search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாராய ஆலை குற்றச்சாட்டு - தினகரன் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு
    X

    சாராய ஆலை குற்றச்சாட்டு - தினகரன் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு

    சாராய ஆலை குற்றச்சாட்டு தொடர்பாக டி.டி.வி. தினகரன் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் சட்டசபையில் இருந்து அவர் வெளிநடப்பு செய்தார்.
    சென்னை:

    சட்டசபையில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. ஒரு பிரச்சினையை முன்வைத்து பேசினார்.

    2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் 6,672 மதுக்கடைகளை குறைப்பேன் என்று மறைந்த ஜெயலலிதா குறிப்பிட்டு இருந்தார். அதன்படி பதவி ஏற்றதும் 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார்.

    பிப்ரவரி மாதம் பிறந்த நாளன்று 500 மதுக்கடைகளை மூடினார். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி 3,321 மதுக்கடைகள் மூடப்பட்டன. தற்போது 3.866 கடைகள் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

    கடந்த மே 21-ந்தேதி வெளியிடப்பட்ட அரசாணைப்படி 810 கடையை மீண்டும் திறக்க இந்த அரசு முயற்சிக்கிறது. அம்மா வழியில் நடப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்த அரசு மீண்டும் மதுக்கடைகளை திறக்க முயற்சி செய்வது சரியா? இதற்கு காரணம் என்ன என்றார்.

    உடனே அ.தி.மு.க. உறுப்பினர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள். ஒரு உறுப்பினர் “உர்..ர்.. என்று சத்தம் எழுப்பினார். தொடர்ந்து டி.டி.வி. தினகரன் பேச முயன்றார். அவருக்கு மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்போது சபாநாயகருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    சபாநாயகர்:- யாரும் உங்கள் பெயரை குறிப்பிட்டு சொல்லவில்லை. பொதுவாக சொல்வதற்கெல்லாம் பதில் அளிக்க வாய்ப்பு கொடுக்க முடியாது. மதுவிலக்கு மற்றும் துறை சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சரிடம் பதில் இருந்தால் விளக்கம் அளிப்பார்.

    (அதன் பிறகு தினகரன் மீண்டும் பேச எழுந்தார். அவருக்கு மைக் இணைப்பு கொடுக்கவில்லை.)



    அமைச்சர் தங்கமணி:- 2016 தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து பூரண மது விலக்கு கொண்டு வருவதுதான் நமது கொள்கை என்று அம்மா அறிவித்தார். அதன்படி 23.5.2016-ல் 500 மதுக்கடையை மூட கையெழுத்திட்டார். அதன் பிறகு அம்மா பிறந்த நாளில் 500 கடைகள் மூடப்பட்டது. இப்போது 3.866 கடைகள் உள்ளன. பக்கத்து மாநிலங்களில் இருந்து கள்ளச்சாராயம் வந்து விடக் கூடாது என்பதில் அரசு மிகவும் கவனமுடன் உள்ளது. 2002-ல் இருந்து தமிழ்நாட்டில் உள்ள மதுபான கடைகளுக்கு 25 சதவீதம் மது பானம் சப்ளை செய்தது யாருடைய ஆலையில் இருந்து அவர்களது குடும்பத்தை சார்ந்ததுதானே. மது விலக்கை பற்றி பேசுபவர்கள் அவர்களது மதுபான ஆலையை அப்போது மூடசொல்லி இருக்க வேண்டியதுதானே.

    இவ்வாறு அவர் கூறியதும் தினகரன் பதில் அளிக்க முற்பட்டார். சபாநாயகர் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. மைக் இல்லாமலேயே சிறிது நேரம் பேசினார். வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். மைக் இல்லாமல் பேசிய பேச்சு அவை குறிப்பில் இடம் பெறாது என்று சபாநாயகர் கூறினார்.

    இதையடுத்து தினகரன் வெளிநடப்பு செய்தார். சட்டசபைக்கு வெளியே வந்த தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த அரசு 810 மதுக்கடையை புதிதாக திறக்க முயற்சி செய்கிறது என்று கூறினால் நிதானம் இல்லாமல் பேசுவதாக என்னைப் பார்த்து கூறுகிறார்கள். எனது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மது ஆலை இருப்பதாக கூறுகிறார்கள். எனக்கு எந்த சாராய ஆலையும் கிடையாது. என் குடும்பம் என்றால் நானும் என் மனைவியும்தான். ஒரு வேளை எங்கள் உறவினர் குடும்பத்தினருக்கு மது ஆலை இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அந்த ஆலையில் இருந்து மது வாங்க மாட்டோம் என்று இவர்களால் சொல்ல முடியவில்லை.

    கோவை அருகில் உள்ள தொழிற்சாலைகளில் இவர்களுக்குத்தான் நிறைய பங்கு உள்ளது. இந்த ஆட்சி போகும் போது தொழிற்சாலைகளில் யார்-யார் பினாமி என்பது தெரிந்துவிடும். ஹவாலா பணத்தை காட்டி நான் ஜெயித்ததாக அமைச்சர் கூறுகிறார்.

    ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.6,000 வீதம் ஓட்டுக்கு பணம் கொடுத்து ரூ.180 கோடி வரை செலவு செய்தது யார் என்பது மக்களுக்கு தெரியும்.

    நாங்கள் ரூ.20 நோட்டு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் அப்படி எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. வாக்குறுதி கொடுத்து இருந்தாலும் அதை நிறைவேற்றுவோம். மதுசூதனன் ஆட்கள்தான் ரூ.20 நோட்டை காட்டி மக்களை தூண்டி விடுகிறார்கள்.

    தனக்கு போன் மூலம் மிரட்டல் வருவதாக அமைச்சர் தங்கமணி கூறியிருக்கிறார். இவர்கள் ஆட்கள்தான் இவரை மிரட்டி இருப்பார்கள். எங்கள் கட்சி ஆட்கள் இவரை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. யார் மிரட்டினார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×