search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை நகர பகுதியில் 90 சதவீதம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டது- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்
    X

    புதுக்கோட்டை நகர பகுதியில் 90 சதவீதம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டது- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரப்பகுதியில் 90 சதவீத புதிய மின் கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #GajaCyclone
    புதுக்கோட்டை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர்கள் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து மரங்களை அப்புறப்படுத்துதல், மின் கம்பங்களை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளையும் துரிதப்படுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் கந்தர்வக்கோட்டை பகுதிகளில் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், டாக்டர். சி.விஜயபாஸ்கர், பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் கொட்டும் மழையிலும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகே சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை அகற்றி ஜே.சி.பி. எந்திரங்களின் உதவியுடன் புதிய மின்கம்பங்களை நடும் பணிகளில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பணிகளில் எந்தவித தொய்வுமின்றி மிகவும் சிறப்பாக பணியாற்றிக்கொண்டிருந்தை பார்வையிட்ட அமைச்சர்கள், மின்வாரிய ஊழியர்களை பாராட்டினர்.

    அப்போது அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் உத்தரவின்படி அமைச்சர்கள் தொடர்ந்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இருந்தும் மின்வாரிய பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றது.

    துணை முதல்வர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர், அடப்பங்கரை சத்திரம், கந்தவர்வக்கோட்டை, பந்தக்கோட்டை, மருதன்கோன்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார்.

    தற்போதுகூட கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை பிரதான சாலையில் சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் கேரள மாநிலத்தில் இருந்து மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் மோசஸ்ராஜ்குமார் தலைமையில் 26 பேர் அடங்கிய குழுவினர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டுள்ளனர்.

    இதுபோன்று மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துப்பகுதிகளிலும் மின்கம்பங்கள் சீர்செய்து மின் விநியோகம் வழங்கும் பணியும், சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியும், பாதிக்கப்பட்ட பயிர்கள், வீடுகள் குறித்த சேத மதிப்பீடுகளை கணக்கெடுக்கும் பணியும், குடியிருப்புகளுக்கு சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்யும் பணியும், பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணியும் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரப்பகுதியில் 90 சதவீத புதிய மின் கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது. கிராமப்பகுதிகளில் சுமார் 45,000-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால், அவற்றை சீர்செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இன்னும் ஓரிரு தினங்களுக்குள் பெரும்பான்மையான பகுதிகளுக்கும் முழுமையாக மின் விநியோகம் செய்யும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ‌ஷம்பு கல்லோலிகர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். #GajaCyclone
    Next Story
    ×