search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டில் பதுங்கி இருந்த கருநாக பாம்பு.
    X
    வீட்டில் பதுங்கி இருந்த கருநாக பாம்பு.

    வீட்டுக்குள் புகுந்த கருநாகப் பாம்பை பிடிக்க முதல்-அமைச்சருக்கு டயல் செய்த இளைஞர்

    புதுவை அரியாங்குப்பம் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கருநாக பாம்பை பிடிக்க முதல்-அமைச்சர் நாராயணசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சம்பவம் நடந்துள்ளது. #Narayanasamy
    பாகூர்:

    அரியாங்குப்பம் அருகே உள்ள மணவெளியை சேர்ந்தவர் ராஜா. வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு வசந்த் (வயது 19) என்ற மகனும், சந்தியா (17) மகளும் உள்ளனர்.

    நேற்று இரவு ராஜா வெளியே சென்றிருந்தார். விஜயா தனது குழந்தைகளுடன் வீட்டில் படுத்திருந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டுக்குள் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது. எனவே விஜயா எழுந்து விளக்கை போட்டு பார்த்தார்.

    அப்போது அங்கே 5 அடி நீளம் கொண்ட கருப்பு நிற பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தாயும், குழந்தைகளும் தவித்தனர். அக்கம் பக்கத்தினரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை.

    இதனால் அவசர போலீஸ் 100 எண்ணுக்கு போன் செய்து உதவி கேட்டனர். அவர்கள் வனத்துறை போன் எண்ணை கொடுத்து அங்கு பேசும்படி கூறினார்கள். அதன்படி வனத்துறை அலுவலகத்துக்கு போன் செய்தனர். ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை. நீண்ட நேரம் முயற்சித்தும் எந்த பலனும் இல்லை.

    அந்த நேரத்தில் பாம்பு அவர்களை பார்த்து சீறிக் கொண்டிருந்தது. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவானது. அப்போது வசந்த் அவர்கள் வீட்டில் உள்ள ஒரு அரசு டைரியை எடுத்து அதில் உள்ள போன் நம்பரை தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம் என்று முடிவு செய்தார்.

    டைரியை திறந்தவுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் போன் எண் அதில் இருந்தது. உடனே நாராயணசாமிக்கு போன் செய்தார். இரவு தூக்கத்தில் இருந்த நாராயணசாமி போனை எடுத்து பேசினார். அப்போது வசந்த் எங்கள் வீட்டில் பாம்பு நுழைந்துவிட்டது. அதை பிடிப்பதற்கு போலீஸ் மற்றும் வனத்துறை உதவியை நாடினோம். யாரும் உதவ முன்வரவில்லை என்று கூறினார்.


    உடனே நாராயணசாமி யாரும் பயப்படாதீர்கள். பாம்பை பிடிக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினார். நாராயணசாமி வனத்துறை அதிகாரிகளுக்கு போன் செய்தார். உடனடியாக அங்கு ஆட்களை அனுப்பி பாம்பை பிடிக்க ஏற்பாடு செய்யும்படி கூறினார்.

    அதன்படி விடுமுறையில் இருந்த 2 ஊழியர்களை இரவோடு இரவாக எழுப்பி அங்கு அனுப்பி வைத்தனர். கோபி, தாமரைச்செல்வன் ஆகிய ஊழியர்கள் அந்த வீட்டுக்குள் சென்று பதுங்கி இருந்த பாம்பை பிடித்தனர். அது கருநாகப் பாம்பு ஆகும். கடுமையான வி‌ஷத்தன்மை கொண்டது. பாம்பு பிடிபட்ட பிறகு தான் அவர்கள் நிம்மதியாக தூங்கினார்கள்.

    இன்று காலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அந்த வீட்டுக்கு மீண்டும் போன் செய்து விசாரித்தார். அப்போது அந்த பகுதியில் இருக்கும் புதரால் அடிக்கடி பாம்பு நடமாட்டம் இருப்பதாக கூறினார்கள். அவற்றை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று நாராயணசாமி உறுதி அளித்தார்.

    அதன்பின்னர் நாராயணசாமி, தொகுதி எம்.எல்.ஏ. அனந்தராமனிடம் தகவல் தெரிவித்து நேரில் சென்று பார்த்து நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். இதனால் அனந்தராமன் இன்று காலை அங்கு சென்று அங்குள்ள புதர்களை பார்வையிட்டார். அவற்றை அகற்றுவதற்கு உரிய ஏற்பாடு செய்வதாக கூறினார்.  #Narayanasamy
    Next Story
    ×