search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர் மழை காரணமாக நெல்லை, கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு
    X

    தொடர் மழை காரணமாக நெல்லை, கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

    தொடர் மழை காரணமாக நெல்லை, கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வால்பாறை தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வந்தது. நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் கொடுமுடியாறு அணை பகுதியில் மட்டும் 24 மணி நேரத்தில் 170 மில்லி மீட்டர் மழை கொட்டியது.

    இதையொட்டி நேற்று முன்தினம் 70 அடியாக இருந்த கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து 80 அடியாக உயர்ந்தது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 50.70 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 8 அடிக்கு தண்ணீர் மட்டம் உயர்ந்து உள்ளது. இதேபோல் சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 34 கனஅடியாக அதிகரித்தது.



    இதனால் நேற்று முன்தினம் 19.68 அடியாக இருந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 65.29 அடியாக உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் 45.61 அடி நீர்மட்டம் உயர்ந்தது. நம்பியாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நம்பி கோவிலில் தவித்த 50 பேரை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

    இதேபோல் கோவை மாவட்டம் வால்பாறையில் மழை தீவிரம் அடைந்து உள்ளதால் சோலையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 28 அடி உயர்ந்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் இன்று (திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழையால் 15 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து தடைபட்டது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு உள்ளது. கூடலூர் தலைமை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மண் சரிந்து தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதேபோல் கூடலூர் மவுண்ட்பிளசன்ட் பகுதியில் ஒரு கார் மீது மரம் சரிந்து விழுந்தது. இதில் கார் சேதம் அடைந்தது.

    தமிழக-கேரள எல்லையில் குமுளி அருகே உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்ந்தது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகமானதால் லோயர்கேம்பில் மின்உற்பத்தி தொடங்கி உள்ளது.

    குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சூறைக்காற்றால் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த செம்மான்விளை, வாழப்பறம் வீடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாலையன் (வயது 67), குழிச்சல், நெடுமங்காலவிளையை சேர்ந்த தொழிலாளி அகஸ்டின் (36) ஆகியோர் உயிரிழந்தனர்.

    திருச்சி மணப்பாறையில் நேற்று பலத்த சூறைக்காற்று வீசியதால் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது மரம் சாய்ந்து விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ராஜூ (43), மனோகர் (41) ஆகியோர் பலியாகினர். 
    Next Story
    ×