search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளையரால் தாக்கப்பட்ட ஆறுமுகம்.
    X
    கொள்ளையரால் தாக்கப்பட்ட ஆறுமுகம்.

    ஈரோடு அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் முகமூடி கொள்ளை

    ஈரோடு அருகே அடுத்தடுத்து நடந்த 2 முகமூடி கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ளது கஸ்பாபேட்டை. இதையடுத்துள்ள நாதகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50).

    இவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லலிதாராணி (38). கணவரும், மனைவியும் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அதிகாலை 1 மணி அளவில் மர்ம ஆசாமிகள் 2 பேர் வீட்டின் பின்னால் உள்ள காம்பவுண்டு சுவர் ஏறி குதித்தனர்.

    வீட்டின் சமையல் அறை கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பிறகு வீட்டுக்குள் இருந்த பீரோவையும் நைசாக திறந்தனர். சத்தம் கேட்டு லலிதா ராணி எழுந்தார்.

    இதில் ஒருவன் லலிதா ராணி கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி செயினை பறித்தான். லலிதாராணி அலறினார். சத்தம் கேட்டு எழுந்து வந்த சிவகுமார் தடுக்க முயன்றார்.

    7 பவுன் நகையை பறிகொடுத்த லலிதாராணி.

    அப்போது ஒரு கொள்ளையன் அவரை 3 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பியால் ஓங்கி அடித்தான். இதில் அவர் நிலை குலைந்தார்.

    பிறகு அவரது முகத்தில் கொள்ளையன் டார்ச் லைட்டால் அடித்தான். இதில் அவர் கண் கூசியது. இதை பயன்படுத்தி சிவக்குமார் கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினையும் பறித்தான்.

    பின்னர் கொள்ளையர்கள் 2 பேரும் அங்கிருந்து வீட்டின் பின்புறம் வழியாக ஓடி தப்பிவிட்டனர். கொள்ளையர்கள் 2 பேருக்கும் 30 வயது இருக்கும். ஆஜானு பாகு தோற்றத்தில் இருந்தார்கள்.

    அவர்கள் பெர்முடாஸ் அணிந்திருந்தனர். 2 பேரும் முகத்தை மறைத்து முகமூடி அணிந்திருந்தனர்.

    இதேபோல கஸ்பாபேட்டை அரசு போக்குவரத்து நகரிலும் முகமூடி கொள்ளை நடந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (47). பெருந்துறை அரசு போக்குவரத்து கழக நிறுவனத்தில் டெக்னீசியனாக வேலை பார்த்தார்.

    நேற்று இவர் பணிக்கு சென்றிருந்தார். வீட்டில் அவரது மனைவி அம்பிகா (40), தந்தை ஆறுமுகம் (68), தாய் பாப்பாத்தி (62) மற்றும் உறவினர்கள் இருந்தனர்.

    இரவில் அவர்கள் தூங்கிக் கொண்டு இருந்தனர். வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 2 பேர் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் முகமூடி அணிந்திருந்தனர்.

    வீட்டில் இருந்த பாப்பாத்தியின் கழுத்தில் கிடந்த செயினை கொள்ளையன் ஒருவன் பறித்தான். அந்த செயின் கவரிங் செயின் ஆகும்.

    தடுக்க முயன்ற அவரது கணவர் ஆறுமுகம் தலையில் இரும்பு கம்பியால் ஒருவன் ஓங்கி அடித்தான். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    வலியால் ரத்தம் சொட்ட சொட்ட அவர் துடித்தார். பிறகு கொள்ளையர்கள் வீட்டின் பின் பக்கம் வழியாக தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த 2 கொள்ளை சம்பவம் குறித்தும் ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இரு சம்பவத்திலும் ஒரே கொள்ளை கும்பல்தான் கைவரிசை காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து நடந்த இந்த 2 முகமூடி கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    Next Story
    ×