search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசாரை தாக்கிய ரவுடிக்கு ஆறுதல் கூறிய அமைச்சருக்கு ஐகோர்ட்டு கண்டனம்
    X

    போலீசாரை தாக்கிய ரவுடிக்கு ஆறுதல் கூறிய அமைச்சருக்கு ஐகோர்ட்டு கண்டனம்

    போலீஸ்காரரை தாக்கிய ரவுடியை அமைச்சர் சந்தித்து ஆறுதல் கூறியது கடும் கண்டனத்துக்குரியது என்று ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘போலீசார் பணி சுமையினால், மன உளைச்சலுக்கு ஆளாகி, பலர் தற்கொலை செய்கின்றனர். எனவே, அவர்களது பணி நேரத்தை நிர்ணயம் செய்ய ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்க வேண்டும்’ என்று 2012-ம் ஆண்டு உத்தரவிட்டார்.

    ஆனால், இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இந்தநிலையில், இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ஆணையம் அமைக்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், மனுதாரர் வக்கீல் எம்.புருஷோத்தமன் ஆஜராகி வாதிட்டனர்.

    அப்போது வக்கீல் யானை ராஜேந்திரன் ஆஜராகி, இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். பின்னர், ‘ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக டி.ஜி.பி. கூறுவது சுத்தப்பொய். ஆயுதப்படை போலீசார் மட்டுமல்லாமல், போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசாரையும் ஆர்டர்லியாக உயர் அதிகாரிகள் வைத்துக்கொள்கின்றனர். இதனால், அந்த ஆர்டர்லி போலீசாருக்கு வழங்கப்படும் கோடிக்கணக்கான சம்பளம் வீணாகிறது’ என்று அவர் வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதி, ‘போலீசாரை காவல் பணிக்கு மட்டும் தான் பயன்படுத்தவேண்டும். ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தாலும், இன்னும் போலீசார் பல்வேறு மாற்றுப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுத்தான் வருகின்றனர். எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் போலீசாரை தவறாகத்தான் பயன்படுத்துகின்றனர். ராமநாதபுரத்தில் ஒரு போலீஸ்காரரை தாக்கிய ரவுடியை அமைச்சர் ஒருவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியிருக்கிறார். இவரது செயல் கடும் கண்டனத்துக்குரியது’ என்று கருத்து தெரிவித்தார்.

    பின்னர், ‘போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளில் காவல் பணிக்காக போலீசாரை பயன்படுத்துவது தவறில்லை. ஆனால், துணி துவைப்பதற்கும், காய்கறி வாங்குவதற்கும், சமையல் செய்வதற்கும் பயன்படுத்துவதுதான் தவறு. ஆனால், வேலை செய்யாமல் இருப்பதற்காக ஆர்டர்லி வேலையை விரும்பும் போலீசாரும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வருகிற 26-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறேன்’ என்று நீதிபதி கூறினார். #tamilnews
    Next Story
    ×