search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய நம்பிக்கையுடன் சட்டசபைக்கு செல்கிறோம் - மு.க.ஸ்டாலின்
    X

    புதிய நம்பிக்கையுடன் சட்டசபைக்கு செல்கிறோம் - மு.க.ஸ்டாலின்

    கூட்டணி தலைவர்களின் ஆலோசனைப்படி புதிய நம்பிக்கையுடன் சட்டசபைக்கு செல்கிறோம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #MKStalin #TNAssembly

    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    “நாங்கள் எதிர்க்கட்சியினர்தானே தவிர, எதிரிக் கட்சியினர் அல்ல. இந்தப் பேரவையிலே இருக்கின்ற யாருமே எங்களுக்குத் தனிப்பட்ட முறையிலே எதிரிகளும் அல்லர். எல்லோருமே தமிழக மக்களுக்கு நண்பர்களாகச் செயல்படவேண்டிய பொறுப்பிலே இருக்கிறோம்.

    அவர்களுக்கு நம்பிக்கையுள்ளவர்களாகக் கடமையாற்ற வேண்டியவர்களாகிறோம். அதற்குரிய வாய்ப்பு இந்த அவையிலே கிடைக்கும் என்று நம்புகிறேன், எதிர்பார்க்கிறேன்” என்று இன்றைய தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் பொறுப்பேற்ற நேரத்தில் உரையாற்றி, கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் விதத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், தொடக்கத்திலிருந்து மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளை எடுத்து வைத்து ஜனநாயக ரீதியாகவும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டும் ஆக்கபூர்வமாகவும் ஆர்வத்துடனும் சட்ட மன்றத்தில் பணியாற்றி வந்ததை அனைவரும் அறிவர்.

    அதன் அடிப்படையில்தான் ஜல்லிக்கட்டுப் பிரச்சனை, நீட் தேர்வுப் பிரச்சனை, காவிரிப் பிரச்சனை ஆகிய அனைத்துப் பிரச்சனைகளிலும் மக்களின் பொதுநலன்கருதி ஆளுங்கட்சியுடன் மனப்பூர்வமாக ஒத்துழைத்து தீர்மானங்களை நிறைவேற்றவும், சட்டங்களை நிறைவேற்றவும் துணை நின்றது தி.மு.க.


    ஆனாலும் அ.தி.மு.க.வைப் பொறுத்த மட்டில், பெரும்பான்மை இல்லாமல் சட்டநெறிமுறைகளுக்கு எதிராக,குறுக்கு வழியில், மத்திய பாஜக அரசின் உள்நோக்கத்துடன் கூடிய தயவில், பதவியில் நீடிப்ப தோடு மட்டுமின்றி, சட்ட மன்ற ஜனநாயகத்தையும் மரபுகளையும் நசுக்கிப் பொசுக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

    13 பேர் உயிரைப் பறித்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை “துப்பாக்கிச் சூடு “பற்றியே அவையில் பதிவு செய்யாமல், ஒரு முதல்-அமைச்சர் குறிப்பாக விபரங்களைச்சொல்லிப் பதிலளிக்காமல், பொத்தாம் பொதுவாகப் பேசி அவையின் உரிமையை மீறினார்.

    ஆக்கபூர்வமாகவும் வெளிப்படைத் தன்மையோடும் முறையான விவாதங்களுடன் நடைபெறவேண்டிய சட்டமன்றத்தில், மக்கள் பிரச்சினைகளை மையப்படுத்தி வாதிடவும் தொகுதி மக்களின் கோரிக்கைகளை எடுத்து வைக்கவும் அனைத்துக் கதவுகளும் அறவே மூடப்பட்டு விட்டன.

    இனியும் சட்டமன்றத்தில் அமர்ந்து பொய்புரட்டுகளையும் வறட்டு விளக்கங்களையும் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டு அமைதிகாப்பது, வாக்களித்த மக்களை வஞ்சிப்பதாக அமையும் என்றே சட்டமன்ற நடவடிக்கைகளை இந்தத் தொடர் முழுவதும் புறக்கணிப்பதாக தி.மு.க. கொறடா அறிவித்தார்.

    கடந்த 1.6.2018 அன்று திருவாரூரில் நடைபெற்ற தலைவர் கலைஞரின் 95-வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மரியாதைக்குரிய தோழமைக் கட்சித் தலைவர்கள் அனைவரும் “நீங்கள் சட்டமன்றத்திற்குச் செல்லுங்கள்;. எங்களுடைய குரலை பிரதிநிதித்துவப் படுத்துங்கள்; அப்போதுதான் எங்களுக்குச் சரியான பாதுகாப்பு” என்று வலியுறுத்தினார்கள்.

    அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் நேற்று (2.6.2018) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் விரிவாக விவாதித்து, சட்ட மன்றத்தின் ஜனநாயகத்தை மீட்டெடுத்து உருவாக்கிட, மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்பது என்று முடிவு எடுத்திருக்கிறோம்.

    பேரவைத் தலைவரை, பதவியில் அமர்த்திய போது இருந்த அந்த நம்பிக்கை இடையில் தளர்ந்து விட்டாலும், என்றைக்கும் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்துச் செயலாக்கத்தில் ஈடுபாடு காட்டும் மாபெரும் இயக்கம் தி.மு.க. என்ற அடிப்படையிலும், புதிய நம்பிக்கையுடன் மீண்டும் சட்டமன்றத்திற்குச் செல்கிறோம்.

    தமிழக நலனுக்காக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆக்க பூர்வமான விவாதங்களில் மீண்டும் ஈடுபடுவோம்.

    தி.மு.க. எடுக்கும் எந்த முடிவும், நாடுஇனம்மொழி ஆகியவற்றை மையப்படுத்தியும், அவற்றின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தியும் அமைந்து வருவதை, தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #TNAssembly

    Next Story
    ×