search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் பழங்கால நாணய கண்காட்சி தொடக்கம்
    X

    கோவையில் பழங்கால நாணய கண்காட்சி தொடக்கம்

    கோவையில் பழங்கால நாணய கண்காட்சி தொடங்கி உள்ளது. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
    கோவை:

    கோவை நாணய சங்கம் சார்பில், நாணய கண்காட்சி காந்திபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தொடங்கியது. இதை சங்க தலைவர் ஜம்புகுமார் ஜெயின் தொடங்கி வைத்தார்.

    கண்காட்சியில் கோவை மட்டுமின்றி சென்னை, ஆமதாபாத், டெல்லி, டேராடூன், கொல்கத்தா, நாக்பூர், மும்பை, பெங்களூரு, கொச்சி, பாலக்காடு, புதுச்சேரி மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் சேகரித்து வைத்த பழங்கால நாணயங்கள், தபால் தலைகள், பழங்கால பொருட்கள், மன்னர் கால தங்க நாணயங்கள் உள்பட பல்வேறு அரிதான பொருட்களை பார்வைக்கு வைத்து உள்ளனர்.

    இங்கு 1863-ம் ஆண்டு ஆங்கிலேயர் கால 5 ரூபாய் நோட்டு, 1915-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நோட்டு, 1928-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் இருந்து அச்சடிக்கப்பட்ட 10 ரூபாய் நோட்டு, ராஜராஜசோழன் காலத்தில் புழக்கத்தில் இருந்த நாணயங்கள், தென் ஆப்பிரிக்கா, இலங்கை நாடுகளில் பயன்படுத்திய பழங்கால ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் இடம்பெற்று உள்ளன.

    1939-1945-ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட 6-ம் ஜார்ஜ் மன்னரின் தபால் தலை, இங்கிலாந்து இளவரசி மறைந்த டயானாவின் தபால் தலை, 1993-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மலை ரெயில் தபால் தலை உள்பட பழங்கால தபால் தலைகள், தபால் கார்டுகள், பழங்கால விளக்குகள், பழங்கால விளையாட்டு பொருட்கள், கேமராக்கள், சிலைகள் உள்பட பல்வேறு பழங்கால பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர். சிலர் தங்களுக்கு பிடித்தமான நாணயம், ரூபாய் நோட்டுகள், தபால் தலைகள் ஆகியவற்றை வாங்கி செல்கின்றனர்.

    இது குறித்து நாணய சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    நாணய கண்காட்சியை தொடர்ந்து 31-வது ஆண்டாக நடத்தி வருகிறோம். இதில் 1863-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 5 ரூபாய் நோட்டின் இன்றைய மதிப்பு பல லட்சம் ரூபாய் ஆகும். 1970-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 5 பைசா அலுமினிய நாணயத்தின் தற்போதைய மதிப்பு ரூ.50 முதல் ரூ.80 வரை இருக்கும்.

    மன்னர் மற்றும் ஆங்கிலேயர் கால ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் மட்டுமின்றி தற்போது வெளி யிடப்பட்ட 100 ரூபாய் நாணயமும் இடம்பெற்று உள்ளது. திப்புசுல்தான் காலத்தில் 1789-ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட 4 கிராம் தங்க நாணயம் இடம்பெற்று உள்ளது.

    ஆங்கிலேயர்கள் காலத்தில் வெளியிடப்பட்ட 100 தபால் தலைகள் ஒரே அட்டையில் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளன. இதுபோன்று ஒரே அட்டையில் 100 தபால் தலைகளை பார்ப்பது அரிதாகும். தபால் தலைகள், ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் எவ்வளவு பழமையானதாக உள்ளனவோ அந்த அளவுக்கு அதற்கு அதிக மதிப்பு கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    முதல் நாளான நேற்று ஏராளமான பொதுமக்கள் வந்து பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தபால் தலைகளை வியப்புடன் பார்த்து சென்றனர். நாணய கண்காட்சி நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறை வடைகிறது. 
    Next Story
    ×