search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளம்- 28 வீடுகளில் தண்ணீர் புகுந்தது
    X

    கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளம்- 28 வீடுகளில் தண்ணீர் புகுந்தது

    கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் 28 வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
    ஈரோடு:

    காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

    இன்று மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும், பவானிசாகர் அணையிலிருந்து ஆற்றுக்கு திறக்கப்பட்ட தண்ணீரும் சேர்த்து 2.15 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் காவிரி கரையோரம் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.கருங்கல்பாளையம் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள சுமார் 28 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    அந்த வீடுகளில் இருந்தவர்கள் தங்கள் பொருட்களை பரிசல் மூலம் வெளியே கொண்டு வந்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

    மேலும் ஆற்றின் கரையில் இருந்த கோவில் வெள்ளத்தில் மூழ்கியது. சுமார் 500-க் கும் மேற்பட்டோர் 2 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு தேவையான உணவு, உடை, பிற வசதிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் துறை, ஊராட்சி துறை ஊழியர்கள் செய்து வருகின்றனர். பள்ளி பாளையத்தில் இருந்து கொக்கரையான் பேட்டை செல்லும் பாலத்தை தொட்டப்படி தண்ணீர் செல்கிறது.

    ஈரோடு காவிரி ஆற்று பாலத்தில் அதிகளவில் வெள்ளம் ஓடுவதால் ஆற்று பாலத்தை கடக்கும் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன.

    வெள்ள நீரை பார்ப்பதற்காக இன்றும் மக்கள் அதிக அளவு கூடி இருந்தனர். கருங்கல்பாளையம் காவிரி பழைய ஆற்று பாலத்தை தொட்டபடி தண்ணீர் செல்வதால் 3-வது நாளாக இன்றும் அந்த வழியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் புதிய பாலத்தின் வழியாக போக்குவரத்து நடைபெறுகிறது. பொது மக்களில் சிலர் வெள்ளத்தை காணும் ஆர்வத்தில் புதிய பாலத்தில் நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    தீயணைப்பு வாகனம், ஆம்புலன்சும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. அவர்களுடன் போலீசார் தொடர்ந்து 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    2004-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் காவிரி பழைய ஆற்றுப்பாலத்தை தொட்டபடி வெள்ளம் ஓடுகிறது.

    வெண்டிபாளையம் பகுதியிலும் காவிரி வெள்ளத்தை பார்ப்பதற்காக மக்கள் அதிக அளவில் கூடியுள்ளனர். ஆனால் பாலத்துக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. #tamilnews
    Next Story
    ×