search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை செல்லாத காவிரி - விவசாயிகள் வேதனை
    X

    டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை செல்லாத காவிரி - விவசாயிகள் வேதனை

    மேட்டூர் அணையில் இருந்து 2 முறை திறந்தவிடப்பட்ட காவிரி நீர் டெல்டா மாவட்ட பகுதியான கடைமடையை வந்து சேராது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
    தஞ்சாவூர்:

    கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 23-ந் தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் மீண்டும் பருவமழை பெய்து வருவதால் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து மேட்டூரில் இருந்து 1 லட்சத்து 14 ஆயிரம் கன அடி தண்ணீர் பாசனத்துக்காக திறந்துவிடப்படுகிறது.

    இந்த தண்ணீர் நேற்று முன்தினம் திருச்சி முக்கொம்பை வந்தடைந்தது. முக்கொம்பில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடத்துக்கு அதிகளவில் தண்ணீர் விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி 47 ஆயிரத்து 56 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கல்லணையில் இருந்து காவிரியில் 9523 கன அடியும், வெண்ணாறில் 9526 கன அடியும் கல்லணை கல்வாயில் 3004 கன அடியும், கொள்ளிடத்தில் 25 ஆயிரத்து 3 கன அடியும் திறந்துவிடப்படுகிறது.

    இதனால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் இன்னும் ஒரு வாரத்துக்கு ஆற்றை கடக்கக கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோர மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டு சென்றாலும் கடைமடை பகுதிகளுக்கு இதுவரையிலும் தண்ணீர் செல்லவில்லை என்று டெல்டா விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், திருவாரூரில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பேரளம், மற்றும் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, திருமருகல் ஒன்றியங்களில் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. கொள்ளிடத்தில் இருந்து தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    மேட்டூர் அணை திறக்கப்பட்டு 22 நாட்களாகியும் இதுவரை கடைமடை தண்ணீர் செல்லாததற்கு வாய்க்கால், ஏரி, குளங்களை பொதுப்பணித்துறையினர் தூர்வாராததே காரணம் என்று விவசாயிகள் குமுறி வருகின்றனர்.

    இதுகுறித்து தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-

    தஞ்சை மாவட்டம் செங்கிப் பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசனம் அளிக்கும் மேற்கு கட்டளை கால்வாய் மற்றும் காவன் ஏரி, ஏலா ஏரி, புதுக்குடி ஏரி, புது ஏரி உள்ளிட்ட ஏரிகளை பார்வையிட்டேன். காவிரியில் தண்ணீர் கரைபுரண்டோடும் நிலையில் மாயனூர் அணையில் இருந்து பிரியும் மேற்கு கட்டளை கால்வாய் மற்றும் அதன்மூலம் பாசனம் பெறும் 50-க்கும் மேற்பட்ட ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. சுமார் 1 லட்சம் ஏக்கர் பாசன பகுதி பாலைவனமாக உள்ளது. நிலத்தடி நீர் வற்றி விட்டது.

    எனவே ஏரிகளை நிரப்பு வதற்கும் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் வருவாய்த்துறை, பொது பணித்துறை, விவசாயிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் காவிரி டெல்டா ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×