search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலநடுக்கம் ஏற்பட்டதால் சேலம் அழகாபுரம் பகுதியில் வீட்டை விட்டு வெளியே வந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.
    X
    நிலநடுக்கம் ஏற்பட்டதால் சேலம் அழகாபுரம் பகுதியில் வீட்டை விட்டு வெளியே வந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.

    4 மாவட்டங்களில் திடீர் நிலநடுக்கம்- பீதியில் மக்கள் வீட்டை விட்டு ஓட்டம்

    சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பல பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால், பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் கூடினர். #SalemEarthQuake
    சேலம்:

    சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இன்று காலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    காலை சுமார் 7.45 மணி அளவில் சேலம் நான்கு ரோடு, பழைய பஸ் நிலையம், கோரிமேடு, அழகாபுரம், மாமாங்கம், ரெட்டிப்பட்டி, வின்சென்ட், அம்மாப்பேட்டை, கன்னங்குறிச்சி, அரிசிப்பாளையம், புதிய பஸ் நிலையம், ஜங்சன், இரும்பாலை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது.

    வீடுகள், கட்டிடங்கள் லேசாக ஆடின. சில வினாடிகள் நீடித்த இந்த பூமி அதிர்ச்சியால் கட்டிடங்கள் குலுங்கியது. வீடுகளில் இருந்த பாத்திரங்கள் கீழே உருண்டு விழுந்தன.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

    இன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென வீடுகள் குலுங்கியதால் எழுந்து வெளியே ஓடி வந்தனர்.

    மாடியில் வசிப்பவர்கள் தங்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு தெருவில் கூடினர். நிலநடுக்கம் ஏற்பட்டதும் சாலையில் சென்றவர்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்கள்.

    கருப்பூர் பகுதியில் நில அதிர்வு தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. அந்த பகுதியில் சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டது.

    தாரமங்கலம் மேச்சேரி, ஓமலூர், காடையாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த நில அதிர்வை உணர முடிந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியான பூலவாண்டியூர், மல்லிகுந்தம், கூணான்டியூர், பள்ளிப்பட்டி மற்றும் மேச்சேரி ஒன்றியம் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. வீட்டில் இருந்த பொருட்கள் கீழே சரிந்து விழுந்தது. பொதுமக்கள் பயந்து வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

    தாரமங்கலம் 17-வது வார்டு ஆசிரியர் காலனி பகுதியில் 7.50 மணிக்கு சில வினாடிகள் நிலநடுக்கம் நீடித்ததாகவும், வீட்டில் இருந்த சாமான்கள் உருண்டதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து விசைத்தறி தொழிலாளி ஈஸ்வரி கூறுகையில், ‘‘தரைப்பகுதியில் இந்த நிலநடுக்கம் தெரிந்தது. எல்லோரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தோம். அடுத்த சில நிமிடத்தில் இந்த நில நடுக்கம் அடங்கி விட்டது’’ என்றார்.

    இந்த பகுதியில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மாணவி ராகவி அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. உறவினர்கள் அவருக்கு பயப்படாதே என ஆறுதல் படுத்தினார்கள்.


    ஓமலூர் பகுதியில் காலை 7.48 மணிக்கு திடீர் என்று பயங்கர சத்தம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 2 வினாடிகள் பூமி அதிர்வு ஏற்பட்டது. இதனால் வீட்டில் பாத்திரங்கள் கீழே விழுந்தன. சிக்கனம்பட்டி, ரெட்டிப்பட்டி, புளியம்பட்டி, காடையாம்பட்டி உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கு 2 வினாடிகள் முதல் 4 வினாடிகள் வரை நீடித்தது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், மேட்டூர் அணையில் நீர் நிரம்பி இருக்கும் சமயங்களில் இது போல் நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கம். ஆகவே மாவட்ட நிர்வாகம் பூமியில் ஏற்பட்ட இந்த புவியியல் மாற்றத்தை கண்டுபிடித்து பொதுமக்களின் அச்சத்தை தீர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

    ஏற்காட்டில் இன்று காலை 7.47 மணி அளவில் திடீர் என பஸ் நிலையம், வாங்கிள் பேட்டை, ஜெரீனாகாடு, தலைச்சோலை, செங்காடு, தாசம்பாடி, பட்டிப்பாடி, முளுவி, நாகலூர், செம்மாநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.

    அதன்பிறகு மீண்டும் காலை 8.26 மணிக்கு பட்டிப்பாடி, முளுவி, நாகலூர், செம்மாநத்தம் ஆகிய பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. தொடர்ந்து 2 முறை நில அதிர்வு ஏற்பட்டதால் அந்த பகுதிமக்கள் பீதி அடைந்தனர்.

    இதேபோல் தர்மபுரி, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது. நாமக்கல், கீரம்பூர் சுங்கச் சாவடி அருகே உள்ள குஞ்சாம்பாளையம் கிராமத்தில் நாகப்பன் மற்றும் அவரது உறவினர்கள் தோட்டத்தில் உள்ள பந்தலில் அமர்ந்து செய்தித்தாள் படித்து கொண்டிருந்தனர். அப்போது பந்தல் 2 நிமிடங்கள் ஆடியது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளான ஏரியூர், நெருப்பூர், நாக மரை, பெரும்பாலை, சின்னம்பள்ளி, பழையூர், உள்ளிட்ட பகுதிகளிலும் கம்பைநல்லூர், நல்லம் பள்ளி பகுதியிலும் இன்று காலை 7.45 மணியளவில் திடீரென்று நில அதிர்வு ஏற்பட்டது.

    அப்போது வீடுகளில் உள்ள பாத்திரங்கள் உருண்டன. இதனால் பயந்துபோன அந்த பகுதி மக்கள் தங்களது குழந்தைகளுடன் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.

    கம்பைநல்லூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தூங்கி கொண்டிருந்த மாணவர்கள் நில அதிர்வு ஏற்பட்டதில் கட்டிலில் இருந்து கீழே விழுந்தனர். இதனால் பயந்து போன மாணவர்கள் அறையை விட்டு வெளியேறினர்.

    நில அதிர்வு குறித்து ஏரியூரை சேர்ந்த முருகேசன் கூறியதாவது:-

    இன்று காலை நான் எனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று லாரி ஒன்று நிலத்திற்குள் செல்வது போல் பயங்கரமான சத்தம் கேட்டது. வீட்டில் இருந்த பாத்திரங்கள் உருண்டன. இதனால் பயந்துபோன நாங்கள் எங்களது குழந்தைகளை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேறினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேட்டூரையொட்டியுள்ள ஈரோடு மாவட்ட எல்லைப் பகுதிகளான பெரும்பள்ளம், நெரிஞ்சிப்பேட்டை, அம்மா பேட்டை, கொமராயனூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 7.30 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    உடனடியாக அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். ஆனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பொது மக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் வீடுகளில் பூமிக்குள் ஒருவித சத்தம் வந்ததாக பேசிக்கொண்டனர்.

    உலகத்தில் எங்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதன் தாக்கத்தை பதிவு செய்யும் சீஸ்மோகிராபி கருவி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வானிலை ஆய்வு மையத்தில் உள்ளது.

    இந்த சீஸ்மோகிராபி கருவி கடந்த ஒரு மாத காலமாக பழுதாகி உள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் பதிவான நிலநடுக்கம் எவ்வளவு என்பதை கணிக்க முடியவில்லை.

    நில அதிர்வு தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டத்தில் இன்று ஓமலூர், காடையாம்பட்டி, சேலம் உள்ளிட்ட வட்டங்களில் 7.47 மணிக்கு 3.3 ரிக்டர் அளவில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

    பொதுமக்கள் நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் தொடர்பான தகவல்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்.1077-யை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SalemEarthQuake
    Next Story
    ×