search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    அமைச்சர்கள் ரூ.3 கோடி ‘டீ’ செலவு செய்துள்ளனர்- பாரதீய ஜனதா குற்றச்சாட்டு
    X

    அமைச்சர்கள் ரூ.3 கோடி ‘டீ’ செலவு செய்துள்ளனர்- பாரதீய ஜனதா குற்றச்சாட்டு

    புதுவை அமைச்சர்கள் ரூ.3 கோடி ‘டீ’ செலவு செய்துள்ளனர் என்று பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் குற்றம் சாட்டியுள்ளார். #bjp

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது முதல் நிதி நெருக்கடி என்ற காரணத்தை கடந்த 2½ ஆண்டாக கூறி வருகின்றனர். இதனால் ஏழைகளுக்கு வழங்க வேண்டிய இலவச அரிசியைக்கூட வழங்கவில்லை. அதுமட்டுமின்றி புதிதாக ஒரே ஒரு முதியோருக்குகூட பென்‌ஷன் வழங்கவில்லை.

    சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் சபாநாயகர் சைக்கிளில் வருகிறார். 2½ ஆண்டில் 20 நாட்கள் தான் சட்டசபை நடந்துள்ளது. எப்போது சட்டசபைக்கு சென்றாலும் அமைச்சர்களின் அலுவலகங்கள் காலியாகவே உள்ளது.

    இப்படியிருக்க 2 ஆண்டில் மட்டும் டீ, காபி, சிற்றுண்டி, டெலிபோன் ஆகியவற்றுக்கு அமைச்சர்கள் ரூ.3 கோடியே 15 லட்சம் செலவு செய்துள்ளனர். இதுதான் அமைச்சர்களின் சிக்கனமா? இதுவும் உண்மையான செலவுக்கான கணக்குகள் தானா? என்பதில் சந்தேகம் உள்ளது.

    எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் ரூ.48 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. அதில் ரூ.20 ஆயிரம் டீசலுக்காக கொடுக்கின்றனர். ஆனால் அமைச்சரும், எம்.எல்.ஏ.க்களும் டீசலுக்காக தனியாக செலவு செய்து பில் கொடுக்கின்றனர். தொழில்துறை அமைச்சர் பிப்டிக்கில் பென்சில், பேனா உள்ளிட்ட ஸ்டே‌ஷனரி வாங்க ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவு செய்துள்ளார். வளமான புதுவையை வறுமையான புதுவையாக மாற்றியுள்ளனர்.

    சம்பளம் இல்லாமல் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.2 கோடிதான் தேவைப்படும். ஆனால் அமைச்சர்கள் டீ செலவுக்கு ரூ.3 கோடி செலவு செய்துள்ளனர். நிதி நெருக்கடியை காரணம் காட்டி பல ஆண்டுக்கு முன் நிறுத்தப்பட்ட லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர அமைச்சரவையில் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இதை பா.ஜனதா சார்பில் கடுமையாக எதிர்க்கிறோம்.

    லாட்டரியால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதை ஆய்வு செய்ய கவர்னரும் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. லாட்டரி ஆரம்பிப்பது தொடர்பாக மக்களிடம் கவர்னர் கருத்து கேட்க வேண்டும். நிதி நெருக்கடி என பொய் யான காரணத்தை கூறி வருகின்றனர்.

    தமிகத்தில் அரசே மணல் விற்பனை செய்யவுள்ளது. ஆனால் புதுவையில் மணல் விற்பனை உரிமையை தனியாருக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். இதனால் சிலருக்கு மட்டுமே லாபம் கிடைக்கும். தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் அரசே மணல் விற்பனையை செய்ய வேண்டும்.

    மணல் தட்டுப்பாடால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நகர அமைப்பு குழுமம் ஏழை மக்களுக்கு ஒரு விதமாகவும், பணக்காரர்களுக்கு ஒரு விதமாகவும் விதிமுறைகளை வகுக்கிறது.

    பாகூரில் விவசாய நிலத்தில் ஒரு மது பார் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் போலீஸ் பாதுகாப்புடன் விதி மீறி மது பார் நடந்து வருகிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவை நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஹைமாஸ் விளக்குகள் எங்கும் எரியவில்லை. இது தொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டால் நிதி இல்லை என்கின்றனர்.

    முதல்-அமைச்சர், அமைச்சர்களின் செலவினம் தொடர்பாக ஆதாரத்தோடு பிரதமர், உள்துறை அமைச்சரிடம் புகார் செய்யவுள்ளோம். மத்திய அரசு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் ஏம்பலம் செல்வம், பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×