search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    திருப்பரங்குன்றத்தில் ரெயில் மோதி என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் பலி
    X

    திருப்பரங்குன்றத்தில் ரெயில் மோதி என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் பலி

    திருப்பரங்குன்றத்தில் ரெயில் மோதி தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் பரிதாபமாக பலியாயினர்.
    திருப்பரங்குன்றம்:

    விருதுநகர் லிங்காபுரத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் செல்வமுருகன் (வயது 21). இவர் திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி அங்கு உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு அதிகாலை கல்லூரிக்கு புறப்பட்டு வந்தார். திருப்பரங்குன்றம் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் இருந்து ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற ரெயிலில் செல்வமுருகன் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    இதேபோல் பேரையூரை சேர்ந்த போஸ் என்பவரது மனைவி திருமேனி அம்மாள்(63) என்பவரும் திருப்பரங்குன்றத்தில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்து போனார். இவ்வாறு ஒரே நாளில் அடுத்தடுத்து 2 பேர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி பலியான சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பரங்குன்றம் ரெயில்வே சுரங்கப் பாதையில் இருந்து வெயிலுகந்த அம்மன் கோவில் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ரெயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு உயிர் பலி ஆவது தொடர் கதையாக உள்ளது. இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் ரெயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.

    பொதுமக்கள் சுரங்கப் பாதையின் வழியே சென்று வருவதற்கு வசதியாக சுரங்கப் பாதைக்குள் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுரங்க பாதைக்குள் மின் விளக்கு வசதி, சுழலும் நவீன கேமரா வசதி செய்ய வேண்டும். விபத்து நடக்கும் அந்த பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    Next Story
    ×