search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்
    X

    தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

    தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் 4 நாட்களுக்கு வெளியூர் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நவம்பர் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை 3 நாட்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பஸ்கள் அதிகமாக இயக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் கீழ்கண்ட இடங்களில் பஸ்களை நிறுத்தி சென்னை நகருக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வண்டலூர் மேம்பாலம், இரும்புலியூர், மதுரவாயல் சுங்கச்சாவடி, கார்த்திகேயன் நகர், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம், நெற்குன்றம், பூந்தமல்லி பைபாஸ் சாலை, மதுரவாயல் மேம்பாலம், வானகரம் ஏசு அழைக்கிறார் வளாகம், கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு மலர் வணிக வளாகம், கோயம்பேடு போலீஸ் நிலையம் அருகில் ஆகிய இடங்களில் அரசு பஸ்களை நிறுத்திவைத்து, அங்கிருந்து கோயம்பேடு பஸ் பணிமனைக்கு உள்ளே அனுமதிக்கப்படும்.

    ஆம்னி பஸ்கள், கோயம்பேடு மார்க்கெட் ‘இ’ சாலையில் உள்ள நிறுத்தத்தில் இருந்து ‘பி’ சாலை வழியாக பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று அங்கிருந்து வெளிவட்ட சாலை (நசரத்பேட்டை) வழியாக ஊரப்பாக்கம் செல்லலாம். அங்கிருந்து செல்ல வேண்டிய ஊர்களுக்கு புறப்படலாம்.

    ஆம்னி பஸ்கள் மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் 100 அடி சாலையில் வடபழனி நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நவம்பர் 3, 4, 5 மற்றும் 7-ந் தேதிகளில் மதியம் 2 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மார்க்கங்களில் இருந்து சென்னை வரும் கனரக வாகனங்கள் தடை செய்யப்படுகிறது.

    செங்கல்பட்டு மார்க்கமாக வரும் வாகனங்கள் வண்டலூர் பாலம், சென்னை வெளிவட்ட சாலை வழியாக நெமிலிச்சேரி, சி.டி.எச்.சாலையை அடையலாம். அங்கிருந்து பாடி மேம்பாலம் வழியாக ஜி.என்.டி. சாலை, மாதவரம் ரவுண்டானாவை அடையலாம்.

    திருவள்ளூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மார்க்கமாக வரும் வாகனங்கள் நசரத்பேட்டை இடதுபுறம் திரும்பி வெளிவட்ட சாலை வழியாக சென்னை செல்லவும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    100 அடி சாலை, பாடி வழியாக கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பாடி மேம்பால சந்திப்பில் சி.டி.எச். சாலை வழியாக திரும்பி செல்லவேண்டும்.

    பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் நடுவாங்கரை சந்திப்பு மற்றும் நெல்சன்மாணிக்கம் சாலை மேம்பாலம் வழியாக அண்ணாநகர் 3-வது அவென்யூ, சாந்தி காலனி, அம்பத்தூர் எஸ்டேட் சாலை, மாந்தோப்பு வழியாக மாற்று பாதையில் செல்லவேண்டும்.

    கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள தனியார் வாகனங்கள் ஈ.வெ.ரா. சாலையில் மதுரவாயல் நோக்கி செல்பவர்கள் நடுவாங்கரை சந்திப்பு, சாந்தி காலனி, 13-வது மெயின்ரோடு, 2-வது அவென்யூ சாலை, எஸ்டேட் ரோடு, மாந்தோப்பு, வானகரம் வழியாக மாற்று பாதையில் செல்ல வேண்டும்.

    வடபழனி நோக்கி செல்லும் தனியார் வாகனங்கள் என்.எஸ்.கே.நகர் சந்திப்பு, ரசாக் கார்டன், எம்.எம்.டி.எ. காலனி, வினாயகபுரம் வழியாக செல்லவேண்டும்.

    தாம்பரம் - பெருங்களத்தூர் இடையே போக்குவரத்து நெரிசல் இயல்பாக உள்ளதால் தென் மாவட்டங்களுக்கு செல்ல நினைக்கும் தனியார் வாகன ஓட்டுனர்கள் இ.சி.ஆர். மற்றும் ஓ.எம்.ஆர். சாலை வழியாக செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வழியாக செல்ல வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×