதியில் இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்த கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 700க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் அமைப்பின் தாக்குதலில் உயிரிழந்தனர்
    • மிருகங்களோடு சண்டையிடுகிறோம்; அதற்கு ஏற்ற வழிமுறைகளில் போரிடுகிறோம்

    தெற்கு இஸ்ரேல் பகுதியில் கடந்த சனிக்கிழமை காலை பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு திடீர் தாக்குதல் நடத்தியது.

    வான்வழியாக 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியும், தரை வழியாகவும், நீர் வழியாகவும் திட்டமிட்டு ஹமாஸ் அமைப்பினர் நடத்திய இத்தாக்குதலில் இஸ்ரேலில் பொதுமக்கள் பலரை உள்ளடக்கிய 700க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

    இத்தாக்குதல் நடவடிக்கையை சற்றும் எதிர்பாராத இஸ்ரேல், பதிலடியாக ஹமாஸ் அமைப்பின் மீது போர் தொடுத்திருக்கிறது. ஹமாஸ் ராணுவத்தை முற்றிலும் அழிக்க போவதாக தன் நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ள இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் முக்கிய பகுதிகளில் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

    காசா முனை (Gaza Strip) எனப்படும் முக்கிய பிரதேசத்தை முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டில் இஸ்ரேல் கொண்டு வந்து விட்டது.

    "அப்பகுதியில் அனைத்தும் எங்கள் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டது. அனைத்தும் மூடப்பட்டு விட்டது. மின்சாரம், உணவு, குடிநீர், எரிபொருள் உள்ளிட்ட எதுவும் அங்கு கிடைக்காமல் செய்து விட்டோம். நாங்கள் மனிதர்களோடு போரிடவில்லை; மிருகங்களோடு போரிடுகிறோம். அதற்கு ஏற்றவாறு நாங்கள் செயல்படுகிறோம்," என இது குறித்து இஸ்ரேல் ராணுவ அமைச்சர் யோவ் காலன்ட் (Yoav Gallant) தெரிவித்தார்.

    • ஹமாஸ் பயங்கரவாதிகள் மோட்டார் பொருத்தப்பட்ட பாரா-கேடர்களை பயன்படுத்தும் என்று இஸ்ரேலியப் படைகள் எதிர்பார்க்கவில்லை.
    • போர் விமான கப்பலில் 5 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இதில் பலவகை அரிய விமானங்கள் உள்ளன.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்கி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஏராளமான இஸ்ரேலியர்கள் உயிரிழந்து உள்ளனர்.

    சமீபத்திய மின்னல் வேக தாக்குதலுக்கு ஹமாஸ் பயங்கரவாதிகள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பே ரகசியமாக திட்டமிடப்பட்டது தெரியவந்துள்ளது.

    2014-ல் இது குறித்து உளவுத்துறை எச்சரித்தும் இஸ்ரேல் அலட்சியப்படுத்தியது. அதன் விளைவுகளை தற்போது இஸ்ரேல் கண்டு வருகிறது. ஹமாஸ் என்ற தீவிரவாத இயக்கம் பயங்கரவாதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.

    அவர்கள் வெளிநாடுகளில் இருந்து, ஏவுகணைகளை தயாரித்தல், ஏவுதல், மனித வெடிகுண்டு உள்ளிட்ட பல்வேறு வகையான நவீன தொழில்நுட்பத்தை கையாள பயிற்சி பெற்றுள்ளனர்.

    சமீபத்திய "ஆபரேஷன் ஆல்-அப்பா புயல்" போன்ற அம்சங்களைக் கொண்டிருக்க ஹமாஸ் தெளிவான திட்டங்களை வகுத்துள்ளது.

    குறிப்பாக, ஹமாஸ் பயங்கரவாதிகள் மோட்டார் பொருத்தப்பட்ட பாரா-கேடர்களை பயன்படுத்தும் என்று இஸ்ரேலியப் படைகள் எதிர்பார்க்கவில்லை. காற்றில் பறந்து வந்து ஏவுகணைகளை வீசுகின்றனர்.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலிய படை வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் பலர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் பலர் தற்கொலைப்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.

    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸ் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டது. அவர்கள் நகரங்களில் இறங்கி, கண்ணில் படும் பொதுமக்களையும், படை வீரர்களையும் பணயக்கைதிகளாக பிடித்தனர்.

    இப்படி ஊடுருவிய நூற்றுக்கணக்கான மோட்டார் பொருத்தப்பட்ட கிளைடர்கள் பயங்கரவாதிகளிடம் இருப்பதாக நம்பப்படுகிறது.

    கடலில் இருந்து சிறிய படகுகளில் காசா வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். மறுபுறம், பயங்கரவாதிகளும் பிக்-அப் டிரக்குகளில் கனரக எந்திர துப்பாக்கிகளுடன் இஸ்ரேலுக்குள் விரைந்தனர்.

    இஸ்ரேலுக்கு ஆதரவாக கிழக்கு மத்திய தரைக்கடலுக்கு விமானம் தாங்கி கப்பலை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில்:-

    அமெரிக்காவின் போர்டு கேரியர் கடற்படை குழு இஸ்ரேல் செல்ல உத்தரவிடப்பட்டு உள்ளது.

    அந்த போர் விமான கப்பலில் 5 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இதில் பலவகை அரிய விமானங்கள் உள்ளன.

    இந்த கப்பலில் உள்ள போர் விமானங்கள் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் வாய்ந்தவை. அதே போல் பயங்கரவாதிகளுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்குபவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கும்.

    வர்ஜீனியாவை தளமாகக்கொண்ட விமானம் தாங்கி கப்பல் தற்போது மத்திய தரைக்கடலில் இருந்து இஸ்ரேல் நோக்கி விரைந்துள்ளது.

    இதில் யுஎஸ்எஸ் நார்மண்டி, யுஎஸ்எஸ் தாமஸ் ஹட்னர், யுஎஸ்எஸ் ராம்பேஜ், யுஎஸ்எஸ் கார்னி, யுஎஸ்எஸ் ரூஸ்வெல்ட் மற்றும் எப்-35, ஏபி-15, எப்-16 மற்றும் ஏ-10 போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அமெரிக்காவின் இந்த அதிநவீன போர்க்கப்பல் எதிரிகள் உள்ள பகுதிகளை நாசமாக்கும் சக்தி கொண்டது. பயங்கரவாதிகள் உள்ள இடங்களை குறி வைத்து துல்லியமாக தாக்கக்கூடிய ஆயுதங்கள் இதில் உள்ளன. மேலும் அதிநவீன கண்காணிப்பு கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் எதிரிகளை அமெரிக்க கப்பல் படை துல்லியமாக கணித்து அதற்கேற்றார் போல் தாக்குதல்களை நடத்தும். மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள இந்த கப்பல் இஸ்ரேல் சென்றதும் பயங்கரவாதிகளுக்கு பேரழிவு ஏற்படும் என கூறப்படுகிறது.

    ×