என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நில அபகரிப்பு வழக்கு- அமைச்சர் பொன்முடி விடுதலை
- அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஜெயவேல் கூறியிருந்தார்.
- போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
சென்னை:
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வருபவர் பொன்முடி. இவர், கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 630 சதுர அடி இடத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அந்த இடத்தில் சட்டவிரோதமாக குடியிருந்து வந்த கண்ணன் என்ற கண்ணப்பனை வெளியேற்றி விட்டு போலி ஆவணங்களை தயாரித்து பொன்முடியின் மாமியார் சரஸ்வதி பெயரில் அந்த இடம் பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
அந்த இடத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளதாகவும் கடந்த 2003-ம் ஆண்டு புகார் எழுந்தது.
இதுதொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினார்கள். பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, அப்போதைய அடையாறு சார்-பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு உள்ளிட்ட 10 பேர் மீது 27.8.2003 அன்று வழக்குப்பதிவு செய்தனர்.
பிறகு பல்வேறு கட்டங்களாக விசாரணையை நடத்தினார்கள். இதையடுத்து 2.9.2004 அன்று பொன்முடி உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னை சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்தநிலையில் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி பொன்முடி அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சிறப்பு கோர்ட்டு, பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து 26.4.2007 அன்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. விசாரணை முடிவில், பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட்டு 6.9.2017 அன்று ரத்து செய்தது.
இதைத்தொடர்ந்து பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்தது.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார்-பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு ஆகியோர் மரணம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து பொன்முடி உள்ளிட்ட மற்ற 7 பேர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜரத்தினம் உள்பட 90-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 180-க்கும் மேற்பட்ட சான்றா வணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையால் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஜெயவேல் கூறியிருந்தார்.
அதன்படி இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ஜெயவேல் தீர்ப்பை வழங்கினார். போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
நீதிபதி ஜெயவேல் தனது தீர்ப்பில், "நிலத்தை அபகரித்ததாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லை. எனவே அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. எனவே பொன்முடி உள்பட 7 பேரையும் விடுதலை செய்கிறேன்" என்று கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்