search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    காவிரி விவகாரத்தில் குமாரசாமிக்கு பாராட்டு: கமல் கருத்தால் மீண்டும் சர்ச்சை
    X

    காவிரி விவகாரத்தில் குமாரசாமிக்கு பாராட்டு: கமல் கருத்தால் மீண்டும் சர்ச்சை

    காவிரியில் தண்ணீர் திறந்ததற்காக குமாரசாமிக்கு கமல் பாராட்டு தெரிவித்துள்ளார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலை தளங்களில் கண்டன குரல்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
    சென்னை:

    காவிரி நதிநீர் பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ள முடியும் என்று கமல் கூறி வருகிறார்.

    காவிரி நீரை தமிழகம், கர்நாடகா, புதுவை ஆகிய 3 மாநிலங்களும் பகிர்ந்து கொள்வதற்கு வசதியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாகி உள்ளன. இந்த வி‌ஷயத்தில் கர்நாடக அரசு போதிய ஒத்துழைப்பை வழங்காமல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்துக்கு சென்று அம்மாநில முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேசினார். அப்போது காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக இருவரும் பேச்சு நடத்தினர். பின்னர் கூட்டாக பேட்டியும் அளித்தனர்.

    இந்த பேச்சின் மூலமாக குமாரசாமி என் மனதை நிரப்பிவிட்டார் என்று கமல் கூறினார். குமாரசாமி கூறும்போது, தமிழக அரசுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் கமலின் இந்த நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தின. காவிரி விவகாரத்தில், விவசாயிகளை வைத்து கமல் படம் காட்டுவதாக, விவசாயிகள் சங்க தலைவர்களில் ஒருவரான பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டினார்.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அவர் மேலும் கூறும்போது, தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று தெரிவித்தார். இயற்கையின் கருணையால் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறந்ததற்காக குமாரசாமிக்கு கமல் பாராட்டு தெரிவித்துள்ளார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலை தளங்களில் கண்டன குரல்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தானாக வந்த தண்ணீருக்கு குமாரசாமியை பாராட்டுவதில் என்ன நியாயம் என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். #Tamilnews
    Next Story
    ×