search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கமல்ஹாசனை வளைத்து போட ரூ.100 கோடி பேரம் பேசிய அரசியல் கட்சி
    X

    கமல்ஹாசனை வளைத்து போட ரூ.100 கோடி பேரம் பேசிய அரசியல் கட்சி

    நடிகர் கமல்ஹாசன் தனக்கு ஒரு கட்சி ரூ.100 கோடி தர பேரம் பேசியதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் தனக்கு ஒரு கட்சி ரூ.100 கோடி தர பேரம் பேசியதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறி இருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யம் தொடங்கி 100 நாட்கள் கடந்து விட்டது. நாங்கள் உண்மையான சாதனைகளை, இலக்குகளை நிகழ்த்தவே விரும்புகிறோம். கிராமங்களை மேம்படுத்த முதல் கட்டமாக 8 கிராமங்களை தத்து எடுத்துள்ளோம்.

    அதிகத்தூர் கிராமத்தை நான் தேர்வு செய்ததாக சொல்கிறார்கள். அதை நான் ஏற்க மாட்டேன். அந்த கிராமத்தில் 1996-ம் ஆண்டு முதல் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் சுமதி என்னை சந்தித்து, அந்த கிராமம் சந்தித்து வரும் பிரச்சனைகள் பற்றி கூறினார்.

    கடும் ஊழல் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் கிராமத்தை மேம்படுத்த அவர் போராடுவதை தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு உதவும் வகையில் அதிகத்தூர் கிராமத்தை நாங்கள் தத்து எடுத்தோம்.

    கிராம பஞ்சாயத்துக்களை நாம் நடத்தி வருகிறோம். அந்த பஞ்சாயத்து முறையை 25 ஆண்டுகளுக்கு முன்பு நாம் திறம்பட செயல்படுத்தி இருந்தால், இன்று அவை சட்டசபையை விட வலிமையானதாக இருந்திருக்கும். மக்கள் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை உணர வேண்டும்.

    ஊரில் நீங்கள் தபால் நிலையத்தை தேடிப் பாருங்கள், கண்டுபிடிக்க முடியாது. ஆனால் டாஸ்மாக் மதுக்கடை எங்கு இருக்கிறது என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

    நம்மிடம் நிறைய டாஸ்மாக் மதுகடைகள் உள்ளன. கேட்டால் அரசுக்கு வருவாய் வருவதாக சொல்கிறார்கள். அப்படியானால் அடுத்து போதை பொருட்களை விற்பனை செய்வார்களா?

    டாஸ்மாக் மது கடைகளை முழுமையாக மூடி விடுவதால் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு விட முடியாது. ஒவ்வொரு கிராமத்திலும் நாம் மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும். தலைமை செயலகத்தில் உட்கார்ந்து கொண்டு பேச விரும்பவில்லை. நாம் மாற்றம் கொண்டு வர வேண்டும்.


    ரஜினியுடன் நான் கூட்டணி சேர்வேனா என்று அடிக்கடி கேட்கிறார்கள். அதுபற்றி இப்போதே சொல்ல முடியாது.

    தமிழ்நாட்டில் நிறைய சமூக ஆர்வலர்கள் உள்ளனர். அவர்கள் அரசியல் சார்பின்றி இருக்கிறார்கள். மக்களுக்கு உதவ அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இவர்களிடம் இருந்தும், தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்தும் நான் நிறைய வி‌ஷயங்களை கற்று வருகிறேன்.

    எல்லா கட்சிகளுடனும் எனக்கு கொள்கை ரீதியாக மாறுபடுவது உண்டு. ஆனால் தமிழக அரசியலில் நான் முக்கியமாக நினைப்பது ஊழலைத்தான். இந்த ஊழலை முழுமையாக வேரறுக்க வேண்டும்.

    ஜெயிலில் இருப்பவர் சுதந்திரமாக வெளியில் வந்து ஷாப்பிங் செல்கிறார். 2 நாட்களுக்கு தலைப்பு செய்தியாக அதைப் படிக்கிறோம். பிறகு மறந்து விடுகிறோம்.

    எனக்கு கூட ஒரு கட்சி லஞ்சம் தர பேரம் பேசியது. அவர்கள் கட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக சொன்னார்கள். ஆனால் நான் அந்த கட்சியில் சேர மறுத்து விட்டேன்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கில், கோர்ட்டில் சபாநாயகர் தீர்ப்பு ஏற்கப்பட்டால் தேர்தல் வரும். அந்த 18 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடுவது பற்றி இப்போதே சொல்ல முடியாது. ஏனெனில் கட்சியில் நான் மட்டுமே முடிவு எடுப்பது இல்லை. அனைவரும் கலந்து பேசி கூட்டு முடிவை எடுப்போம்.

    என்னைப் பொறுத்தவரை அரசியல் இளைஞர்களிடம் இருந்துதான் தொடங்குகிறது. அவர்கள் இந்த அரசை எதிர்த்து கேள்வி கேட்க தெரிந்து இருக்க வேண்டும். நான் சிறு வயதில் திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டேன்.

    மாணவனாக இருக்கும் போது அரசியல் பற்றி தெரிந்தால்தான் செயல்பட முடியும். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே நான் மாணவர்களை தேடி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றேன். ஆனால் நான் அவ்வாறு செல்வதை இந்த அரசு தடுத்து நிறுத்துகிறது.


    1967-ம் ஆண்டு திராவிட இயக்கத்தால் புது யுகம் ஏற்பட்டது. பெரியார், அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் பிறந்து இருக்காவிட்டாலும் திராவிட இயக்கம் தோன்றி இருக்கும். அது காலத்தின் தேவையாக இருந்தது.

    ஆனால் ஒவ்வொரு அரசியல்வாதியும் குறிப்பிட்ட கால அளவே நீடிக்க முடியும். அதுதான் உண்மை. திறமையான அரசியல்வாதிகளுக்கு பதில் புதியவர்கள் வர வேண்டும்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் நீண்ட நாட்களுக்கு ஒருவரே தலைமை பதவியில் இருக்க மாட்டார். என்னை இந்த வி‌ஷயத்தில் எதிர்பார்க்காதீர்கள். எனது இடம், நேரத்தை நான் தியாகம் செய்வேன் என்று எதிர்பார்க்காதீர்கள். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் எனக்கு வேண்டும்.

    மக்கள் என்னைப் போன்றவர்களை நம்ப வேண்டும். நான் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    Next Story
    ×