search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

    நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு போதை பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



    நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல் பஸ்நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வசந்தாமணி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில், மாவட்ட செஞ்சிலுவை சங்க செயலாளர் ராஜேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    போதை பழக்கத்தினால் வரும் நோய்கள் மற்றும் தீமைகள் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் வெஸ்லி செய்து இருந்தார்.

    மோகனூர் காவல் துறை, சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி சார்பில் மோகனூரில் சர்வதேச போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு கல்லூரி தலைவர் பழனியாண்டி தலைமை தாங்கினார். ஊர்வலத்தை மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் தொடங்கி வைத்தார். குமரிபாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ராமலிங்கம், துணைத்தலைவர் நவலடி மற்றும் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போலீஸ் நிலையம் முன்பு தொடங்கிய ஊர்வலம் கடைவீதி, அரசு மருத்துவமனை, வளையபட்டிசாலை எல்.ஐ.சி அலுவலகம், பஸ் நிலையம் வழியாக மீண்டும் போலீஸ் நிலையம் வந்தடைந்தது. இதில் மோகனூர் போலீசார், சுப்பிரமணியம் கல்லூரி மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் அறநிலையங்களின் தலைவர் சோமசுந்தரம் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலய வேலூர் கிளை பொறுப்பாளர் அம்பிகா முன்னிலை வகித்தார். போதை மற்றும் குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனால் ஏற்படும் நோய்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகைகளை கையில் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கந்தசாமி கண்டர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு தொடங்கிய ஊர்வலம் பரமத்தி வேலூரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தில் பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணகுமார், தேசிய மாணவர் படை மாணவ,மாணவிகள், பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் போலீசார் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    நாமகிரிப்பேட்டை போலீசார் சார்பில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பஸ் நிலையத்தில் தொடங்கியது. இதில் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். ஊர்வலத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் செட்டியண்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் பஸ் நிலையத்தை அடைந்தது. வாகன ஓட்டிகள் குடிபோதையில் வாகனம் ஓட்ட கூடாது. போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை ஒட்டி திருச்செங்கோட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட ஊர்வலத்தை தேசிய மாணவர் படை கமாண்டர் அபிசேக் சேத்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருச்செங்கோடு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி மோகன் முன்னிலை வகித்தார்.

    ஊர்வலத்தில் சென்ற மாணவர்கள் போதைப்பொருள் உபயோகிப்பதால் விளையும் தீமைகளை விளக்கி கோஷங்கள் எழுப்பினார்கள். போதையின் தீமைகள் குறித்து விளக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். திருச்செங்கோடு புதிய பஸ்நிலையம் அருகில் இருந்து தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கம் அருகே நிறைவடைந்தது.

    Next Story
    ×