search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.1300 கோடி அனுமதி
    X

    தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.1300 கோடி அனுமதி

    தமிழகத்தில் நகரம் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய அரசு ரூ.1300 கோடி வழங்குகிறது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு 2 வருடமாக முறையாக வழங்கக்கூடிய நிதியினை வழங்கவில்லை.

    2017-18 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளுக்கு வழங்க வேண்டிய நிதி கிடைக்காததால் உள்ளாட்சி துறை மூலம் நடைபெற வேண்டிய பணிகள் தேக்கம் அடைந்துள்ளன. நகர்ப்புற மற்றும் கிராமப்புற வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு மத்திய அரசு ரூ.3558 கோடி வழங்கி வந்தது.

    மத்திய அரசு வழங்கும் இந்த நிதி மானியத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் அடிப்படையான பணிகள் செயல்படுத்தப்படும்.

    இந்த நிதியினை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து கடந்த மாதம் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டெல்லி சென்று நிதி மந்திரி அருண் ஜெட்லி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி நரேந்திரசிங் ஆகியோரை சந்தித்து பேசினார்.


    14-வது நிதி கமி‌ஷன் பரிந்துரைப்படி வழங்க வேண்டிய ரூ.3,558 கோடி நிதியை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும், பிரதம மந்திரி நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    அதன் அடிப்படையில் நகர உள்ளாட்சி பகுதிகளுக்கு ரூ.631.98 கோடியும், கிராம உள்ளாட்சி பகுதிகளுக்கு ரூ.758.06 கோடியும் நிதி வழங்க மத்திய நிதி அமைச்சகம் ஒத்துக்கொண்டது.

    அதனைத் தொடர்ந்து தற்போது மத்திய அரசு ரூ.1300 கோடி நிதியினை தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க முன்வந்தது. விரைவில் அந்த நிதி விடுவிக்கப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க இருக்கிறது.

    2017-18ம் வருடம் வழங்க கூடிய 2 தவணையை இப்போது மத்திய அரசு தருகிறது. இதுநாள் வரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த நிதியினை மத்திய இணை மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோரின் கோரிக்கையினை ஏற்று நிதி விடுவிக்கப்படுகிறது.

    இதுகுறித்து மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தமிழக அரசின் கோரிக்கையை பிரதமர் மோடி உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியினை வழங்க நடவடிக்கை எடுத்தார்.

    அதன் அடிப்படையில் ரூ.1390 கோடி தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் கிடைக்க இருக்கிறது. இதற்காக பிரதமருக்கும், நிதி மந்திரிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

    2018-19 நடப்பு ஆண்டின் முதல் தவணை தொகையான ரூ.1608 கோடியை இன்னும் மத்திய அரசு வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது.

    கடந்த ஆண்டு வழங்க வேண்டிய நிதியைதான் தற்போது வழங்குகிறார்கள். நடப்பு நிதி ஆண்டில் முதல் தவணையாக வழங்க வேண்டிய நிதியை தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்காமல் வைத்துள்ளது.

    இந்த நிதியாண்டில் 6 மாதம் கடந்துவிட்டது. ஆனாலும் இன்னும் நிதிவிடுவிக்கப்படவில்லை. முதல் தவணை நிதியினை உடனே விடுவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தமிழக நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×