search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேகத்தடை அமைத்ததால் விபத்து: பொதுமக்கள் சாலை மறியல்
    X

    வேகத்தடை அமைத்ததால் விபத்து: பொதுமக்கள் சாலை மறியல்

    பெண்ணாடம் அருகே எந்தவித அறிவிப்பு பலகையும் இல்லாமல் வேகத்தடை அமைத்ததால் ஏற்பட்ட விபத்து காரணமாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்துள்ள சின்ன கொசப்பள்ளம் கிராமத்தில் உள்ள விருத்தாசலம்-திட்டக்குடி சாலையில் விபத்துக்களை தடுக்க நேற்று மாலை புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டது.

    இந்த வேகத்தடையின் அருகில் எந்தவித அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை. அதன் அருகே மின்வளக்கு வசதியும் இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாததால் விபத்தில் சிக்கி காயமடைந்தனர்.

    இந்தநிலையில் பெண்ணாடத்தை அடுத்த முருகன் குடியை சேர்ந்த சலீம் என்பவர் நேற்று இரவு பெண்ணாடம் ரெயில் நிலையத்துக்கு சென்று அவரது உறவினர் சாயிரா பானு என்பவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு முருகன்குடி நோக்கி வந்தார். கொசப்பள்ளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடை இருப்பது தெரியாமல் சலீம் வந்து கொண்டிருந்தார்.

    புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையை மோட்டார் சைக்கிள் கடந்த போது சலீமின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலைதடு மாறிய சலீமும், அவரது உறவினர் சகீரா பானுவும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெண்ணாடம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர்கள் 2 பேரும் வேகத்தடை அமைக்கப்பட்ட கொசப்பள்ளம் பகுதிக்கு வந்தனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்களும், இளைஞர்களும் ஒன்று திரண்டு மறியலில் ஈடுபட்டனர். வேகத்தடை உள்ள பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கவேண்டும், காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லமுடியாமல் நீண்ட தூரம் அணி வகுத்துநின்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரவேண்டும் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். வேகத்தடையின் அருகே அறிவிப்பு பலகை வைக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
    Next Story
    ×