search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மாதனூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல் - வாகனங்கள் ஸ்தம்பிப்பு
    X

    மாதனூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல் - வாகனங்கள் ஸ்தம்பிப்பு

    மாதனூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
    அணைக்கட்டு:

    மாதனூர் அருகே உள்ள பாக்கம்பாளையத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 2 ஆழ்துளை கிணறுகளின் மின்மோட்டார் பழுதாகியுள்ளது. இதனை விரைந்து சரிசெய்து குடிநீர் வழங்கக்கோரி கிராமமக்கள் வலியுறுத்தினர்.

    ஆனால், சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால் ஒரு குடம் தண்ணீருக்கு பக்கத்து கிராமங்களை நாடி செல்லும் அவல நிலைக்கு பாக்கம் பாளையம் கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை ஒடுகத்தூர்- வேலூர் ரோட்டில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால், 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து ஸ்தம்பித்து நின்றன. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் தவித்தனர்.

    தகவலறிந்ததும், வேப்பங்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போன் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ருத்ரப்பாவிடம் சப்-இன்ஸ்பெக்டர் பேசினார். இன்றைக்குள் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதாக கூறி வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்தார். இதையடுத்து, மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×