search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கி கடன் வசூல் செய்வதற்கு அடியாட்களை வைத்து மிரட்டுவதா?: ராமதாஸ், வைகோ கண்டனம்
    X

    வங்கி கடன் வசூல் செய்வதற்கு அடியாட்களை வைத்து மிரட்டுவதா?: ராமதாஸ், வைகோ கண்டனம்

    விவசாயி தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது நிதி நிறுவனத்தின் சட்ட விரோத செயல்களுக்கு டாக்டர் ராமதாஸ், வைகோ கண்டனம் தெரிவித்துள்ளனர். #vaiko #ramadoss #farmersuicide

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த கருணாகரநல்லூரில், தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் டிராக்டரை பறிமுதல் செய்து சென்றதால் அவமானமடைந்த தமிழரசன் என்ற விவசாயி நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கருணாகரநல்லூரைச் சேர்ந்த விவசாயி தமிழரசன் தம்மிடம் இருந்த பழைய டிராக்டரை கடந்த ஆண்டு விற்பனை செய்துவிட்டு, கோட்டக் மஹிந்திரா நிறுவனத்திடம் கடன்பெற்று புதிய டிராக்டரை வாங்கி உள்ளார்.

    அதன்படி முதல் இரு தவணைகளை சரியாக செலுத்தி விட்ட தமிழரசன், கடந்த மாதம் செலுத்த வேண்டிய ரூ.90,000 தவணையில் ரூ.50 ஆயிரத்தை மட்டும் செலுத்தி விட்டு கரும்புக்கான கொள்முதல் விலை கிடைத்ததும் கட்டுவதாகக் கூறி கால அவகாசம் பெற்றிருக்கிறார். ஆனால், 10 நாட்களில் கடன் தவணையை செலுத்தா விட்டால் டிராக்டர் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கை அனுப்பிய நிதி நிறுவனம், அதன்படியே அடியாட்களை அனுப்பி டிராக்டரை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளது.

    இதனால் அவமானம் அடைந்த உழவர் தமிழரசன் தமது விவசாய நிலத்தில் கத்தரிச் செடிக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். எந்தத் தவறும் செய்யாத உழவர் தமிழரசனை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது நிதி நிறுவனத்தின் சட்ட விரோத செயல்கள் தான்; இது கண்டிக்கத்தக்கது.

    உழவர்களிடம் இந்த அளவு கடுமை காட்டும் வங்கி நிர்வாகங்கள் பெருந்தொழில் நிறுவனங்கள் வாங்கிய கடனை வசூலிப்பதில் மட்டும் கனிவு காட்டுகின்றனர்.

    அந்நிறுவனங்கள் கடனை செலுத்தாவிட்டால், அதை தள்ளுபடி செய்து தயவு காட்டுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தனியார் நிறுவனங்கள் வாங்கிய ரூ.1.69 லட்சம் கோடி கடனை வங்கிகள் தள்ளுபடி செய்திருக்கின்றன. மல்லையா, நிரவ் மோடி போன்றவர்கள் கடன் வாங்கி ஏமாற்றியதால் மட்டும் கடந்த ஆண்டில் வங்கிகளுக்கு ரூ.87 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தொழில் நிறுவனங்களின் கண்ணுக்கு வெண்ணெய், விவசாயிகளின் கண்ணுக்கு சுண்ணாம்பு என்ற வங்கிகளின் அணுகுமுறை ஆபத்தானதாகும்.

    கடன் செலுத்த முடியாததற்காக உழவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை மாற்றப்பட வேண்டும். இதற்கான கொள்கை வகுக்கப்பட்டு வங்கிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும். உழவர் தமிழரசன் தற்கொலை செய்து கொண்டதற்கு வங்கியின் சட்ட விரோத செயலும், சர்க்கரை ஆலை குறித்த காலத்தில் நிலுவைத் தொகையை வழங்காததும் தான் காரணம்.

    எனவே, தமிழரசன் தற்கொலை வழக்கில் அவற்றையும் சேர்த்து தண்டனை பெற்றுத்தர வேண்டும். விவசாயி தமிழரசனின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, மாணவர்களுக்கு வழங்கியுள்ள கல்விக்கடன், விவசாயிகளுக்கு அளித்துள்ள வேளாண் கடன், சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகர்களுக்கு வழங்கியுள்ள கடன்களை வசூலிக்க ஏ.ஆர்.சி. என்ற தனியார் நிறுவனத்தை முகவராக நியமித்து இருக்கிறது. இந்த தனியார் நிறுவனத்தின் முகவர்கள், கடன் பெற்றுள்ளவர்களை அவர்கள் வீட்டுக்குச் சென்று, கந்து வட்டிக் கும்பல் போல கடனை திரும்ப செலுத்தக்கோரி மிரட்டி வருகின்றனர்.


    மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன் ரூ 4 லட்சம் வரை எந்த உத்தரவாதமும் தேவையில்லை. மேலும் கல்விக் கடனை 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளில் கடனை திரும்பச் செலுத்த வேண்டும் என்று விதிமுறைகள் கூறுகின்றன. ஆனால் மாணவர்கள் படிப்பு முடிந்தவுடனேயே சென்று வங்கி முகவர்கள், கடனைத் திரும்பச் செலுத்துமாறு மாணவர்களின் பெற்றோரை மிரட்டுவதும், அவமானப்படுத்துவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

    இந்திய பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் ரூ 9 லட்சம் கோடி என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பொதுத்துறை வங்கிகள் ரூ.2.5 லட்சம் கோடி வராக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. இதில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மட்டும் ரூபாய் 3 ஆயிரத்து 66 கோடி வராக்கடனைத் தள்ளுபடி செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    மத்திய அரசு ஈவு இரக்கமற்ற ஈட்டிக்காரனாக மாறி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் குண்டர்கள் கூலிப் படையைப் போல பயன்படுத்தி, கடன் வசூலிக்கும் இந்த அராஜகம் ஜனநாயக நாட்டில் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. எனவே சாதாரண எளிய மக்களிடமிருந்து கந்துவட்டிக் கும்பலைப் போன்று கடன் வசூலிக்க முகவர்களை ஏவி விடுவதை உடனடியாக கைவிடும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார். #vaiko #ramadoss #farmersuicide

    Next Story
    ×