search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பீரோ பட்டறை உரிமையாளர் கொலையில் 10 பேர் போலீசில் சரண்
    X

    பீரோ பட்டறை உரிமையாளர் கொலையில் 10 பேர் போலீசில் சரண்

    • கொலை நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
    • 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் குப்பனூர் வெள்ளியம்பட்டியை சேர்ந்தவர் பட்டறை சரவணன் (45) இவர் நேற்று முன்தினம் வெள்ளாளகுண்டம் பகுதியில் உள்ள தனது பீரோ பட்டறைக்கு காரில் சென்றார். அப்போது அயோத்தியாபட்டணம் அடுத்த அரூர் மெயின்ரோடு பனங்காடு பகுதியில் சென்றபோது மற்றொரு கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் சரவணன் ஓட்டி வந்த கார் மீது மோதி நின்றது.

    பின்னர் அந்த கும்பல் காரில் இருந்து சரவணனை வெளியே இறக்கி கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது பற்றி தெரியவந்ததும் காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட சரவணன் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட காட்டூர் ஆனந்தன் கொலையாளிகளுக்கு பட்டறை சரவணன் பண உதவி செய்ததும், இதனால் பழிக்கு பழியாக காட்டூர் ஆனந்தனின் மைத்துனர் கார்த்திக் தலைமையிலான கும்பல் சரவணனை கொலை செய்ததும் தெரியவந்தது.

    மேலும் கொலை நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் 7 பேர் கும்பல் சரவணனை வெட்டி கொலை செய்தது பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பட்டறை சரவணன் கொலை வழக்கு தொடர்பாக காட்டூர் ஆனந்தனின் மனைவி சத்யா (38), அவரது மற்றொரு தம்பி கணேஷ் (30), பொன்னமா

    பேட்டையை சேர்ந்த ஜீவன்ராஜ் (24), கருப்பூரை சேர்ந்த சாரதி (21), சூர்யா (25), காமலாபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (28), மற்றும் ஆனந்தராஜ் ஆகிய 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இவர்கள் பட்டறை சரவணனை தீர்த்து கட்டுவதற்கு ஒன்று சேர்ந்து திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆனந்தனின் மைத்துனர் கார்த்திக் உள்பட மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இதில் மேலும் 10 பேர் காரிப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

    முன்னதாக கைதான 7 பேரையும் போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது போலீசாருக்கும் அங்கு பணியில் இருந்த டாக்டர்கள், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×