search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி - தமிழகத்தில் 2 நாளில் மீண்டும் மழை எச்சரிக்கை
    X

    வங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி - தமிழகத்தில் 2 நாளில் மீண்டும் மழை எச்சரிக்கை

    தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வருகிற 19-ந்தேதி முதல் மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Storm #TN #Rain
    சென்னை:

    இந்திய தீப கற்பமானது தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை என இரு பருவ காலங்களை கொண்டது.

    தென்மேற்கு பருவமழை அரபிக்கடல் வழியாகவும், வடகிழக்கு பருவ மழை வங்கக்கடல் வழியாகவும் உருவாகிறது.

    தென்மேற்கு பருவ மழையை காட்டிலும் வடகிழக்கு பருவமழையால் தான் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். அக்டோபர் தொடங்கி டிசம்பர் முடிய வங்கக்கடலில் உருவாகும் புயல்கள், காற்றழுத்த தாழ்வு பகுதிகளால்தான் வட தமிழகத்தில் மழை பெய்யும்

    வங்கக்கடலில் பெரும்பாலும் மலாய் தீபகற்ப பகுதியில் இருந்து வரும் மேலடுக்கு சுழற்சியானது அந்தமான் கடலில் உருவாகும் மேலடுக்கு சுழற்சியுடன் இணையும்போது காற்றழுத்த தாழ்வு நிலைகளும் புயல்களும் உருவாகின்றன.

    அதுபோல கஜா புயலும் மலாய் தீபகற்பத்தில் இருந்து வந்த மேலடுக்கு சுழற்சியால் அந்தமான் கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியுடன் இணைந்து புயலாக மாறியது.

    கஜா புயல் கரையை கடந்து விட்ட நிலையில் அதே இடத்தில் நாளை மாலை புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மலாய் தீவு கற்பத்திலும் அதனையொட்டிய இந்திய பெருங்கடலிலும் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இது 19, 20-ந்தேதிகளில் தென்மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும். 21-ந்தேதி தெற்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொள்ளும் வாய்ப்பு உள்ளது.



    வருகிற 19-ந்தேதி முதல் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் பிறகு காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்வதைப் பொருத்து மழை தீவிரம் அடையும். 21-ந்தேதி கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் நாளையும், நாளை மறுநாளும் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிக்கும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #Storm #TN #Rain

    Next Story
    ×