search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக கூட்டணியில் தினகரனுக்கு இடம் இல்லை- காங்கிரஸ், கம்யூ கட்சிகள் உறுதி
    X

    திமுக கூட்டணியில் தினகரனுக்கு இடம் இல்லை- காங்கிரஸ், கம்யூ கட்சிகள் உறுதி

    திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இல்லை என்று காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TTVDinakaran #DMK #Congress #Communist
    சென்னை:

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.

    தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்த 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதனால் அந்த 18 தொகுதிகளுக்கும் ஏற்கனவே காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது.

    தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி தொடர்பான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த முறை ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோரும் அரசியலில் ஈடுபட்டு இருப்பதால் தேர்தலில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், வருகிற தேர்தல்களில் தி.மு.க.வுடனோ, பா.ஜனதாவுடனோ நாங்கள் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம், அது தற்கொலைக்கு சமமானது. அதே நேரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் அல்லது பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொல்ல முடியாது என தெரிவித்தார்.

    இதன்மூலம் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி சேரும் விருப்பத்தை தினகரன் வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சிகளும் அவரை ஏற்கவில்லை. தாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருப்பதாகவும், அதில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இல்லை என்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி தமிழக காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் கூறுகையில், தி.மு.க.வுடனான எங்கள் கூட்டணி மிகவும் பலமாக உள்ளது. இந்த கூட்டணியில் மற்ற கட்சிகள் சேர விரும்பினால் அதுபற்றிய இறுதி முடிவை காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் என்றார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “அ.தி.மு.க.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் எங்களைப் பொறுத்தவரை ஒன்றுதான். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். மக்கள் பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து போராடி வருகிறோம்.

    வருகிற தேர்தலில் பா.ஜனதா, அ.தி.மு.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து முடிவு எடுக்கக்கூடிய நிலை உருவாகும். தமிழகத்தில் தி.மு.க.வுக்கு முக்கியத்துவம் இருக்கும். புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் மக்கள் பிரச்சினையில் எந்தவிதமான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்று தெரியவில்லை. எனவே தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இல்லை” என்றார்.



    இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் கூறுகையில், “தினகரன், அ.தி.மு.க. தலைமை பதவிக்கான போட்டியில் மோதிக் கொண்டு இருக்கிறார். அதில் உடன்பாடு ஏற்பட்டு ஒருமித்த கருத்து உருவானால் அவர் அ.தி.மு.க.வில் சேர்ந்து விடுவார். நாங்கள் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கிறோம். எங்கள் கூட்டணிதான் வெற்றி பெறும்” என்றார். #TTVDinakaran #DMK #Congress #Communist
    Next Story
    ×