search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை விரைவாக முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு
    X

    சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை விரைவாக முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு

    சென்னையில் விடுப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே போர்க்கால அடிப்படையில் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் விடுபட்ட மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு துணை ஆணையாளர் (பணிகள்) எம்.கோவிந்தராவ், தலைமை தாங்கினார். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

    சென்னை பெருநகர மேம்பாட்டு திட்ட நிதி 2018-ன் கீழ் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக ரூ.290 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர் முழுவதும் சுமார் 117 கி.மீ. நீளத்திற்கு விடுபட்ட மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது.

    இந்த பணிகள் குறித்து அந்தந்த பகுதி உதவி செயற் பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி கோட்டப் பொறியாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மழைநீர் வடிகால் பணிகளின் போது, தோண்டி எடுக்கப்படும் தூர் மற்றும் மண்ணை ஒப்பந்தப்பணி நிறுவனம் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். கழிவுநீர் இணைப்பு மழைநீர் வடிகாலில் கொடுத்திருந்தால், அதை துண்டித்து குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய கழிவுநீர் குழாயுடன் இணைக்க வேண்டும்.

    பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் நுழையாதவாறு தகுந்த இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும். ஒப்பந்த நடைமுறைகளை பின்பற்றாத ஒப்பந்ததாரர்களுக்கு தாக்கீது வழங்கி பணிகள் நிறுத்தப்படும்.

    இந்த பணிகள் நடைபெறுவதை 15 மண்டலங்களிலும் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் கண்காணிப்பு உயர் அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள்.

    பணிகள் முழுவதும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே போர்க்கால அடிப்படையில் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

    கூட்டத்தில், முதன்மை தலைமைப் பொறியாளர் எம்.புகழேந்தி, மேற்பார்வை பொறியாளர் எல்.நந்தகுமார், ஒப்பந்ததாரர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×