என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கட்சியின் சின்னம் ‘பாபா’ முத்திரை - புதிய கட்சி தொடங்க ரஜினி தீவிரம்
Byமாலை மலர்1 Jan 2018 12:22 PM IST (Updated: 1 Jan 2018 12:22 PM IST)
ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து புதிய கட்சி தொடங்கும் பணியில் ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வருகிறார். கட்சியின் சின்னமாக பாபா முத்திரை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Rajinikanth #RajinikanthPoliticalEntry
2018 ஆம் ஆண்டின் புத்தாண்டு தொடக்கம் தமிழக அரசியலில் விறுவிறுப்பையும், நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்தும் புத்தாண்டாக மலர்ந்துள்ளது.
இந்த அரசியல் மாற்றத்துக்கும், நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு விதை ஊன்றியிருக்கிறது.
தமிழ்நாட்டு அரசியலோடு ரஜினியின் வருகை பற்றி கடந்த சுமார் 25 ஆண்டுகளாக பேசப்பட்டது. ரஜினி அரசியலை விட ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் காட்டியதால் பெரும்பாலானவர்கள், அவர் அரசியலில் ஈடுபட மாட்டார் என்றே நினைத்தனர்.
கடந்த மே, டிசம்பர் மாதங்களில் அவர் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை சந்தித்த போது கூட அவர் அரசியலுக்கு வருவாரா என்ற சந்தேகம்தான் மக்கள் மனதில் இருந்தது. ஆனால் நேற்று அவர் உலகம் முழுக்க வாழும் தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் “புதிய அரசியல் கட்சி தொடங்குவேன்” என்று அறிவித்தார்.
தனதுஅரசியல் “ஆன்மிக அரசியல்” ஆக இருக்கும் என்றும் ரஜினி கூறியுள்ளார். ஆன்மிக அரசியல் என்பது தர்மமான, நியாயமான அரசியல் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரும்போது புதிய கட்சி, சின்னம், கொள்கை ஆகியவற்றை அறிவிக்கப் போவதாக ரஜினி கூறியுள்ளார். அதற்கு முன்னதாக தனது ரசிகர் மன்றத்தை ஒருங்கிணைத்து, புதுப்பித்து பலப்படுத்தும் முக்கியமான பணியை செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
புதிய மன்றங்கள் தொடங்குவதுடன், அந்த மன்றங்களில் அனைத்து தரப்பினரையும் சேர்க்க வேண்டும் என்பது அவரது இலக்காக உள்ளது. 234 தொகுதி வாரியாக அந்த மன்றங்களை பிரித்து செயல்பட வைக்கும் திட்டமும் ரஜினியிடம் உள்ளது.
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்குத்தான் அதிக ரசிகர் மன்றங்கள் இருந்தன. அவருக்குப் பிறகு அதிக அளவு ரசிகர் மன்றங்கள் நடிகர் ரஜினிக்குத்தான் உள்ளது. அவரது முதல் ரசிகர் மன்றம் மதுரையில் தொடங்கப்பட்டது.
பிறகு நற்பணிகள் செய்வதற்காக ரஜினியின் தலைமை ரசிகர் மன்றம் சென்னையில் தொடங்கப்பட்டது. தற்போது ரஜினி பெயரில் பதிவு செய்யப்பட்ட 23 ஆயிரம் ரசிகர் மன்றங்கள் உள்ளன. பதிவு செய்யப்படாத ரசிகர் மன்றங்கள் சுமார் 27 ஆயிரம் உள்ளன.
இந்த 50 ஆயிரம் ரசிகர் மன்றங்களையும் ஒருங்கிணைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது தவிர புதிய மன்றங்களைத் தொடங்கி, அவற்றுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய கட்சியின் பெயர், சின்னம், கொடி, கொள்கைகள், வாக்குறுதிகளை தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் கொண்டு சென்று சேர்க்கும் அடித்தள வேலையை ரசிகர் மன்ற நிர்வாகிகளே செய்ய முடியும் என்று ரஜினி கருதுகிறார். எனவேதான் ரசிகர் மன்றங்களை ஒரே குடைக்குள் கொண்டு வரும் வேலையை முதல் வேலையாக சொல்லியுள்ளார்.
அவர் உத்தரவை ஏற்று புதிய மன்றங்கள் தொடங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக எந்தெந்த மாவட்டங்களில் ரசிகர் மன்றம் குறைவாக உள்ளன என்று ஆராயப்பட்டு வருகிறது. அந்த மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி ரசிகர் மன்றங்களை அதிகமாக தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே இருக்கும் ரசிகர் மன்ற மூத்த நிர்வாகிகளின் உதவிகள் கோரப்பட்டுள்ளது.
ரசிகர் மன்றங்கள் அனைத்தும் முறைப்படி நெறிப்படுத்தி ஒருங்கிணைக்கும் பணி நிறைவு பெறுவதற்கு ஓரிரு மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இந்த அடித்தள பணியை எவ்வளவு சீக் கிரத்தில் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் முடிக்கும்படி ரஜினி உத்தரவிட்டுள்ளார்.
ரசிகர் மன்றங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதும், ரசிகர்களுக்கு புதிய அடையாள அட்டை கொடுக்கப்பட உள்ளது. அதன் பிறகு மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிராம அளவில் நிர்வாகிகளை நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர்களில் மூத்த உறுப்பினர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது. அரசியல் களத்தில் ஏற்கனவே அனுபவம் பெற்றவர்களுக்கு மாநில அளவில் பதவிகள் வழங்கப்படும்.
இதற்கிடையே புதிய கட்சி பெயர், சின்னம், கொடி ஆகிய மூன்றையும் முடிவு செய்ய ரஜினி தீர்மானித்துள்ளார். ரஜினி கட்சியின் பெயர் தமிழகம், திராவிடம் என்பதை குறிக்கும் வகையில் இருக்காது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.
திராவிடம் என்பதை கேட்டு, கேட்டு மக்களுக்கு சலிப்பு வந்து விட்டதால் ஆன்மிகத்தை பிரதிபலிக்கும் வகையில் புதிய கட்சியின் பெயர் இருக்கும் என்கிறார்கள். குறிப்பாக பகவத் கீதைக்குள் இருந்து அந்த புதிய பெயர் புறப்பட்டு வரும் என்கிறார்கள். தமிழர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், சுண்டி இழுக்கும் வகையில் அந்த கட்சி பெயர் அமையும் என்று ரஜினி ரசிகர் மன்ற மூத்த தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார்.
அதுபோல ரஜினி கட்சியின் சின்னமும் ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். ரஜினி “பாபா” படத்தில் நடித்தபோது வலது கையில் உள்ள ஆள்காட்டி விரலையும், சுண்டு விரலையும் மட்டும் உயர்த்தி, மற்ற 3 விரல்களை மடக்கும் ஒருவித முத்திரையை அடிக்கடி காண்பித்து “கதம், கதம்” என்பார்.
ரசிகர்களிடம் அந்த முத்திரை “பாபா முத்திரை” என்று புகழ் பெற்றது. ஆன் மிகத்திலும் அந்த முத்திரை முக்கியத்துவம் வாய்ந்தது. மக்கள் மனதில் ஏற்கனவே ஆழமாக பதிந்து விட்ட அந்த பாபா முத்திரையை கட்சியின் சின்னம் ஆக ரஜினி தேர்வு செய்வார் என்று தெரிகிறது.
அதற்கு ஏற்ப ரஜினி கட்சிக்கு தேர்தல் கமிஷனிடம் ஒரு புதுமையான சின்னத்தை கேட்டுப் பெற திட்டமிட்டுள்ளனர்.
கட்சிக் கொடியிலும் புதுமையை கொண்டு வர ரஜினி ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தற்போது ரஜினி ரசிகர் மன்ற கொடியாக மேலே நீலம், நடுவில் வெள்ளை, கீழே சிவப்பு வண்ணத்தில் கொடி உள்ளது. அந்த கொடியின் மத்தியில் ரஜினி சூப்பர் ஸ்டார் என்பதை பிரதிபலிக்கும் வகையில் நட்சத்திரத்துக்கு மத்தியில் ரஜினியின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. கொடி போன்று இருக்கும் வகையில் அந்த கொடியின் மாதிரி உள்ளது. ஆனால் ரஜினி ரசிகர் மன்ற கொடி போல சில கட்சிகளின் கொடி உள்ளது. குறிப்பாக ஒரு சாதி கட்சியின் கொடி ரஜினி ரசிகர் மன்றக்கொடி உள்ளது.
எனவே ரஜினி கொடி வேறு வண்ணத்துக்கு மாறக்கூடும் என்கிறார்கள்.
கட்சிப் பெயர், சின்னம், கொடி ஆகியவை குறித்த ஆலோசனை ஒரு பக்கம் நடக்க, மற்றொரு பக்கம் உறுப்பினர்களை அதிகரிக்கும் பணியும் நடக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் ரஜினி புதிய கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் தீவிரம் பெற்றுள்ளன.
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பதை 6 மாதங்களுக்கு முன்பே தீர்மானித்து விட்டதாக கூறப்படுகிறது. என்றாலும் தற்போதுதான் முறைப்படி அறிவித்திருப்பதால் புதிய கட்சிக்கான அடித்தளத்தை கட்டமைக்கும் பணியை ரசிகர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். எனவே ரஜினி தரப்பில் இருந்து அடுத்தடுத்து புதிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். #Rajinikanth #RajinikanthPoliticalEntry #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X