search icon
என் மலர்tooltip icon

    இத்தாலி

    • உக்ரைனில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது.
    • ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உக்ரைன் மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

    ரோம் :

    உக்ரைனில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பையும் சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் வருடாந்திர கிறிஸ்துமஸ் யாத்திரைக்காக இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உக்ரைன் மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

    அதை தொடர்ந்து, உரையாற்றிய போப் ஆண்டவர் உக்ரைன் மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பேசும்போது திடீரென கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அவர் தன்னை தானே தேற்றிக்கொண்டு தொடர்ந்து பேசினார்.

    அப்போது அவர், "உக்ரைன் மக்கள் அமைதிக்காக நாங்கள் நீண்டகாலமாக இறைவனிடம் கேட்டோம். தற்போது, அந்தத் தியாக பூமியின் குழந்தைகள், முதியவர்கள், தாய்மார்கள், அப்பாக்கள் மற்றும் இளைஞர்கள் என மிகவும் துன்பப்படுகிறவர்களின் வேண்டுகோளை நான் உங்களுக்கு முன்வைக்க விரும்புகிறேன்" என்றார்.

    இதனிடையே உக்ரைன் போர் குறித்து பேசும்போது போப் ஆண்டவர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

    • இச்சியாதீவில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
    • மாயமானவர்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    இத்தாலியில் நடந்த நிலச்சரிவில் சிக்கி 7 பேர் இறந்தனர். அங்குள்ள இச்சியாதீவு சிறந்த சுற்றுலா தளமாக திகழ்கிறது. முற்றிலும் மலைபாங்கான இந்த இடத்துக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அதே போல விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் திரண்டனர்.

    இந்த தீவில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பிறந்த குழந்தை, 2 சிறுமிகள் உள்பட 7 பேர் இறந்தனர். 5 பேரை காணவில்லை, அங்கு தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. மாயமானவர்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    • இத்தாலியில் பெய்து வரும் கனமழையால் நேற்று அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது.
    • இந்த நிலச்சரிவில் சிக்கி குழந்தை உள்பட 8 பேர் பலியாகினர்.

    ரோம்:

    இத்தாலி நாட்டின் இஷியா தீவில் உள்ள காசாமிச்சியோலா நகரில் கடந்த 2 தினங்களாக கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாது பெய்து வரும் பேய் மழையால் நேற்று அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் உள்பட பல கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. பெண்கள், சிறுவர்கள் உள்பட பலர் உயிரோடு புதைந்தனர்.

    இதையடுத்து அங்கு உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 13 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக் குழு முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    • ஏடிபி பைனல்ஸ் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச், காஸ்பர் ரூட் மோதினர்.
    • ஜோகோவிச் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றி அசத்தினார்.

    துரின்:

    உலக தரவரிசையில் முன்னணியில் இருக்கும் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. பைனல்ஸ் எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் கடந்த 13-ம் தேதி தொடங்கியது.

    குரூப் சுற்று முடிவில் நோவக் ஜோகோவிச், டெய்லர் பிரிட்ஸ், காஸ்பர் ரூட் மற்றும் ஆண்ட்ரே ரூப்லெவ் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். முதல் அரையிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், நேற்று நடந்த இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நார்வேயின் காஸ்பர் ரூட் ஆகியோர் மோதினர்.

    தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ஜோகோவிச் முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட்டை 6-3 என எளிதில் வென்றார்.

    இதன்மூலம் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூட்டை வீழ்த்திய ஜோகோவிச் கோப்பையை கைப்பற்றி அசத்தினார்.

    • ஆபாச படங்கள் பார்ப்பது பலருக்கும் இருக்கும் ஒரு தீமையான பழக்கம்.
    • ஆபாச படங்கள் பார்ப்பது தூய்மையான இதயத்தை பலவீனப்படுத்துகிறது.

    வாடிகன் :

    வாடிகன் நகரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்து பேசியதாவது:-

    ஆபாச படங்கள் பார்ப்பது பலருக்கும் இருக்கும் ஒரு தீமையான பழக்கம். பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் கூட ஆபாச படங்களை பார்க்கிறார்கள். ஆபாச படங்கள் பார்ப்பது தூய்மையான இதயத்தை பலவீனப்படுத்துகிறது.

    டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களை தேவைக்கு பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் அதில் அதிக நேரத்தை வீணடிக்க வேண்டாம். சிற்றின்ப ஆபாசத்திற்காக அவற்றை பயன்படுத்தக்கூடாது. உங்களின் செல்போனில் இருந்து ஆபாச படங்களை நீக்குங்கள். எனவே உங்கள் கையில் சலனம் இருக்காது.

    இவ்வாறு போப் ஆண்டவர் பிரான்சிஸ் பேசினார்.

    • இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி கடந்த வாரம் பதவியேற்றார்.
    • ரஷிய போரில் அமைதிக்கான ஒரே வழி உக்ரைனுக்கு உதவுவதுதான் என மெலோனி தெரிவித்தார்.

    ரோம்:

    இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

    ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு, ராணுவ ரீதியாக தற்காத்துக் கொள்ள உக்ரைனுக்கு உதவ வேண்டும் என்று இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

    மெலோனியின் கூட்டணி கட்சிகள் ரஷிய அதிபர் புதினுடனான நட்பு காரணமாக போர் விவகாரத்தில் தெளிவற்று இருந்த போதிலும், பிரதமர் மெலோனி பலமுறை உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி கடந்த வாரம் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி இன்று பதவியேற்றார்.
    • அப்போது பேசிய அவர், ஜனநாயகத்திற்கு விசுவாசமாக இருப்பேன் என்றார்.

    ரோம்:

    இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 2021-ம் ஆண்டு மரியோ டிராகி பிரதமரானார். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கூட்டணி கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக் கொண்டதால் பிரதமர் மரியோ டிராகி கடந்த ஜூலை மாதம் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து, இத்தாலி பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இந்த தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜார்ஜியா மெலோனி (45), வெற்றி பெற்றார்.

    ஜார்ஜியா மெலோனி ஒரு தீவிர தேசியவாதியாகவும், ஐரோப்பிய எதிர்ப்பு ஒற்றுமை தலைவராகவும் கருதப்படுகிறார். மெலோனி இத்தாலியின் பிரதமரானால், அவர் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

    உக்ரைன் போரில் உக்ரைனுக்கு இத்தாலி வலுவாக ஆதரவளித்து வருகிறது. அடுத்த அரசாங்கத்தின் கீழ் அது அப்படியே இருக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது ​​மெலோனி உக்ரைனுக்கு தனது ராணுவ உதவி கொள்கையை தொடர உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி இன்று பதவியேற்றார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியில் அமையும் தீவிர வலதுசாரி அரசாங்கம் இதுவாகும்.

    அப்போது பேசிய அவர், ஜனநாயகத்திற்கு விசுவாசமாக இருப்பேன் என்று சத்தியம் செய்கிறேன் என உறுதியளித்தார்.

    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 200 நாட்களைக் கடந்துள்ளது.
    • போரில் கைப்பற்றிய உக்ரைனின் 4 நகரங்களை ரஷியா தங்கள் நாட்டுடன் இணைத்தது.

    ரோம்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 200 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.

    போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷியா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இந்தப் பகுதி ஒட்டுமொத்த உக்ரைனின் 15 சதவீதம் ஆகும். சர்வதேச நாடுகளால் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என அறிவிக்கப்பட்டுள்ள இந்த இணைப்பை தொடர்ந்து உக்ரைன் - ரஷியா இடையேயான மோதல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், வன்முறை சுழலை நிறுத்தும்படி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கிறிஸ்தவ மதத்தின் கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இத்தாலியின் ரோம் நகரில் புனித பீட்டர் சதுர்க்கத்தில் மத வழிபாட்டிற்காக கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய போப் பிரான்சிஸ், உக்ரைனில் நிகழும் வன்முறை மற்றும் மரண சுழலை நிறுத்தும்படி நிறுத்தும்படி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கேட்டுக்கொள்கிறேன். அணு ஆயுத யுத்த ஆபத்து அபத்தமானது. தீவிர அமைதி ஒப்பந்தத்திற்கு திறந்த நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி முன் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • தேர்தல் முடிவுகள் இன்று (திங்கட்கிழமை) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஜார்ஜியா மெலோனி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    ரோம் :

    இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமராக நியமிக்கப்பட்ட மரியோ டிராகி, நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவாக கடந்த ஜூலை மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து அங்கு பொதுத்தேர்தல் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

    அதன்படி 600 உறுப்பினர்களை கொண்ட இத்தாலி நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த சுமார் 60 ஆயிரம் வாக்கு சாவடிகளில் மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர். உள்ளூர் நேரப்படி இரவு 11 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

    அதை தொடர்ந்து உடனடியாக வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின. தேர்தல் முடிவுகள் இன்று (திங்கட்கிழமை) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான 'பிரதர்ஸ் ஆப் இத்தாலி' கட்சியின் சார்பில் போட்டியிடும் பெண் அரசியல்வாதியான ஜார்ஜியா மெலோனி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அப்படி அவர் வெற்றி பெறும் பட்சத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக பதவியேற்பார். இதன் மூலம் இத்தாலியின் முதல் பெண் பிரதமர் என்கிற பெருமையை அவர் பெறுவார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3 பெரு வியாதிகள் ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு ஏற்பட்டிருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது.
    • அவர் வெளிநாடுகளுக்கு சென்றபோது அங்கு ஓரின சேர்க்கை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள்.

    உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இதில், இத்தாலியை சேர்ந்த 36 வயது நபர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றார்.

    5 நாள் பயணத்தை முடித்து கொண்டு அவர் இத்தாலி திரும்பினார். வீட்டுக்கு சென்ற அவருக்கு காய்ச்சலும், உடல் சோர்வும் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

    இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. உடனே அவரை டாக்டர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர். கொரோனா சிகிச்சையில் இருந்தபோது அந்த நபருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டு கொப்புளங்கள் உருவானது. ஜூலை மாத தொடக்கத்தில் இந்த கொப்புளங்கள் உடைந்து அவருக்கு வேதனையை அளித்தது.

    எனவே டாக்டர்கள் அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருக்குமோ என்று சந்தேகப்பட்டனர். அதற்கான சோதனையும் அவருக்கு நடத்தப்பட்டது. இதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதியானது.

    கொரோனா, குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அந்த வாலிபர் ஏற்கனவே எச்.ஐ.வி. நோயில் இருந்து மீண்டவர் என்ற தகவல் டாக்டர்களுக்கு தெரியவந்தது.

    அவர் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பதால் அவருக்கு மீண்டும் ஒரு முறை எச்.ஐ.வி. பரிசோதனையையும் மேற்கொள்ள டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி எச்.ஐ.வி. பரிசோதனை செய்தபோது அதுவும் அந்த நபருக்கு இருப்பது தெரியவந்தது.

    ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கு அம்மை மற்றும் எச்.ஐ.வி. பாதிப்புகள் ஒரே நபருக்கு ஏற்பட்டிருப்பது அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுபோன்று 3 பெரு வியாதிகள் ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு ஏற்பட்டிருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த நபருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 3 நோய்களால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஓரின சேர்க்கை பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

    அவர் வெளிநாடுகளுக்கு சென்றபோது அங்கு ஓரின சேர்க்கை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் தொடர்ந்து அந்த நபரை கண்காணித்து வருகிறார்கள். தற்போது அவர் கொரோனாவில் இருந்தும், குரங்கு அம்மை பாதிப்பில் இருந்தும் மீண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • இத்தாலியில் பொருளாதார நிலை மோசடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • கூட்டணி கட்சிகளால் ஏற்பட்ட நெருக்கடியால் இத்தாலி பிரதமர் ராஜினாமா செய்தார்.

    ம்:

    இத்தாலியில் மரியோ டிராகி பிரதமராக பதவி வகித்து வருகிறார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த ஆண்டு அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவால், மரியோ டிராகி பிரதமராக நியமனம் செய்யப்பட்டார்.

    இத்தாலியில் பொருளாதார நிலை தற்போது மிகவும் மோசடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கூட்டணி கட்சிகளால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

    இதையடுத்து, பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டது.

    இந்நிலையில், மரியோ டிராகி திடீரென பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தை அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    ஆனால், இத்தாலி பிரதமர் மரியோ டிராகியின் ராஜினாமா கடிதத்தை அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லா நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ள சில தினங்களில் இத்தாலி பிரதம்ர் மரியோ டிராகி ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • வாடிகனின் நிர்வாகத் துறைகளில் பெண்களுக்கு முக்கிய பங்கு அளிக்கப்பட்டு வருகிறது.
    • வாடிகனில் கடந்த மாதம் அமலுக்கு வந்த புதிய அரசியல் சாசனம் குறித்து விளக்கம் அளித்தார்.

    வாடிகன் :

    போப் பிரான்சிஸ், ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், வாடிகன் நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகளை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

    பிஷப்களை தேர்வு செய்யும் குழுவில் தற்போது ஆண்கள் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இக்குழுவில் பெண்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

    விரைவில் இக்குழுவில் 2 பெண்கள் இடம் பெறுவார்கள் என்றும் இதன்மூலம் இந்த பாதையில் வழிகள் கொஞ்சம் திறக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும், இதற்கான முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    வாடிகனின் நிர்வாகத் துறைகளில் பெண்களுக்கு முக்கிய பங்கு அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த போப் பிரான்சிஸ், வாடிகனின் நீதி மற்றும் அமைதிக்கான துறையின் 2ம் நிலை தலைவராக சகோதரி அலீஸ்ஸாந்தரா ஸ்மெரில்லி கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். வாடிகனில் கடந்த மாதம் அமலுக்கு வந்த புதிய அரசியல் சாசனம் குறித்து விளக்கம் அளித்தார்.

    ×