search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    நீட் தேர்வை அகில இந்திய அளவில் ரத்து செய்யகோரி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
    X

    நீட் தேர்வை அகில இந்திய அளவில் ரத்து செய்யகோரி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

    நீட் தேர்வை அகில இந்திய அளவில் ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். #NEET
    சென்னை:

    நீட் தேர்வை அகில இந்திய அளவில் ரத்து செய்ய வேண்டும். அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வள்ளூவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திருமாவளவன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தின் போது திருமாவளவன் பேசியதாவது:-

    நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவிகள் மருத்துவ கல்வியை எளிதில் பெற முடியவில்லை. மருத்துவ கல்வியை பெற கூடுதல் செலவு செய்ய வேண்டி உள்ளது. நீட் தேர்வை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும். அரசு பள்ளிகளில் குறைந்த அளவு மாணவர்களே உள்ளனர் என்ற காரணத்தை கூறி அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்க வேண்டும்.

    மாநில உரிமையை பறிக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது. சமூக நீதியை காக்க வேண்டும். குருகுலக்கல்வி திட்டத்தை திணிக்க கூடாது.

    ஆதி திராவிட மாணவர் விடுதிகளின் தரத்தை தமிழக அரசு உயர்த்த வேண்டும். தமிழக அரசின் உரிமைகளில் மத்திய அரசின் தலையீடுகளை வன்மையாக கண்டிக்கிறோம். நீட் தேர்வுக்காக தமிழகத்தில் இதுவரை 3 மாணவிகள் உயிர் இழந்துள்ளனர். நீட் தேர்வு மூலம் தமிழகத்தில் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தை மத்திய அரசு மறைமுகமாக திணித்து வருகிறது.

    8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருபவர்களை கைது செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும்.

    இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பாலாஜி, செல்லத்துரை, ரா.செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #NEET
    Next Story
    ×