search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி சம்பவத்தை மூடிமறைக்க ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு - ஸ்டாலின் குற்றச்சாட்டு
    X

    தூத்துக்குடி சம்பவத்தை மூடிமறைக்க ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு - ஸ்டாலின் குற்றச்சாட்டு

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை மூடிமறைக்கவே சிகிச்சையின்போது ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். #SterliteProtest #Jayala
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆடியோ ஒன்று விசாரணை ஆணையத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறதே?.

    பதில்:- இந்த ஆட்சியாளர்கள் தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுத் தள்ளி, என்கவுண்ட்டர் செய்திருக்கிறார்கள். அதனால் மக்களிடத்தில் இந்த ஆட்சி மீது இன்னும் அதிகமான வெறுப்பு ஏற்பட்டு, இந்த ஆட்சி எப்போது ஒழியும் என்ற உணர்வோடு இருக்கின்ற நிலையில், மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகம் விசாரணை கமிஷனை பயன்படுத்துகிறார்கள் என்ற எண்ணம் வந்திருக்கிறது.


    இவ்வளவு நாள் இல்லாமல் இன்று (அதாவது நேற்று) சிகிச்சையின்போது ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த நேரம் இது வெளியிடப்பட்டதற்கு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை மூடிமறைக்க எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகத்தான் தோன்றுகிறது.

    கேள்வி:- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக, ஏற்கனவே டான்சி வழக்கில் ஆதரவாக செயல்பட்ட, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா தலைமையில் விசாரணை கமிஷன் போட்டு இருக்கிறார்களே?

    பதில்:- ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு இருப்பதே, இதை முழுமையாக மூடி மறைக்க வேண்டும், எந்த உண்மையும் வெளிவந்துவிடக்கூடாது, என்பதற்காக திட்டமிட்டு அமைத்திருக்கிறார்கள். நியாயமாக, விசாரணை கமிஷன் அமைக்க வேண்டிய அவசியமே இல்லை. காரணம், ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே, வன்முறையை தூண்டியதால் தற்காப்புக்காக இந்த முறையை கையாண்டதாக தெளிவாக சொல்லிவிட்டார். முதல்- அமைச்சரே விசாரணை நடத்தி, தீர்ப்பு சொல்வது போல, அவரே சொல்லிவிட்டார். எனவே, விசாரணை நடத்த வேண்டிய அவசியமே இல்லை. இது ஒரு கபட நாடகம் மட்டுமே.

    கேள்வி:- பிரதமர் பதவியேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், 13 பேர் கொல்லப்பட்டதற்கு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லையே?.


    பதில்:- இதுதான் அவருடைய மிகப்பெரிய சாதனை. தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறது. இங்கு இருக்கின்ற ஆட்சியாளர்கள் என்கவுண்ட்டர் நடத்தி, 13 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். ஆனால், இதுகுறித்து 4 ஆண்டுகளாக மிகப்பெரிய பிரதமர் பொறுப்பில் இருக்கக்கூடிய மோடி அனுதாபம் கூட தெரிவிக்காமல் இருப்பதுதான் அவரது சாதனை.

    கேள்வி:- முன்னாள் டி.ஜி.பி. அலெக்சாண்டர் துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு ஒருநாள் முன்பாக சென்று பல்வேறு ஏற்பாடுகளை செய்ததாக கூறப்படும் நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்று கூட அரசு தெரிவிக்கவில்லையே?

    பதில்:- அந்த ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் யார் மாமூல் வாங்கிக் கொண்டிருக்கிறாரோ, அவர்தான் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது. அதனால் தான் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை அங்கிருந்து மாற்றி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால், அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், பணியில் இருந்து இடைநீக்கம் கூட செய்யாமல், காத்திருக்கும் பட்டியலில் கூட வைக்காமல் உள்ளனர். அந்த காவல் கண்காணிப்பாளருக்கு அவார்டு கொடுப்பது போல, பதவி உயர்வு கொடுப்பது போல, சென்னைக்கு மாற்றி இருப்பதில் இருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

    கேள்வி:- தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இன்று (நேற்று) ஆலையை மூட படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்து இருக்கிறாரே?

    பதில்:- அமைச்சரவை கூடி ஒரு கொள்கை முடிவு எடுத்தால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வுகாண முடியும். அதைத்தான் தூத்துக்குடி மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

    கேள்வி:- சட்டமன்றத்தில் இதுகுறித்து தி.மு.க.வின் நடவடிக்கை என்ன?

    பதில்:- வரும் 28-ந்தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்தவிருக்கிறோம். எப்படிப்பட்ட வியூகம் அமைப்பது என்று அதில் முடிவு செய்வோம்.

    கேள்வி:- பா.ஜ.க.வுக்கு ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து நிதியுதவி வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதே?

    பதில்:- இது ஒன்றும் புதிதல்ல. இதுபோன்று பல இடங்களில் இருந்து நிதி வந்து கொண்டிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நிதி கிடைத்ததால் தான் பிரதமர் மோடி இதுபற்றி வாய்திறக்காமல் இருக்கிறார் என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.  #SterliteProtest #Thoothukudi #Tuticorin #Jayalalithaa #JayalalithaaAudio #Jayalalithaa #4YearsofModi
    Next Story
    ×