search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாண்மை துறை துணை இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
    X

    வேளாண்மை துறை துணை இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

    கள்ளக்குறிச்சியில் வேளாண்மை துறை துணை இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 9 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #Vigilancepoliceraid

    கச்சிராயப்பாளையம்:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ராஜா நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 53). இவர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் துணை இயக்குனராக (உரம்) பணியாற்றி வருகிறார்.

    இவர் பல்வேறு ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், லஞ்சம் வாங்குவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சிறப்பு புலனாய்வு பிரிவு, சென்னை மாவட்ட ஆய்வுக்குழுவினர் சேர்ந்து கடந்த 23-ந் தேதி சென்னை சேப்பாக்கம் வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

    இதில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாய் கணக்கில் வராத பணத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் சங்கரின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது வீட்டில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் 6 போலீசார் நேற்று 9 மணி நேரம் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் வீட்டுப்பத்திரம் உள்ளிட்ட 57 ஆவணங்கள் மற்றும் ஒரு லேப்-டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வீட்டில் இருந்த 50 பவுன் நகைகள், ரூ.21 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.

    நகைகள் அனைத்தும் தனது மகள் திருமணத்துக் காக வாங்கியது என்று கூறி, அதற்கான ஆவணங் களை போலீசாரிடம் வேளாண்மை துறை துணை இயக்குனர் சங்கர் காண்பித்தார். இதை யடுத்து அவற்றை மட்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சங்கரிடம் திரும்ப கொடுத்தனர்.

    இதையடுத்து சங்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட 57 முக்கிய ஆவணங்களுடன் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


    சங்கரின் வீட்டில் சோதனை நடந்த அதே நேரத்தில் கச்சிராயப்பாளை யம் அருகே உள்ள நல்லாத்தூரில் உள்ள சங்கருக்கு சொந்தமான விதைப்பண்ணையிலும் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் 5 போலீசார் அதிரடி சோதனை நடத்தி னர். அங்கு எந்தவித ஆவணமும் கைப்பற்றப்பட வில்லை.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. கச்சிராயப்பாளையம் அருகே நல்லாத் தூரில் சங்கரின் தம்பி ராஜேந்திரன் பெயரில் 10 ஏக்கர் மாந்தோப்பு உள்ளது. சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் 4 ஏக்கர் நிலம் மற்றும் மாடி வீடு உள்ளது. ராவத்தநல்லூரில் 3 ஏக்கர் விவசாய நிலமும் உள்ளது. இவை அனைத்தும் சங்கர் தனது உறவினர்கள் பெயரில் வாங்கி உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    விழுப்புரம் மார்க்கெட் கமிட்டி செயலாளராகவும் சங்கர் பணியாற்றினார். அப்போது பல்வேறு திட்டப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் ரூ.10 கோடி வரை மோசடி செய்து வீட்டுமனை உள்ளிட்டவைகளை சங்கர் வாங்கி இருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அதிரடி சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #Vigilancepoliceraid

    Next Story
    ×