search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர்கள் மீண்டும் புரட்சி செய்ய வேண்டும்- கமல்ஹாசன்
    X

    மாணவர்கள் மீண்டும் புரட்சி செய்ய வேண்டும்- கமல்ஹாசன்

    ஜல்லிக்கட்டுக்காக எழுந்தது போல் மாணவர்கள் மீண்டும் புரட்சி செய்ய வேண்டும் என்று தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் பெண்கள் பாதுகாப்புக்காக ரவுத்திரம் என்ற மொபைல் செயலி தொடக்க விழா தாம்பரத்தில் உள்ள கல்லூரியில் நடந்தது.

    செயலியை தொடங்கி வைத்து கமல்ஹாசன் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.

    ‘மாணவர்களின் கைகளில் தான் எதிர்காலம் இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்காக எழுந்தது போல் மாணவர்கள் மீண்டும் புரட்சி செய்ய வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களின் பாதுகாப்புக்காகவே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது’.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்விகளும் கமல் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தோல்விகளை வெற்றியாக மாற்றுவது எப்படி?

    பதில்:- தோல்விகள் தான் நம்மை வெற்றியை நோக்கி கூட்டிசெல்லும். தோல்வியை பார்த்து யாரும் தயங்கவேண்டாம். எல்லா தோல்விகளிலும் உங்களுக்கு சில படிப்பினைகள் கிடைக்கும். தோல்விப்படிகளை தொடும் போது வெற்றிப்படி கண்ணில் பட்டுவிடும். எதை செய்யக்கூடாது என்பதை தெரிந்துகொண்டால் எதை செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்ய முடியும்.

    கேள்வி :- குற்றசாட்டுகள் கூறும்போது ஆதாரம் கேட்டால் என்ன செய்வது?

    பதில்:- ஆதாரம் இல்லாத சமயங்களில் குரல் எழுப்பலாம். யாராவது பார்த்திருப்பார்களா? அவர்களுக்கு சாட்சி சொல்வார்களா? என்று பார்க்கலாம். ஆதாரம் இல்லாமல் பொய் குற்றசாட்டு சொல்பவர்களும் இருக்கிறார்கள். கண்ணகி, நீலி இருவருமே இருந்த ஊர் தான் இது. இந்த சிக்கல் இருக்கத்தான் செய்யும்.

    கேள்வி:- பெண்களுக்கு பாலியல் குற்றங்களை தெரிவிப்பதில் தயக்கம் இருக்கிறதா? புகார் சொன்னால் எதிராகவே திரும்புகிறதே?

    பதில்:- தாழ்ந்தவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். உயர்ந்தவர்கள் அப்படி பேசமாட்டார்கள். இந்த சோகம் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் பொருந்தும். இந்த அவமானங்களை தாண்டி வந்துதான் நாம் நமது தரப்பு நியாயங்களை முன் வைக்கவேண்டும்.

    கே :- நீங்கள் சந்தித்த தைரியமான பெண்மணி யார்?

    ப:- என் அம்மா. அவருக்கு இணையான துணிச்சலான பெண்ணை சந்திக்க காத்திருக்கிறேன். என் அக்கா ஓரளவுக்கு தைரியமானவர்.



    கே:- பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படவில்லையே?


    ப:- நிறைவேற்றப்படாத பல வி‌ஷயங்களில் இதுவும் ஒன்று. உங்கள் பங்களிப்பு அதிகமானால் இது சரியாகும். எத்தனை சதவீதம் என்று இல்லை. எத்தனை சதவிதமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எங்கள் கட்சிக்கு உண்டு.

    கே:- பெண்கள் அதிகாரத்துக்கு வந்தால் பெண் முன்னேற்றம் நடக்கும் என்பது சாத்தியமா?

    ப :- இந்திரா காந்தி உள்பட பலர் அதிகாரத்துக்கு வந்து இருக்கிறார்கள். பெண்கள் அதிகாரத்திற்கு வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. நாம் தான் மாற வேண்டும்.

    கே:- பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்க காரணம்?

    ப :- ஆண்கள் என்று ஒரே வார்த்தையில் சொல்லலாம். ஆனால் வீட்டில் இருக்கும் பெரியவர்களும் காரணம். அவர்கள் வளர்க்கும் முறையில் தான் இருக்கிறது.

    கே :- இந்திய அரசியலில் பெண்களின் முக்கியத்துவம் அதிகரித்து இருக்கிறதா?

    ப:- ஆமாம். அதை இன்னும் அதிகரிக்க தான் உங்களைதேடி வந்துள்ளேன். மாணவர்களை தேடி நான் செல்வதை சிலர் கிண்டல் செய்கிறார்கள். ஆனால் மாணவர்கள் தான் அரசியலின் அடித்தளம். அரசியல் தான் உங்கள் வாழ்க்கையை மாற்றும்.

    கே:- விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?

    ப :- என் மீதான விமர்சனம் தான் என்னை மக்களிடம் கொண்டு செல்கிறது. நல்ல விமர்சனங்கள் தான் என் வளர்ச்சிக்கான அங்கீகாரம்.

    கே:- படித்த பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. கிராமங்களில் வசிக்கும் படிக்காத பெண்களின் நிலை?


    ப:- பாலியல் புகார்கள் அதிக அளவில் நகர்ப்புறங்களில் இருந்துதான் வருகிறது. ஆனால் கிராமங்களில் பெண்கள் இன்னும் தைரியமானவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் இப்படி தவறாக நடந்து கொள்ள முடியாது. உடனே தண்டனை தான்.

    கே:- குடும்பங்களில் ஆண்கள், பெண்கள் எப்படி வளர்க்கப்பட வேண்டும்?

    ப:- முதலில் சமமான பாசத்துடன் வளர்க்க வேண்டும். சமமான உரிமைகள் தரவேண்டும். இரண்டுமே குழந்தைகள் தான். பண்புகளை சிறுவயதில் இருந்தே சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்.

    கே:- நடுத்தர வர்க்கத்தில் இருந்து ஒரு பெண் திரைத்துறைக்கு வந்து சாதிக்க முடியுமா?


    ப:- நடுத்தர வர்க்கம் என்ன ஏழ்மை நிலையிலிருந்து கூட வரலாம். வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு தர்மசங்கடம் ஏற்படும் என்பதால் பெயர்களை குறிப்பிட முடியவில்லை. இந்த தொழிலை நான் மதிக்கிறேன். இந்த தொழிலை தவறாக பயன்படுத்தியவர்கள் தான் தங்கள் பிள்ளைகளை கொண்டு வர தயங்குவார்கள். ஆனால் நான் அப்படி இல்லை. என் மகள்களையும் சினிமாவுக்குள் கொண்டு வந்து இருக்கிறேன்.

    கே:- பெண்களின் சமுதாய பங்களிப்பு எப்படி இருக்கிறது?

    ப:- ஜான்சி ராணி முதல் மம்தா பானர்ஜி வரை சொல்லலாம். சங்க காலம் முதலே பெண்களுக்கு சமமான முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.

    கே :- பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் தண்டனை கடுமையாக்கப்படவேண்டும் என்பதில் உங்கள் கருத்து என்ன?

    ப:- வந்து கொண்டே இருக்கிறது. அந்த வேகம் போதவில்லை என்பது உண்மை. நம் காலத்திலேயே அதை பார்த்துவிடுவோம்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

    இதைத் தொடர்ந்து ‘ எந்த அரசு உத்தரவு வந்தாலும் இந்த சந்திப்புகள் தொடர்ந்து நடக்கும். நாம் சந்திப்பதை யாராவது தடுத்தால் கல்லூரிக்கு வெளியில் உங்களை சந்திப்பேன்.

    தமிழகத்தை மாற்றும் பொறுப்பு மாணவர்களிடம் இருக்கிறது. இந்த கல்லூரியில் தான் முதன்முதலில் அரசியல்வாதி என்று கையெழுத்து இட்டேன். நான் உங்களிடம் ஓட்டு கேட்டு வரவில்லை. மாற்றத்தை முன்னெடுக்க உங்களையும் என்னுடன் அழைக்கிறேன்’

    இவ்வாறு கமல் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    Next Story
    ×