search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது ஏன்? - ஐகோர்ட்டில் டி.ஜி.பி. விளக்கம்
    X

    தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது ஏன்? - ஐகோர்ட்டில் டி.ஜி.பி. விளக்கம்

    தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் போலீசார் உயிரை காக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று ஐகோர்ட்டில் டி.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார். #BanSterlite #SterliteProtest

    சென்னை:

    தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் கலவரம் வெடித்தது.

    அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் 47 பேருக்கு இன்னமும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீஸ் துப்பாக்கி சூட்டுக்கு முன்பும், பின்பும் தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளிலும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தீ வைப்பு சம்பவங்களும் நிகழ்ந்தன. இதன் காரணமாக 141 வாகனங்கள் சேதம் அடைந்தன.

    இதில் 20 வாகனங்கள் காவல் துறைக்கு சொந்தமானவை. 63 வாகனங்கள் அரசின் பல்வேறு துறைக்கு சொந்தமானவை. 58 வாகனங்கள் தனியாருக்கு உரியவை. இந்த வாகனங்களை சேதம் செய்ததாக 177 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கலவரத்தில் 72 போலீசார் காயம் அடைந்தனர். அவர்களில் 26 பேருக்கு உள் நோயாளியாகவும், 46 பேருக்கு புற நோயாளியாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசை தாக்கியதாக மொத்தம் 185 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

     


    துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது.

    இதற்கிடையே தூத்துக்குடியில் 13 பேர் துப்பாக்கி சூட்டில் பலியானதற்கு போலீசார் விரிவான விளக்கம் தர வேண்டும் என்று 3 வக்கீல்கள் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து தூத்துக்குடியில் 13 பேர் உயிரிழக்கும் அளவுக்கு துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது என்பதை முழுமையாக விளக்கி சென்னை ஐகோர்ட்டில் போலீஸ் டி.ஜி.பி. ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். டி.ஜி.பி. சார்பில் உதவி ஐ.ஜி. மகேஸ்வரன் அதை தாக்கல் செய்தார்.

    தூத்துக்குடியில் எந்தெந்த இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது, பலியானவர்கள் தூத்துக்குடியில் எந்தெந்த பகுதியில் வசித்தனர் என்பதை காட்டும் வரை படத்துடன் அந்த விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் டி.ஜி.பி. கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டம் மே 22-ந்தேதி 100-வது நாளை எட்டிய போது பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கைப்பற்ற தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது அவர்களிடம் வருவாய் துறை அதிகாரிகளும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சம்மதித்தனர்.

    மே 22-ந்தேதி காலை தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் ஏராளமானவர்கள் திரண்டனர். பிறகு அவர்கள் அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

    அதே போன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு மிக அருகில் இருக்கும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மடத்தூர் ஜங் ஷன் பகுதியில் திரண்டனர். அவர்களும் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.

    இருமுனைகளில் இருந்தும் கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தவர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் இருந்தனர். அவர்களை போலீசார் குறிப்பிட்ட சில இடங்களில் தடுத்து நிறுத்தினார்கள்.

    ஆனால் போலீசாரை மீறி ஊர்வலத்தில் வந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர். அப்போது அவர்களில் சிலர் பல்வேறு விதமான விரும்பத்தகாத சம்பவங்களில் ஈடுபட்டனர். சாலையின் எதிர்புறம் வந்த வாகனங்களை உடைத்தனர்.


    அவர்களைத் தடுத்து நிறுத்த போலீசார் எவ்வளவோ முயன்றனர். ஆனால் அந்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. போலீசாரையும் தாக்கி விட்டு போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை நெருங்கினார்கள்.

    கலெக்டர் அலுவலகத்தை ஊர்வலம் அடைந்ததும் வன் முறை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிக மோசமாக மாறியது. போராட்டக்காரர்களில் சிலர் சரமாரியாக கற்களை வீசினார்கள். சிலர் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர்.

    அவர்களை தடுக்க போலீசார் அனைத்து வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீதும் பெரிய அளவில் தாக்குதல் நடத்தினார்கள். போலீஸ் வாகனங்களையும் அடித்து உடைத்து, தீ வைத்து கடுமையாக சேதப்படுத்தினார்கள்.

    அந்த வன்முறையை கட்டுப்படுத்த எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் முடிந்தன.

    இந்த நிலையில் சூழ்நிலையை தங்களுக்கு சாதக மாக்கிக் கொண்ட சிலர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்புக்குள் ஊடுருவினார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் ஸ்டெர்லை ஆலை ஊழியர்களின் மோட்டார்சைக்கிள், வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

    அவற்றுக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். கீழ்தளத்தில் இருந்த ஜெனரேட்டர் அறைக்கும் தீ வைத்தனர். கீழ்தளத்தில் எரியத் தொடங்கிய தீ அந்த குடியிருப்பு முழுமைக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டது.

    அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் சுமார் 150 பேர் வசித்து வருகிறார்கள். கீழ்தளத்தில் தீ வைக்கப்பட்ட காரணத்தால், அந்த 150 பேர் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரும், தீயணைப்புப் படையினரும் தீயை அணைக்கும் நடவடிக்கையை மேற் கொண்டனர்.

    ஆனால் போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்தை தடுத்து நிறுத்தி விட்டனர். போலீஸ்காரர்களையும் அந்த குடியிருப்புக்கு அருகில் வர முடியாதபடி தொடர்ந்து கல்வீசி தாக்கினார்கள்.

    வன்முறை அதிகரித்தப் படி இருந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பில் இருந்த சுமார் 150 பேர் மற்றும் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. அவர்களை காப்பாற்ற கடைசி கட்டமாக வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    கலெக்டர் அலுவலகத்தையும், சுற்றுப்புற பகுதிகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர துப்பாக்கி சூடு நடத்துவதை தவிர வேறு வழியே இல்லை என்ற நிலை உருவான தால்தான் போலீசார் துப்பாக்கி சூடு பிரயோகத்தை மேற்கொண்டனர். இல்லையெனில் மிகப்பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.

    அன்று மதியம் 1 மணிக்கு சுமார் 3 ஆயிரம் பேர் இந்திய உணவுக் கழக குடோன் பகுதியில் திரண்டு வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் சரமாரியாக கற்களை வீசி தாக்கினார்கள். இதனால் அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடியும் நடத்தினார்கள்.

    உடனே கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ஒன்று திரண்டு ஒரு போலீஸ்காரரை தாக்கி கொல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதில் கார்த்திக் என்பவர் உயிரிழந்தார்.

    மதியம் 1.35 மணிக்கு மீண்டும் ஒரு கலவர கும்பல் திரண்டு வந்து போலீஸ்காரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. 2 அரசு பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் அந்த கலவர கும்பல் மீது தடியடி நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

    பிற்பகல் 3 மணிக்கு திரேஸ்புரத்தில் ஒரு கும்பல் பயங்கர கலவரம் செய்தது. இதனால் துணை தாசில்தார் கண்ணன் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டார். அந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழக்க நேரிட்டது.

    மதியத்துக்குப் பிறகு வன்முறையாளர்கள் நிறைய சொத்துக்களை சேதப்படுத்தினார்கள். முத்துக் கிருஷ்ணாபுரம், பொன்னகரம், சுந்தரவேல்புரம் ஆகிய இடங்களில் இருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

    மே 23-ந்தேதி அண்ணாநகரில் சுமார் ஆயிரம் பேர் திரண்டு வன்முறைகளில் ஈடுபட்டனர். அவர்கள் டுவிபுரத்தில் இருந்த டாஸ்மாக் மதுக்கடையை அடித்து உடைத்தனர்.

    அரசு சொத்துக்களும் நாசம் செய்யப்பட்டன. அந்த கலவரத்தை கட்டுப்படுத்த மீண்டும் துப்பாக்கி சூடு நடத்த நேரிட்டது. அதில் மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் உயிரிழந்தார். இந்த வன்முறை தாக்குதலில் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரனுக்கும் காயம் ஏற்பட்டது.

    தூத்துக்குடியில் மே மாதம் 22 மற்றும் 23-ந்தேதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் 5 இடங்களில் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கலெக்டர் அலுவலகம் அருகில், எப்.சி.ஐ. அருகில், அண்ணாநகர் மெயின் ரோடு பகுதியில், திரேஸ்புரம் ஆகிய 4 இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. எப்.சி.ஐ. அருகில் போலீசார் தடியடி நடத்தினார்கள்.

    மே 22-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு திரேஸ்புரம் பகுதியில் நிறைய பேர் திரண்டதால் துப்பாக்கி சூடு நடத்தும்படி மண்டல துணை தாசில்தார் உத்தரவிட்டார். அதன் பேரில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஜான்சிராணி (37) மரணம் அடைந்தார். (இந்த துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட தாசில்தார் பெயர் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை)

    வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கி நாசமாக்கிய கலெக்டர் அலுவலக பகுதி மற்றும் அரசு சொத்துக்களை பொதுப் பணித் துறைக்குட்பட்ட என்ஜினீயர் ஒருவர் ஆய்வு செய்து கணக்கிட்டுள்ளார். அவரது கணக்குப்படி கலெக்டர் அலுவலகத்தில் ரூ.28.12 லட்சத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் டாஸ்மாக் கடைகள் உடைப்பு, வாகனங்களுக்கு தீ வைத்தது காரணமாக ரூ.15.67 கோடிக்கு சேதம் மற்றும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #BanSterlite #SterliteProtest

    Next Story
    ×