search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயார் - திருநாவுக்கரசர்
    X

    காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயார் - திருநாவுக்கரசர்

    பொய்யான தகவல் பரப்புவதற்கு பதில் கட்சி கேட்டுக் கொண்டால் நானே தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் என்று மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் திருநாவுக்கரசர் ஆவேசமாக கூறியுள்ளார். #Thirunavukkarasar
    சென்னை:

    காங்கிரஸ் என்றாலே அடி-தடி, ரகளை, சட்டை கிழிப்பு சகஜம்தான். சமீப காலமாக ஓய்ந்திருந்த அந்த கலாசாரம் சத்திய மூர்த்திபவனில் நேற்று மீண்டும் அரங்கேற்றப்பட்டது.

    தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சய்தத், மற்றும் அகில இந்திய செயலாளர் சின்னாரெட்டி ஆகியோர் நேற்று சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர்.

    கட்சியை வலுப்படுத்துவதற்காக மாவட்ட தலைவர்கள், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை வழங்குவதாக இருந்தது. முதல் நாளான நேற்று மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடந்தது. முதல்நாள் கூட்டமே அடி-தடியில் தொடங்கியது கட்சி தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    மேலிட பிரதிநிதிகளிடம், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு ஆகியோர் முன்னிலையில் திருநாவுக்கரசர் தனது உள்ளக்குமுறலை கொட்டி தீர்த்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

     
    கட்சியில் எனக்கு எதிராக சிலர் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

    இப்போதும் மேலிட தலைவர்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளத்தான் வந்திருக்கிறார்கள். ஆனால் என்மீது புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதை விசாரிப்பதற்காகவும் தான் வந்திருக்கிறார்கள் என்று தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

    எனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. கட்சி மேலிடம் எனக்கு தலைவர் பதவியை தந்துள்ளது. அவர்கள் சொல்லும் பணியை நான் செய்து வருகிறேன்.

    ஆனால் கட்சியில் சில தலைவர்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு தருவதில்லை. என்னை மாற்றப் போவதாகவும் தகவல் பரப்புகிறார்கள். கட்சி கேட்டுக் கொண்டால் நானே தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாராகத்தான் இருக்கிறேன்.

    நாளையே நான் மாற்றப்படலாம். வேறு ஒருவர் தலைவராக வரலாம். அப்போது நானும் எனது ஆதரவாளர்களும் புதிய தலைமைக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் நிலைமை என்னவாகும்?

    எனக்கும் கோஷ்டி அரசியல் செய்ய தெரியும். ஆனால் நான் அவ்வாறு செய்வதில்லை.

    நான் தி.மு.க. கூட்டணியை விரும்பவில்லை என்றும், ரஜினி மற்றும் அ.தி.மு.க.வுடன் பேசி வருவதாகவும் தகவல் பரப்புகிறார்கள். தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம் என நான் எப்போதுமே கூறியதில்லை. அப்படி நினைப்பதற்கு நான் என்ன முட்டாளா?

    ஸ்டாலின் தலைவரான பிறகும், வாழ்த்து சொன்னேன். பொதுக் கூட்டத்தில் அவர்தான் முதல்-அமைச்சர் என்றும் பேசினேன். இதைவிட நான் வேறு என்ன செய்யமுடியும்?

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று நான் பேசித்தான் ஆக வேண்டும். அதில் என்ன தவறு இருக்கிறது.

    நான் எதையும் கண்டுகொள்ளாமல் செல்கிறேன். ராகுலை பிரதமர் ஆக்குவதே நமது கடமை. காமராஜர் ஆட்சி பற்றி பேசினால் கூட்டணி பறிபோய்விடும் என்கிறார்கள். அதையெல்லாம் ராகுல் பார்த்து கொள்வார். தேர்தல் நேரத்தில் அது நடக்கும்.

    நான் முதல்வர் ஆக வெல்லாம் விரும்பவில்லை. என்னை மக்கள் முதல்வர் ஆக்கினாலும் நீங்கள் விட மாட்டீர்கள். தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. கனவில்கூட அப்படி நினைக்கமாட்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கிடையில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் கூறும்போது,

    ‘‘பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால், காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை. எனவே கட்சிக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்’’.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சஞ்சய்தத் இன்று காங்கிரசின் பல்வேறு அணி தலைவர்களை சந்திப்பதாக இருந்தது. அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருநாவுக்கரசர் டெல்லி சென்றுவிட்டதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். #Congress #Thirunavukkarasar
    Next Story
    ×