search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசல் விலை 4-வது நாளாக உயர்வு
    X

    பெட்ரோல், டீசல் விலை 4-வது நாளாக உயர்வு

    பெட்ரோல் லிட்டருக்கு 23 காசும், டீசல் லிட்டருக்கு 24 காசும் அதிகரித்ததால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். #Petrol #Diesel
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல்- டீசல் விலை அதிகரித்துள்ளது.

    பெட்ரோல் - டீசல் விலையை நிர்ணயித்து கொள்ளும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய பின்னர் விலையேற்றம் அதிகரித்து வருகிறது.

    சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தினமும் நிர்ணயிக்கப்படுவது போல் பெட்ரோல், டீசலின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருவதால் தினமும் சிறிது சிறிதாக அதிகரித்து பெரியளவில் உயர்ந்து விட்டது.

    பெட்ரோல்- டீசல் விலை உயர்வு பொருளாதாரத்திலும் பெருமளவில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் 12 ரூபாய் உயர்ந்துள்ளது.

    கர்நாடக தேர்தலுக்காக 20 நாட்கள் மட்டும் விலை உயர்த்தப்படாமல் நிலையாக வைக்கப்பட்டு இருந்தது. கடந்த மாதம் 24-ந்தேதி முதல் இம்மாதம் 13-ந்தேதி வரை பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் நிலையாக இருந்தது. தேர்தல் முடிந்த உடனே அவற்றின் விலை உயர்த்தப்பட்டது.


    கடந்த 13-ந்தேதி வரையில் பெட்ரோல் லிட்டர் ரூ.77.82 ஆகவும், டீசல் லிட்டர் ரூ. 69.92 ஆகவும் இருந்தன. 20 நாட்களுக்கு பிறகு 14-ந்தேதி மீண்டும் விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோல் லிட்டருக்கு 20 காசும், டீசல் லிட்டருக்கு 24 காசும் அதிகரித்தது.
    தொடர்ந்து 3 நாட்களாக ஏறுமுகமாக இருந்த பெட்ரோல்- டீசலின் விலை இன்று 4-வது நாளாக மீண்டும் உயர்ந்தது. நேற்று பெட்ரோலின் விலை ரூ78.33 ஆகவும், டீசலின் விலை ரூ.70.62 ஆகவும் இருந்தன. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 23 காசு அதிகரித்து ரூ.78.56 ஆக உயர்ந்தது. டீசல் லிட்டருக்கு 24 காசு அதிகரித்து ரூ.70.86 ஆக உயர்ந்தது. 4 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 39 காசும், டீசல் 46 காசும் அதிகரித்துள்ளன.

    பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து செலவு அதிகமானால் பொருட்களின் விலை உயரும்.

    இதனால் ஏழை, அடித்தட்டு மக்களின் வாங்கும் சக்தி குறைந்து பாதிக்கப்படுவார்கள். காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்வு ஏழை-நடுத்தர மக்களை அதிகமாக பாதிக்கும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். #Petrol #Diesel
    Next Story
    ×