search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்தக்கூடாது?- ஐகோர்ட்டு கேள்வி
    X

    அரசு மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்தக்கூடாது?- ஐகோர்ட்டு கேள்வி

    தமிழ் வழியில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்தக்கூடாது? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. #MadrasHC
    சென்னை:

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ் வழி பள்ளிகளில் ஆங்கில பயிற்சி வகுப்புகளை அறிமுகம் செய்ய கோரியும், ஆங்கில மொழியில் மழலையர் வகுப்புகளை தமிழக அரசு தொடங்க கோரியும் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., அப்பாவு சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    தமிழகத்தில் 37 ஆயிரத்து 211 அரசு பள்ளிகளும், 12 ஆயிரத்து 419 தனியார் பள்ளிகளும், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளது. இந்த பள்ளிகளில் ஒரு கோடியே 25 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்காக ஆண்டுக்கு ரூ.27 ஆயிரம் கோடியை அரசு செலவு செய்கிறது.

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளி இறுதி வகுப்பை முடித்த பிறகு, ஆங்கில பேச்சு திறன் இல்லாத காரணத்தால், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேர முடியாத நிலையில் உள்ளனர். நல்ல வேலை வாய்ப்புகளையும் அவர்களால் பெற முடியவில்லை. எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ் வழி பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்தவும், எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி மழலையர் வகுப்புகள் தொடங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அப்பாவு தன் வழக்கில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் தமிழக அரசு விரிவான பதிலை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:-

    ‘தமிழ் வழியில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்தக்கூடாது? அந்த மாணவர்கள் பிளஸ் 2 முடித்த பிறகும் ஆங்கிலம் பேச முடியாமல் தவிக்கின்றனர்.

    கேரளா, ஆந்திர மாநிலங்களில் தாய் மொழியில் படிக்கும் மாணவர்கள், ஆங்கிலத்திலும் நன்றாக பேசுகின்றனர். போட்டித் தேர்வுகளில் வெற்றிப் பெறுகின்றனர். அந்த நிலை தமிழகத்தில் ஏன் இல்லை?

    இந்த வழக்கை தொடர்ந்தவர் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. என்பதால், இதை அரசியல் ரீதியாக தமிழக அரசு பார்க்கக்கூடாது.

    அண்மையில் சிவில் நீதிபதி தேர்வுக்கான நேர்முகத் தேர்வை நடத்தினோம். அப்போது, தமிழில் பதில் சொல்லட்டுமா? என்று பலர் கேட்டனர். இதற்கு காரணம் ஆங்கில புலமை இல்லாதது தான்’ என்றனர்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

    இந்த வழக்கை வருகிற டிசம்பர் 6-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம். தமிழக அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். #MadrasHC

    Next Story
    ×