search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் அரசு வங்கி ஊழியரிடம் கத்திமுனையில் 2½ பவுன் செயின், செல்போன் வழிப்பறி
    X

    மதுரையில் அரசு வங்கி ஊழியரிடம் கத்திமுனையில் 2½ பவுன் செயின், செல்போன் வழிப்பறி

    நடைபயிற்சி சென்ற வங்கி ஊழியரிடம் கத்தி முனையில் 2½ பவுன் தங்கச்சங்கிலி, செல்போன் வழிப்பறி செய்த கொள்ளையர்களை ரோந்து போலீசார் விரட்டி சென்று பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மதுரை:

    திருப்பரங்குன்றம் மூட்டா காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 45), அரசு வங்கி ஊழியராக உள்ளார். ராஜேஷ் இன்று அதிகாலை மதுரை மெயின் ரோட்டில் நடை பயிற்சி சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி 2½ பவுன் தங்கச்சங்கிலி மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.

    இதையடுத்து ராஜேஷ் கூச்சல் போடவே, தற்செயலாக அங்கு வந்த ரோந்து போலீசார் விசாரித்தனர். அப்போது ராஜேஷ் நடந்த விவரங்களை கூறினார். அதைத்தொடர்ந்து போலீசார் வாகனத்தில் மர்ம நபர்களை விரட்டி சென்றனர்.

    இதற்கிடையே பசுமலை சோதனை சாவடிக்கு தகவல் பறந்தது. அவர்கள் சாலையில் தடுப்புகளை அமைத்து, குற்றவாளிகளை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த திருட்டு தங்கச்சங்கிலி, செல்போன் ஆகியவை மீட்கப்பட்டன.

    திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சிக்கந்தர் சாவடியை சேர்ந்த கதிரவன் (வயது 20), ஆனையூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த மனோகுமார் (22) என்பது தெரிய வந்தது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×